இலங்கை, தென்னாபிரிக்கா ODI தொடர்

- ச. விமல் 

இலங்கை, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஐந்து ஒரு நாள் சர்வதேசப் போட்டிகள் அடங்கிய தொடர் 29 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது. டெஸ்ட் தொடரில் மிக அபாரமான வெற்றியைப் பெற்றுக்கொண்ட இலங்கை அணி அதே உத்வேகத்துடன் ஒரு நாள் சர்வதேசப் போட்டி தொடரிலும் விளையாடினால் தென்னாபிரிக்கா அணியினை வெற்றி பெற முடியும். ஆனால் டெஸ்ட் அணி வேறு. ஒரு நாள் சர்வதேசப் போட்டி அணி வேறு. இரண்டையும் வேறு வேறாகவே பார்க்க வேண்டும். இரண்டையும் ஒப்பிட முடியாது.

இத்தொடரில் இலங்கை அணியில் சில முக்கிய மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. வீரர்கள் ஒழுக்கமாக இல்லாததன் விளைவே இந்த மாற்றங்கள். தினேஷ் சந்திமால் சர்வதேசக் கிரிக்கெட் சபையால் தடை செய்யப்பட்டுள்ளார். தனுஷ்க குணதிலக இலங்கை கிரிக்கெட்ட சபையால் தடை செய்யப்பட்டுள்ளார். இவர்கள் இல்லாதது இலங்கை அணிக்கு பின்னடைவே. தனுஷ்க, சந்திமால் அணியில் நிச்சயம் இல்லை என்ற நிலையில் உபுல் தரங்கவுடன் குஷல் பெரேரா அல்லது நிரோஷன் டிக்வெல்ல ஆரம்ப இடத்தில் துடுப்பாடும் நிலை காணபப்டுகிறது. மத்தியூஸ் மீண்டும் அணிக்குள் வந்துள்ளமையினால் டினேஷ் சந்திமாலின் இடம் பூர்த்தி செய்யப்படும். ஆகவே இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசை என்பது ஓரளவு பலமாகவே காணப்படுகிறது. ஆனால் பந்துவீச்சு பலமில்லை. சுரங்க லக்மால் வேகப்பந்துவீச்சில் பலமாக காணப்படுகிறார். அதேவேளை திசர பெரேரா சிறப்பாக பந்துவீசி வருகிறார். அடுத்த வேகப்பந்துவீச்சாளர் யார் என்பதுதான் கேள்வி. லஹிரு குமார அல்லது கஸூன் ராஜித்த இருவரில் ஒருவர் வாய்ப்பை பெறுவார்கள்.

அகில தனஞ்சய மற்றும் லக்ஷன் சந்தகான் ஆகியோர் சுழல் பந்துவீச்சாளர்களாக விளையாடுவார்கள். மேலதிக பந்துவீச்சாளர் ஒருவர் தேவைப்பட்டால் இலங்கை அணியின் நிலை சிக்கலாகவே காணபப்டும். பகுதி நேரப்பந்துவீச்சாளர்களாக சரியான ஒருவர் இல்லை. இலங்கை அணி பெரிய வெற்றிகளை பெற்ற போதெல்லாம், சனத் ஜெயசூரியா, திலகரட்ன டில்ஷான், அரவிந்த டி சில்வா போன்றவர்கள் பெரியளவில் கை கொடுத்துளார்கள். ஆனால் இலங்கை அணியில் அவ்வாறானவர்கள் இப்போது இல்லை. இருந்தாலும் அவர்களை சரியாக வளர்க்கவில்லை என்ற நிலையும் காணப்படுகிறது. இலங்கை அணியில் ஷெஹான் ஜெயசூரிய, பிரபாத் ஜெயசூரியா ஆகிய சுழற் பந்துவீச்சாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள். மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் அணியில் விளையாடும் வாய்ப்புகள் குறைவு. ஆறாவது பந்துவீச்சாளர் தேவை என்ற நிலையை கருதினால் குசல் பெரேரா அணியில் இருந்து நீக்கப்பட்டு தசுன் ஷானக அணியில் சேர்க்கபப்டும் வாய்ப்புகளும் உள்ளன.

இலங்கை அணியின் வீரர்கள் பலமாக உள்ளனரா இல்லையா என்பதனை கூறுவது கடினமான விடயம். அஞ்சலோ மத்தியூஸ் உபாதையில் இருந்து குணமடைந்து மீண்டும் அணிக்குள் வந்துள்ளார். இத்தொடரிலும் முழுமையாக விளையாடுவாரா இல்லையா என்தைக் கூற முடியாது. அவர் இல்லாமல் போனால் யார் அடுத்த அணியின் தலைவர்? ஆரப்ப ஜோடி மீண்டும் ஒரு புதிய ஜோடியாக களமிறங்கப்போகிறது. உபுல் தரங்க நம்பகரமான ஆரம்ப துடுப்பாட்ட வீரர். நிரோஷன் டிக்வெல்ல நல்ல ஆரம்ப துடுப்பாட்ட வீரராக விளையாடிய வேளையில் அவர் மத்திய வரிசைக்கு மாற்றப்பட்டார். மீண்டும் அவர் அந்த இடத்தை பெற்றறால் சிறப்பாக துடுப்பாட்ட முடியுமா? அல்லது குசல் பெரேரா ஆரம்ப இடத்தை பிடிப்பாரா? இலங்கை அணியின் சிறந்த எதிர்கால வீரராக போற்றப்படும் குசல் மென்டிஸ் இறுதி ஒரு வருட காலத்தில் சரியாக பிரகாசிக்கவில்லை. அவர் இந்த தொடரில் நல்ல முறையில் துடுப்பாடுவாரா? டெஸ்ட் போட்டிகளில் கூறும்படியாக நல்ல முறையில் துடுப்பாடவில்லை. தனஞ்சய டி சில்வா  அணியில் உள்ளார். இவரை அணிக்குள் கொண்டுவந்தால் மூன்றாவது சுழற் பந்துவீச்சாளருக்கான வாய்ப்புகள் உள்ளன. அது இலங்கை அணிக்கு பலத்தினை வழங்கும்.  யாரை அணியால் நிறுத்துவது? குசல் பெரேரா தான் அங்கேயும் வாயுப்புள்ளவராக காணப்படுகிறார். திசர பெரேரா மீது நம்பிக்கை வைக்கக் கூடியதாகவுள்ளது. பந்துவீச்சாளர்களையும் நம்பலாம். ஆனால் இந்த பலமான தென்னாபிரிக்கா அணியை அவர்களால் கட்டுப்படுத்த முடியுமா என்பதுதான் பெரிய கேள்வி. இலங்கை அணியினை பொறுத்தளவில் இந்த தொடர் பெரிய ஒரு சோதனை. வெற்றியும் பெறலாம். தோல்வியையும் பெறலாம். சுழற்பந்துவீச்சாளர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதிலேயே எல்லாம் தங்கியுள்ளது.

இலங்கை அணி விபரம்

அஞ்சலோ மத்தியூஸ், தசுன் ஷானக, குசல் பெரேரா, தனஞ்சய டி சில்வா, உபுல் தரங்க, குசல் மென்டிஸ், திஸர பெரேரா, நிரோஷன் டிக்வெல்ல, சுரங்க  லக்மால்,  லஹிரு குமார,  கசுன் ராஜித்த, அகில தனஞ்செய, பிரபாத் ஜெயசூரிய, லக்சான் சந்தகான் , ஷெஹான்  ஜெயசூரிய

நான்கு வருடங்களின் பின்னர் தென்னாபிரிக்கா அணி இலங்கை அணியில் ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ளது. 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் தென்னாபிரிக்கா அணி 2-1 என தொடரை வெற்றி பெற்றது. அந்த தொடரில் விளையாடிய நான்கு வீரர்கள் மாத்திரமே இந்த தொடரில் இடம்பெற்றுள்ளார்கள். புதிய வீரர்கள் அணியில் உள்ளார்கள் என்பது இலங்கை அணிக்கு பலமாக அமையும். ஹஷிம் அம்லா, டேவிட் மில்லர், குயின்டன் டி கொக், ஜெ.பி டுமினி ஆகியோரே அந்த நால்வர். தென்னாபிரிக்கா அணி டெஸ்ட் போட்டிகளில் மோசமாக தோல்விடைந்தமையினை வைத்து இந்த தொடரில் அவ்வாறு கணக்கிட முடியாது. பலமான அதிரடியான துடுப்பாட்ட வரிசையைக் கொண்டுள்ளார்கள். ஹஷிம் அம்லா, குயின்டன் டி கொக் இருவரும் ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் சிறந்த ஆரம்ப ஜோடியாக கருதக் கூடியவர்கள். இருவருமே போர்மில் இல்லை என்பதுதான் தென்னாபிரிக்கா அணிக்கு தலையிடியைக் கொடுக்கும் விடயம். பப் டு பிளெஸி மூன்றாமிடத்தில் பலமான வீரர். நான்காமிடத்தில் ஏய்டன் மார்க்கம் கூறும் படியாக ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் பிரகாசிக்கவில்லை. ஆனாலும் ஒரு சதத்தைப் பெற்றுள்ளார். டெஸ்ட் போட்டிகளிலும் அவர் பிரகாசிக்கவில்லை. இலங்கையின் ஆடுகளங்களை இவரால் கணிப்பிட முடியவில்லை. அடுத்த இடத்தில் டுமினி. இவர் சிறப்பாக துடுப்பாடும் வாய்ப்புகள் உள்ள அதேவேளை, இவரின் சுழற்பந்துவீச்சு தென்னாபிரிக்கா அணிக்கு நிச்சயம் கை கொடுக்கும். டேவிட் மில்லரின் அதிரடியான துடுப்பாட்டம் ஆடுகளம், சுழற்பந்துவீச்சு இப்படியான கருத்துக்களுக்கு அப்பாற்பட்டது. அடிக்க ஆரம்பித்து விட்டால் அதன் பின்னர் நிறுத்துவது கடினம்தான்.

தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சில் அனுபவமுள்ளவர்கள் இல்லை. இலங்கை ஆடுகளங்களில் அவர்களின் முக்கியமான ஐந்து பந்துவீச்சாளர்களும். முதல் முறையாக ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் பந்துவீசப்போகிறவர்களே. கஜிஸோ றபாடா, அன்டிலி பெக்லுவாயோ, லுங்கி என்கிடி ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்கள். டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய கேஷவ் மஹராஜ், தப்ரையாஸ் ஷம்சொ ஆகிய சுழற் பந்து வீச்சாளர்கள் இருவரும் ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடவுள்ளார்கள். டெஸ்ட் போட்டிகளில் ஓரளவு சிறப்பாக பந்துவீசியுள்ளமையால்ல், ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளிலும் இவர்களின் பந்துவீச்சு சிறப்பாக அமையும் என நம்பலாம். ஐந்து போட்டிகள் என்ற காரணத்தினால் போட்டிகளின் முடிவுகளின் அடிப்படையில் அணியில் உள்ள புதிய வீரர்களும் விளையாடும் வாய்ப்புகள் உள்ளன. மேலதிக விக்கெட் காப்பாளர், ஆரம்ப துடுப்பாட்ட வீரர், சகலதுறை வீரர், பந்துவீச்சாளர் என நால்வர் அணியில் மேலதிக வீரர்களாக உள்ளார்கள். எனவே போர்மில் இல்லாத வீரர்கள் அல்லது சரியாக பிரகாசிக்க தவறும் வீரர்கள் அணியால் நீக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.

 

தென்னாபிரிக்கா அணி

பப் டு பிளேஸிஸ் (தலைவர்), ஹஷிம் அம்லா, ஜூனியர் டலா, குயின்டன் டி கொக், ஜெ.பி டுமினி, றீஸா ஹென்ரிக்ஸ், ஹென்றிச் க்ளாஸன், கேஷவ் மஹராஜ், எய்டன் மார்க்கம், டேவிட் மில்லர், வியான் முல்டர், லுங்கி என்கிடி, அன்டிலி பெக்லுவாயோ, கஜிஸோ ரபாடா, தப்ரையாஸ் ஷம்சி

 

தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் இதுவரையில் 66 போட்டிகள் இடம்பெற்றுள்ளன. இவற்றுள் தென்னாபிரிக்கா அணி 35 போட்டிகளிலும், இலங்கை அணி 29 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. தலா ஒவ்வொரு போட்டி கைவிடப்பட்டும் சமநிலையிலும் முடிவடைந்தும் உள்ளன.  நிறைவடைந்துள்ளன. இரண்டு அணிகளும் 1992 ஆம் ஆண்டு உலகக்கிண்ண தொடரில் முதற் தடவையாக ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் மோதினர்கள். கடந்தாண்டு சர்வதேசக் கிரிக்கெட் சபையின் சம்பியன் கிண்ணப் போட்டிகளில் இறுதியாக விளையாடியுள்ளார்கள். 1993 ஆம் ஆண்டு இலங்கைக்கு தென்னாபிரிக்கா அணி வருகை தந்ததன் மூலம் இரண்டு அணிகளுக்குமான ஒரு நாள் சர்வதேசப் போட்டி தொடர் ஆரம்பமானது.

தென்னாபிரிக்கா அணி இலங்கையில் வைத்து ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் மோசமான முடிவுகளையே பெற்றுள்ளது. 19 போட்டிகளில் நான்கு வெற்றிகளை மட்டுமே தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணி 14 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி கைவிடப்பட்டுள்ளது. இரு அணிகளும் மட்டும் பங்குபற்றிய தொடர்கள் நான்கு நடைபெற்றுள்ளன. முதற் தொடர் சமநிலையில் நிறைவடைந்தது. அதன் பின்னர் நடைபெற்ற இரண்டு தொடர்களையும் இலங்கை அணி வெற்றி பெற்றுக்கொண்டது. இறுதியாக நடைபெற்ற தொடரில் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது.

இரண்டு அணிகளை பொறுத்தளவிலும் இந்த தொடர் ஒரு சோதனையான தொடர். வீரர்கள் தங்களை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்ற நிலையில் காணப்படுகிறார்கள். எனவே இந்த தொடரில் சிறப்பாக விளையட முனைவார்கள். தம்புள்ள, பல்லேகல, கொழும்பு என மூன்று இடங்களிலும் போட்டிகள் நடைபெறுவதனால் தென்னாபிரிக்கா அணி வேறு வேறு மைதானங்களில் விளையாடவுள்ளது. இலங்கை அணிக்கு பழக்கமான மைதானங்கள் இவை. எனவே போட்டிகள் இலங்கை அணிக்கு சாதக தன்மையை வழங்கும் என நம்பலாம். தொடர் வெற்றி என்பது இலங்கை அணிக்கு பலமாக அமையும். அதேவேளை நம்பிக்கையினையும் ஏற்படுத்தும். கடுமையாக இலங்கை அணி வீரர்கள் போராடினால் தொடர் வெற்றியினை நோக்கி செல்ல முடியும்.

 

போட்டி விபரம்

29/7 - 10:00 am - தம்புள்ள

1/8 - 02:30 pm - தம்புள்ள (பகலிரவு)

5/8 - 09:45 am - கண்டி

8/8 - 02:30 pm - கண்டி (பகலிரவு)

12/8 - 02:30 Pm - கொழும்பு (பகலிரவு)


இலங்கை, தென்னாபிரிக்கா ODI தொடர்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
Services
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.