2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

யூரோவில் ஜேர்மனி, குரோஷியா, நெதர்லாந்து

Editorial   / 2019 நவம்பர் 17 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் யூரோ கிண்ணத் தொடருக்கு, ஜேர்மனி, குரோஷியா, நெதர்லாந்து, ஒஸ்திரியா ஆகியவை தகுதிபெற்றுள்ளன.

தம்நாட்டில் இன்று அதிகாலை நடைபெற்ற பெலாரஸுடனான குழு சி போட்டியொன்றில் 4-0 என்ற கோல் கணக்கில் வென்றதன் மூலமே யூரோ கிண்ணத் தொடருக்கு ஜேர்மனிய தகுதிபெற்றுள்ளது. ஜேர்மனி சார்பாக, டொனி க்றூஸ் இரண்டு கோல்களையும், மத்தியாஸ் ஜின்டர் மற்றும் லியோன் கொரெட்ஸ்கா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை, தம்நாட்டில் இன்று அதிகாலை நடைபெற்ற ஸ்லோவாக்கியாவுடனான குழு ஈ போட்டியொன்றில் 3-1 என்ற கோல் கணக்கில் வென்று குழுவில் முதலிடத்தை உறுதிப்படுத்திய நிலையிலேயே யூரோ கிண்ணப் போட்டிகளுக்கு குரோஷியா தகுதிபெற்றிருந்தது.

குரோஷியா சார்பாக, நிக்கொலா விளாசிச், ப்ரூனோ பெட்கோவிச், இவான் பெரிசிச் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்தனர். ஸ்லோவாக்கியா சார்பாகப் பெறப்பட்ட கோலை றொபேர்ட் பொஸெனிக் பெற்றிருந்தார்.

இந்நிலையில், வட அயர்லாந்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான குழு சி போட்டியொன்றை 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடித்துக் கொண்ட நெதர்லாந்து, யூரோ கிண்ணத் தொடருக்குத் தகுதிபெற்றுக் கொண்டது.

இதேவேளை, தம்நாட்டில் இன்று அதிகாலை நடைபெற்ற வட மசிடோனியாவுடனான குழு ஜி போட்டியொன்றை 2-1 என்ற கோல் கணக்கில் வென்ற ஒஸ்திரியா, தம் குழுவில் இரண்டாமிடத்தைப் பெற்று யூரோ கிண்ணத் தொடருக்குத் தகுதிபெற்றிருந்தது.

ஒஸ்திரியா சார்பாக, டேவிட் அலபா, ஸ்டெஃபான் லைனர் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். வட மசிடோனியா சார்பாகப் பெறப்பட்ட கோலை விளாட்கோ ஸ்டொஜனோவ்ஸ்கி பெற்றிருந்தார்.

இந்நிலையில், ஏற்கெனவே யூரோ கிண்ணத் தொடருக்குத் தகுதிபெற்ற பெல்ஜியம், ஏற்கெனவே யூரோ கிண்ணத் தொடருக்குத் தகுதிபெற்றுக் கொண்ட ரஷ்யாவின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான நேற்றிரவு நடைபெற்ற குழு ஐ போட்டியொன்றில் 4-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பெல்ஜியம் சார்பாக, ஈடின் ஹஸார்ட் இரண்டு கோல்களையும், தொர்கன் ஹஸார்ட் மற்றும் றொமேலு லுக்காக்கு ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை, இஸ்ரேல் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான குழு ஜி போட்டியொன்றை 2-1 என்ற கோல் கணக்கில் ஏற்கெனவே யூரோ கிண்ணத்துக்கு தகுதிபெற்றுக் கொண்ட போலந்து வென்றது. போலந்து சார்பாக, கிர்ஸேகொர்ஸ் கிரைசோவியாக், கிர்யிஸ்டொவ் பியட்டெக் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். இஸ்ரேல் சார்பாக, மொனேஸ் தாபர் ஒரு கோலைப் பெற்றிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .