2020 ஜூலை 11, சனிக்கிழமை

சேமிப்பின் முக்கியத்துவம்

Editorial   / 2018 டிசெம்பர் 05 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேமிப்பு என்பது, எதிர்காலத்தில் எமக்கு ஏற்படக்கூடிய ஒரு தேவைக்காகக் காலாகாலம் கிரமமாக ஒரு தொகைப் பணத்தை, எமது வருவாயிலிருந்து ஒதுக்கி வைத்தலே ஆகும்.  

எமது வருமானத்திலிருந்து செலவுகளை மேற்கொண்டதன் பின்னர், ஏதாவது பணம் எஞ்சியிருப்பின்  அதை  நாம் சேமிப்பாகக் கருதமுடியாது. ஏனெனில், சில மாதங்களில் எமது செலவுகள் வருமானத்தையும் பார்க்க அதிகரிக்கும் பொழுது, எம்மால் அம்மாதத்தில் எதையும் சேமிக்க முடியாமல் போகின்றது.

எனவே, நாம் எமது வருமானத்தில் முதலாவதாகச் சேமிக்கும் தொகையை ஒதுக்கி வைத்துவிட்டு, எஞ்சிய வருமானத்தில் எமது செலவுகளைக் கட்டுப்படுத்தல் அவசியமாகும்.  

இதனையே உலகளாவிய ரீதியில் மிகவும் பிரசித்தி பெற்ற முதலீட்டாளரும் பிரபல செல்வந்தருமான வரன் பஃவட் (Warren Buffet) பின்வரும் சூத்திரத்தின் மூலம் கூறுகின்றார்.  

வருமானம் - சேமிப்பு = செலவு.  இதன்மூலம் அவர் கூறுவது என்னவெனில், வருமானத்தில் முதலாவதாக, நாம் சேமிப்புக்கு ஒதுக்கிவைத்தத் தொகை போக, எஞ்சிய தொகையினுள்ளேதான்,  எங்களது அனைத்துச் செலவுகளையும் கட்டுப்படுத்துமாறு கூறுகின்றார்.  

நாம் எமது சேமிப்பை எதற்காக முதலீடாக மாற்றவேண்டும்?  

எம்மில் அநேகமானோர் எதிர்காலக் குறிக்கோளை இலக்கு வைத்து, சேமிப்​பை மேற்கொள்கிறோம். இங்கு சேமிக்கும் பணம் முழுவதும் சேமிப்புக் கணக்கில் மாத்திரம் வைப்பிலிடுவதன் மூலம், எமது எதிர்காலக் குறிக்கோளை அடையமுடியுமா எனும்  கேள்வி எழுகின்றது.   

தற்போது, அநேகமான வங்கிகள், சேமிப்பு வைப்புக்கு வருடாந்தம் மிகக் குறைவான வட்டியை வழங்குகின்றன. அதேசமயம் நாட்டில் நிலவும் பணவீக்கம் (வாழ்க்கைச்செலவு உயர்வு) சேமிப்புக்குக் கிடைக்கும் வட்டிக்கு ஒத்ததாகக் காணப்படுகின்றது.

வாழ்க்கைச் செலவு உயர்வு அல்லது பணவீக்கம் என்பது, பணத்தின் பெறுமதியை, குறிப்பிட்ட சதவிகிதத்தால் வீழ்ச்சியடையச் செய்கின்றது. எனவே, நாம் சேமிக்கும் பணத்தைக் கணக்குகளில் மாத்திரம் வைப்பதன் மூலம், எமது எதிர்காலக் குறிக்கோள்களை அடையமுடியாதுள்ளது. 

மெய்வட்டி = பெயரளவு

வட்டி - பணவீக்கம்; எனவே நாம் பணவீக்கத்திலும் பார்க்க, அதிக வருவாயை வழங்கக் கூடிய முதலீட்டுக் கருவிகளை அல்லது முதலீட்டு வாய்ப்புகளை அறிந்து அவற்றில் முதலீடு செய்வது அவசியமாகின்றது.  
அவ்வாறாயின் பணவீக்கத்தை விட, அதிக வருவாயை உழைக்கக் கூடிய முதலீட்டை எவ்வாறு மேற்கொள்ளலாம்?  

உலகலாவிய ரீதியில் மத்திய நீண்டகாலத்தில் பணவீக்கத்தை விட அதிக வருவாயைக் கொடுக்கக் கூடிய முதலீடுகளில் ஒன்றாக, பங்குச்சந்தை முதலீடு காணப்படுகின்றது.  

பங்குச்சந்தை என்றால் என்ன?  

பங்குச்சந்தை என்பது, கம்பனிகளால் மூலதனத்​தைத் திரட்டுவதற்காக, பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட பங்குகளை கைமாற்றம் செய்யும் சந்தையாகும். இங்கு, கம்பனியிடமிருந்து  ஓர் ஆரம்பப் பொது வழங்களில், பங்குகளைக் கொள்வனவு செய்த ஒரு  முதலீட்டாளர், அப்பங்குகளை விற்பனை செய்வதற்கான வாய்ப்புகளை வழங்கும் தளமாகவும், ஆரம்பப் பங்கு வழங்களில்,  பங்குகளைக் கொள்வனவு செய்ய முடியாமற் போன முதலீட்டாளர்களுக்கு, பங்குகளைக் கொள்வனவு செய்யும் தளமாகவும் காணப்படுகின்றது.  

பங்குச்சந்தை முதலீட்டின் மூலம் எனக்கு கிடைக்கும் அனுகூலங்கள் என்ன?  

பங்குலாபம் 

பங்குச்சந்தையில் ஒரு நிறுவனத்தின் பங்குகளைக் கொள்வனவு செய்யும்போது, நீங்கள் அக்கம்பனியின் உரித்துவத்தில் பங்காளியாகின்றீர்கள். இதன் காரணமாக, கம்பனி உழைக்கும் இலாபமானது, உங்களோடும் பகிர்ந்து கொள்ளப்படும். இவ்வாறு பங்குதாரர்களுடன் இலாபத்தைப் பகிர்வதற்காக கம்பனிகள் பங்குலாபத்தை வழங்குகின்றன.   

மூலதன இலாபம்  

இதற்கும் மேலாக, கம்பனிகளின் இலாபம் உழைக்கும் செயற்றிறன் அதிகரிக்கும் பொழுது, இக்கம்பனிகளின் பங்குகளுக்கான கேள்வி சந்தையில் உயர்வடைந்து, அப்பங்குகளின் விலையானது அதிகரிக்கும். இத்தருணத்தில் பங்குகளைக் கொள்வனவு செய்த முதலீட்டாளர்கள் அப்பங்கின் விலையானது, தான் கொள்வனவு செய்த அதிக விலையில், கொடுக்கல் - வாங்கல் செய்யப்படும்போது, அவர் அப்பங்குகளை விற்று, ஓர் இலாபத்தை அடைய முடியும். இதை, மூலதன இலாபம் எனக்குறிப்பிடலாம்.  

உரிமை வழங்கல்  

அத்துடன் கம்பனிகள் தமக்கு மேலதிக மூலதனம் தேவைப்படும் பொழுது, ஏற்​கெனவே, பங்குகளை வைத்துள்ள பங்குதாரருக்குச் சந்தை விலையிலும் பார்க்கக் குறைந்த விலையில், பங்குகளைக் கொள்வனவு செய்வதற்கான உரிமையை வழங்கலாம். இதை நாம் உரிமை வழங்கல் எனக்குறிப்பிடுவோம்.  

ஒதுக்கங்களை மூலதனமாக்கல்

அத்துடன், கம்பனிகள் காலாகாலம் தமது ஒதுக்கத்திலிருந்து, இலவசமாகவும் பங்குதாரர்களுக்குப் பங்குகளை வழங்கலாம். இ​ந்த ஒதுக்கங்களை மூலதனமாக்கல் எனக்குறிப்பிடுவோம்.   

பங்கு முதலீட்டில் இருந்து நாம் பங்குலாபம், மூலதனலாபம், உரிமை வழங்கல், ஒதுக்கங்களை மூலதனமாக்கல் போன்ற பல்வேறு அனுகூலங்களை பெற்றுக்கொள்ளலாம்.  

பங்குச்சந்தை முதலீட்டில் அவதானிக்க வேண்டிய விடயங்கள் என்ன?  

இடர்நேர்கை    

இடர்நேர்கை என்பது, பங்குச்சந்தையில், பங்குகளின் விலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வு காரணமாக, எமது எதிர்பார்ப்பில் மாற்றங்களாகும். இந்த இடர்நேர்கையானது, பங்குச்சந்தையுடன் ஒன்றிணைந்த ஒரு பண்பாகும். குறுகிய காலத்தில் இவ்வாறான ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டாலும், சிறந்து இயங்கும் கம்பனிகளில், முதலீடு செய்து அவற்றில் நீண்ட காலம் நிலைத்திருப்பதன் மூலம் இவ் இடர்நேர்கையை தவிர்க்கலாம்.  

அறிவு பூர்வமான முதலீடு    

நாம் ஏற்​கெனவே குறிப்பிட்டது போல, ஒரு கம்பனியில், பங்குகளைக் கொள்வனவு செய்யும்பொழுது, நாம் அக்கம்பனியின் பகுதியளவில் உரிமையாளராக மாறுகின்றோம். ஒரு கம்பனியின் உரிமையாளர் என்ற ரீதியில், அக்கம்பனியின் இலாபத்திலும் நட்டத்திலும் பங்கேற்கின்றார். எனவே, ஒரு கம்பனியின் பங்குகளில், முதலீடு செய்வதற்கு முன்னர், அக்கம்பனி ஈடுபட்டுள்ள வணிகத்தைப் பற்றியும் உழைக்கக் கூடிய இலாபத்தைப் பற்றியும் கருத்திற்கொள்வது அவசியம். இத்தகைய தகவல்களை, ஒரு பங்குத்தரகு நிறுவனங்களில் காணப்படும் ஆய்வுப்பிரிவில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.  

பன்முகப்படுத்தல்    

பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் பொழுது, நாம் அதில் பட்டியல்படுத்தப்பட்டுள்ள கம்பனியால் வழங்கப்பட்டுள்ள பங்குகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தாது, பலதுறைகளைச் சார்ந்த பல கம்பனிகளின் பங்குகளில் முதலீடு செய்வது சிறந்தது. (தற்போது பங்குச்சந்தையில் காணப்படும் 298 கம்பனிகள் 20 துறைகளாக வகுக்கப்பட்டுள்ளன). இ​தை, நாம் பன்முகப்படுத்தல் எனக்கூறுவோம். இதன் மூலம் பங்குச்சந்தையில் காணப்படும் இடர்நேர்கையை ஓரளவுக்குக் குறைக்க முடியும்.  

பங்குச்சந்தை முதலீடுகள் மத்திய நீண்டகால இலக்கை கொண்டதாக காணப்படவேண்டும்.  

பங்குச்சந்தையில் கைமாற்றம் செய்யப்படும் பங்குகளின் விலைகள், அவற்றுக்கான கேள்வி நிரம்பல் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன. ஒரு கம்பனியினது, இலாபம் அதிகரிக்கும்போது, அக்கம்பனியின் பங்களுக்கான கேள்வி சந்தையில் அதிகரித்து, அதன் விலைகள் அதிகரிக்கலாம். இது, மத்திய, நீண்ட காலங்களிலேயே எதிர்பார்க்கலாம்.

ஒரு கம்பனியானது, ஒரு புதிய வணிகத்தில் முதலீடு செய்யும்போது,  உடனடியாக இலாபத்தை எதிர்பார்க்க முடியாது.  அம்முதலீட்டின் மூலம் வியாபாரம் விருத்தியடைந்து, இலாபமீட்டுவதற்குச் சில காலம் செல்லலாம்.  

குழப்பமடைதலைத் தவிர்த்து கொள்ளல்   

பங்குச்சந்தையில், மத்திய நீண்ட கால இலக்குடன் தகவலறிந்து முதலீடு செய்யும்போது, சந்தையில் தற்காலிகமாக ஏற்படும் விலை வீழ்ச்சியையிட்டு குழப்பமடையாமல் இருப்பது, ஒரு முதலீட்டாளருக்குரிய சிறந்தப் பண்புகளில் ஒன்றாகும்.

நாம் குழப்பமடையும்போது, எம்மால் சிறந்த தீர்மானங்களை எடுக்க முடியாமல் போகலாம். இதன்காரணமாக, சிலசமயங்களில் நாம் விற்க வேண்டிய பங்குகளை விற்காமலும் வைத்திருக்கவேண்டிய பங்குகளை விற்றும் விடலாம்.   

நான் எவ்வாறு பங்குச் சந்தையில் முதலீடு செய்வது?  

பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு, நாம் ஒரு பங்குத்தரகர் ஊடாக மத்திய வைப்புத்திட்ட கணக்கொன்றை ஆரம்பித்தல் வேண்டும். மத்திய வைப்புத்திட்டக் கணக்கானது, நாம் கொள்வனவு செய்யும், விற்பனை செய்யும் பங்குகள் பற்றிப் பதிவுசெய்யும் கணக்காகும். இக்கணக்கொன்றை, இலவசமாக ஏதாவது, ஒரு பங்குத்தரகர் நிறுவனத்தின் ஊடாக ஆரம்பிக்கலாம். (தற்போது 32 பங்குத்தரகர் நிறுவனங்கள் இலங்கையில் உள்ளன.)  

மத்திய வைப்புத்திட்ட கணக்கொன்றை (CDS) ஆரம்பிப்பதற்கான ஆவணங்கள் என்ன?  

விண்ணப்பப் படிவம், அடையாள அட்டை பிரதி, முகவரியை உறுதிப்படுத்துவதற்கான ஆவணம், KYC எனப்படும் வாடிக்கையாளர் பற்றிய தகவல் என்பனவாகும்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .