2020 ஜூன் 03, புதன்கிழமை

’பிக்பாஸ் சீசன் 3’ ஒரு பார்வை

Editorial   / 2019 ஒக்டோபர் 07 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ்பேசும் மக்களிடையே அதிக வரவேற்பையும், ஆதரவையும் பெற்றதுடன், தற்போது மூன்று சீசன் நடைபெற்று நிறைவடைந்துவிட்டது.

பிக்பாஸ் என்றாலே அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது 105 நாட்கள், சுற்றி கெமராக்கள், போட்டியாளர்கள் மற்றும் எந்த ஒரு தகவல் தொடர்போ,வெளியிலிருந்து நேர்முக நட்போ இல்லாமல் இருப்பது என்பவைதான்.

இந்த நிலையில், இலங்கையை சேர்ந்த லொஸ்லியா மற்றும் தர்ஷன் ஆகியோர் இந்தப் போட்டியில் கலந்துகொண்டதால், இலங்கை மக்கள் மத்தியில் இம்முறை பிக்பாஸ் நிகழ்ச்சி அதிக எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருந்தது.

பிக்பாஸ் வீடு எப்போதும் சண்டை, பிரச்சினை, காதல், நட்பு என அனைத்து விடயங்களையும் கொண்டிருக்கும். இந்த நிலையில் வழமையாக 5 போட்டியாளர்களை கொண்டு நடைபெறும் இறுதிப்போட்டி, கவின் தானாகவே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே சென்றதால் இம்முறை 4 போட்டியாளர்களை வைத்து நடத்தப்பட்டது.

இந்தநிலையில் சாண்டி,முகின், லொஸ்லியா,ஷெரின் ஆகிய போட்டியாளர்கள் தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து இறுதி கட்டத்திற்கு போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டதுடன், வாரம் முழுக்க நடந்த ஒட்டுமொத்த வாக்குகளின் அடிப்படையில் முதல் இடத்தை முகின் பிடித்து வெற்றியாளரானார்.

பிக்பாஸ் சீசன் 3 பட்டத்தை வென்ற முகினுக்கு சக போட்டியாளர்கள், பிக்பாஸ் ரசிகர்கள், பார்வையாளர்கள், கமலஹாசன் மற்றும் விஜய் டிவி நிர்வாகம் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

பிக்பாஸ் சீசன் 3 வின்னராக முகின் அறிவிக்கப்பட்டதும் முதல் வாழ்த்து தெரிவித்தவர் இரண்டாம் இடத்தைப் பிடித்த சாண்டிதான். இந்த அறிவிப்பு வெளியானதும் சாண்டியின் குடும்பத்தினர் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தாலும், தனக்கு பிக்பாஸ் டைட்டிலை வெல்லும் எண்ணம் கிடையாது என்றும், தானும் கவினும் இணைந்து தர்ஷன் அல்லது முகின் ஆகிய இருவரில் ஒருவரை வின்னராக்க வேண்டும் என்று முடிவு செய்ததாகவும், தர்ஷன் வெளியேறியதும் முகின் தான் வின்னர் என்பதை தான் திட்டவட்டமாக முடிவு செய்ததாகவும் சாண்டி தெரிவித்தார்.

மேலும் முகினுக்கு வாழ்த்து தெரிவித்த சாண்டி, ‘சூப்பர் ஸ்டார் ரஜினி ஒரு மேடையில் சொல்லியது போல் ’நான் யானை அல்ல குதிரை, விழுந்தால் உடனே டக்கென்று எழுந்து விடுவேன் என்று இடையில் முகின் திணறினாலும் உடனடியாக சுதாரித்து எழுந்து டைட்டில் பட்டத்தை வென்றுள்ளதாக சாண்டி கூறினார்.

கமலஹாசன் முன்னிலையில் ரஜினிகாந்த் பேசிய வசனத்தை சாண்டி கூறியபோது அதனை கமல்ஹாசனும் ரசித்தார்.

மேலும் எந்தமொழி பேசுபவராக இருந்தாலும் தமிழகத்திற்கு வந்தால் வாழ வைக்கும் தமிழகம், தமிழ் மொழி பேசுபவரை வாழ வைக்காமல் விடுமா? என்றும் சாண்டி கூறினார். சாண்டியின் இந்த பேச்சு அவரது பரந்த எண்ணத்தை காட்டுவதாகவும், அனைவரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

பிக்பாஸ் வெற்றியாளர் யார் என்பதை அறிவிக்கும் முன்னர் ஐந்து போட்டியாளர்களுக்கு விருது அளிக்கப்பட்டது.

கேம் சேஞ்சர் விருது: கவின் ( கவின் வெளியேறாமல் இருந்திருந்தால் போட்டியின் முடிவு மாறியிருக்கும் என கமல் பாராட்டு)

தைரியம் மற்றும் வீரம்: வனிதா ( தனக்கு பாதகமாக இருக்கும் என்பதை தெரிந்தும் வீரமாக செயல்பட்ட வனிதாவுக்கு வாழ்த்துக்கள்)

ஒழுக்கசீலர் விருது: சேரன் (தொழிலில் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்பதை கமல் அவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டேன்)

சிறந்த நண்பர் விருது: ஷெரின் ( இந்த விருதுக்கு கடும் போட்டியாக இருந்த அபிராமியுடன் ஷெரின் பகிர்ந்து கொண்டார்.

சகலதுறை விருது: தர்ஷன் (அனைத்து விடயங்களிலும் சிறப்பாக இருந்தவர்) மேலும் தர்ஷன் தனது நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் அடுத்த படத்தில் ஒப்பந்தமானதாக கமல் அறிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X