2020 நவம்பர் 25, புதன்கிழமை

நாளை மறுதினம் ஆரம்பிக்கின்றது இலங்கை எதிர் சிம்பாப்வே தொடர்

Editorial   / 2020 ஜனவரி 17 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரானது, ஹராரேயில், இலங்கை நேரப்படி நாளை மறுதினம் பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ள முதலாவது டெஸ்டுடன் தொடங்குகின்றது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் ஆறாமிடத்திலுள்ள இலங்கையை, இரண்டு போட்டிகள் கொண்ட குறித்த டெஸ்ட் தொடரில் 11ஆம் இடத்திலுள்ள சிம்பாப்வே எதிர்கொள்ளவுள்ளது.

அந்தவகையில், சிம்பாப்வேக்கு சொந்த மண்ணாக இருக்கின்றபோதும் வெற்றிவாய்ப்புகளை உடைய அணியாக இலங்கையே காணப்படுகின்றது. ஏனெனில், ஏறத்தாழ ஓராண்டுக்குப் பின்னர் டெஸ்ட் போட்டியொன்றில் சிம்பாப்வே விளையாடப் போகின்றது.

புதிய அணித்தலைவர் ஷோன் வில்லியம்ஸின் கீழ் ஐந்து புதுமுகவீரர்களை சிம்பாப்வே குழாம் கொண்டிருந்தாலும், முன்னாள் அணித்தலைவர்களான சிகண்டர் ராசா, பிரண்டன் டெய்லர் மற்றும் கைல் ஜார்விஸ், கிரேய்க் எர்வின், டொனால்ட் ட்ரிபானோ ஆகியோர் குழாமுக்கு மீண்டும் திரும்பியுள்ளமை நிச்சயம் அவ்வணிக்கு உத்வேகத்தை அளிக்கலாம்.

அந்தவகையில், ஷோன் வில்லியம்ஸ், சிகண்டர் ராசா, பிரண்டன் டெய்லர், கிரேய்க் எர்வின், கைல் ஜார்விஸ் ஆகியோரின் பெறுபேறுகளிலேயே சிம்பாப்வே இலங்கைக்கு சவாலை வழங்குகின்றமை தங்கியிருக்கின்றது.

மறுபக்கமாக, பாகிஸ்தானிடம் இலங்கை தோல்வியடைந்திருந்தபோதும் அத்தொடரில் இலங்கையணியின் முன்னாள் தலைவர்கள் தினேஷ் சந்திமால், அஞ்சலோ மத்தியூஸ் மற்றும் நிரோஷன் டிக்வெல்ல, ஒஷாத பெர்ணான்டோ, தனஞ்சய டி சில்வா, லஹிரு குமாரவின் பெறுபேறுகள் இலங்கைக்கு நம்பிக்கையளித்திருந்தன.

அந்தவகையில், இவர்களுடன் குழாமுக்கு மீண்டும் திரும்பியுள்ள சுரங்க லக்மால், இலங்கைக்கு மேலும் அனுகூலத்தை வழங்குவதுடன், அணித்தலைவர் திமுத் கருணாரத்னவிடமிருந்தும் மேம்பட்ட பெறுபேறு கிடைக்கப் பெறும் பட்சத்தில் இலங்கைக்கு இத்தொடரில் வெற்றியைப் பெறுவது அதிகம் கடினமாக இருக்காது.

இதேவேளை, இலங்கையில் அழுத்தத்துக்குரியவர்களாகக் காணப்படும் குசல் மென்டிஸ், டில்ருவான் பெரேரா ஆகியோர் எதிர்காலக் குழாம்களில் தங்களது இடங்களை உறுதிப்படுத்துவதற்கு ஓட்டங்கள், விக்கெட்டுகளைப் பெறக்கூடிய சிறந்த தளமாக அவர்களுக்கு இத்தொடர் காணப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .