பூமியில் நிலவு மண்; மகிழ்ச்சியில் இஸ்ரோ

பல ஆண்டுகளாக இடம்பெற்று வந்த ஆராய்ச்சியின் பலனாக பூமியில், நிலவு மண் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ் நாட்டின் சேலம் மாவட்டத்திலுள்ள சித்தாம்பூண்டி, அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் நிலவு மண் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பல ஆண்டுகளாக நடந்து வந்த இந்த ஆராய்ச்சியின் முடிவாக, நிலவிலுள்ள அதே கனிம வளம் கொண்ட நிலவு மண் தற்பொழுது பூமியில் அதுவும் தமிழ் நாட்டிலேயே கண்டறியப்பட்டுள்ளது.

சந்திரயான் 2 விண்கலத்துடன் விண்ணுக்கு அனுப்பப்படவுள்ள ரோவர் வாகனம் நிலவில் தரையிறங்கி நிலவின் மேற்பரப்பை ஆராய துவங்குவதற்கு முன், பூமியில் ரோவர் வாகனத்தை சோதனை செய்துப் பார்க்க வேண்டியது அவசியம்.

இதற்கு சுமார் 60 முதல் 70 டன் நிலவு மண் தேவைப்படுவதாக தெரியவருகிறது. விலை உயர்ந்த மிக அரிதான இந்த மண் அமெரிக்காவிலிருந்து ஒரு கிலோகிராம் 150 டொலர் என்ற விலைக்கு கிடைக்கப்பெறுகிறது.

இதனை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்தால், நிச்சயமாகப் பெரிய அளவில் நிதி செலவிட வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும், இதற்காக மும்பை ஐஐடி உடன் இணைந்து பேராசிரியர் அன்பழகன் துவங்கிய நிலவு மண்ணை தேடும் ஆராய்ச்சி வெற்றியைக் கொடுத்துள்ளது. அதன்படியே தமிழ் நாட்டில் இந்த நிலவு மண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் இதனை பயன்படுத்தியே ரோவர் சோதனை பூமியில் நடத்தப்பட்டுள்ளது.

நிலவின் மேற்பரப்பில் பசால்ட் என்ற எரிமலை பறை மற்றும் அனார்த்தசைட் என்ற பாறை வகைகள் தான் பெருமளவில் இருக்கின்றன. அனார்த்தசைட் எனப்படும் இந்த அறிய வகை பாறைகள், சித்தாம்பூண்டி கிராமம் மற்றும் அதனைச் சுற்றி உள்ள கிராமப் பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சுமார் 400 முதல் 500 அடி வரை பூமியில் துளையிட்டு இந்த அரிய வகை நிலவு மண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பூமியில் உள்ள மண்ணை விட முற்றிலும் வேறுபாடுடைய நிலவு மண், குறைந்த புவி ஈர்ப்பு விசை, நிலவின் தட்பவெப்ப நிலையுடன் கூடியது எனத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

தமிழ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட அனார்த்தசைட் என்ற பாறைகள், மண் துகள்களாக மாற்றப்பட்டு ரோவரின் சோதனைக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, உலக நாடுகள் அனைத்தும் அமெரிக்காவிடம் நிலவு மண் கேட்டு கொண்டிருக்கும் வேளையில், தமிழ் மண்ணிலேயே இந்த பொக்கிஷம் காணப்படுவது ஆராய்ச்சியின் பலனால் தெரியவந்துள்ளமை பெருமைக்குரியதே என மார்தட்டிக் கொள்கின்றனர் இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள்.


பூமியில் நிலவு மண்; மகிழ்ச்சியில் இஸ்ரோ

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
Services
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.