2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கால்பந்தாட்ட உலகக் கிண்ணம்: டென்மார்க்

Editorial   / 2018 மார்ச் 07 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

தகுதிகாண் போட்டிகளில் வெற்றி பெற்று உலக கிண்ண வாய்ப்பை பெற்ற மகிழ்ச்சியில் டென்மார்க் அணி

கால்பந்தாட்ட உலகக் கிண்ணம், இவ்வாண்டு ஜூன் மாதம் ஆரம்பிக்கவுள்ள நிலையில், உலகக் கிண்ணத் தொடரில் பங்குபற்றவுள்ள அணிகள் பற்றிய விவரங்களின் வரிசையில் குழு சியில் இடம்பிடித்துள்ள டென்மார்க் அணி பற்றி இங்கு தரப்படுகிறது.

டென்மார்க் அணி ஐந்தாவது தடவையாக உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் பங்குபற்றுகிறது. ஐரோப்பா வலயத்திலிருந்து பங்குபற்றுமணி. ஐரோப்பிய வலயத்திலிருந்து 13 அணிகள் உலகக் கிண்ணத் தொடருக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் அவற்றுள் ஒரு அணியாக இம்முறை டென்மார்க் அணி தெரிவாகியுள்ளது.

1908 - குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் முதற் தடவையாக வெளிப்பதக்கத்தை வென்ற டென்மார்க் அணி

கடந்த முறை உலகக் கிண்ணத் தொடரில் இவர்கள் பங்குபற்றவில்லை. 1958ஆம் ஆண்டு முதற் தடவையாக உலகக் கிண்ணத் தொடரின் தகுதிகாண் போட்டிகளில் விளையாடினார்கள்.  ஆனால் அவர்கள் தகுதி பெறவில்லை. 62ஆம் ஆண்டு இவர்கள் விண்ணப்பிக்கவில்லை. மீண்டும் 66 ஆம் ஆண்டு தகுதிகாண் போட்டிகளில் விளையாடினார்கள். தொடர்ச்சியாக நான்கு உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில் விளையாடியவர்கள். 1986ஆம் ஆண்டு முதற் தடவையாக உலகக் கிண்ணத் தொடருக்கு தகுதி பெற்றார்கள்.

முதற் தடவையாக உலக கிண்ண தொடரில் விளையாடிய டென்மார்க் அணி

முதலாவது உலகக்கி ண்ணமே இவர்களுக்கு சிறப்பாக அமைந்தது. இரண்டாம் சுற்று வரை முன்னேறினார்கள். மேற்கு ஜேர்மனி, உருகுவே, ஸ்கொட்லாந்து அணிகளை வென்று குழு நிலையில் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டார்கள். அடுத்த சுற்றில் ஸ்பெய்ன் அணியிடம் மிக மோசமான 1-5 என்ற கோல் கணக்கில் தோல்வியினை சந்தித்து இரண்டாம் சுற்றோடு வெளியேறினார்கள்.

1990, 94ஆம் ஆண்டுகளில் பெரியளவில் இவர்களால் வெற்றிகளைப் பெறமுடியவில்லை. அதனால் தகுதிகாண் போட்டிகளோடு இவர்களின் உலகக் கிண்ணம் நிறைவடைந்தது.

1998 ஆம் ஆண்டு உலக கிண்ணம் இவர்களுக்கு சிறப்பாக அமைந்தது. அதுவே அவர்களின் உயரிய உலக கிண்ணக் தொடராகவும் அமைந்தது. காலிறுதிப் போட்டி வரை முன்னேறினார்கள். உலகக் கிண்ணத் தொடரை நடாத்திய பிரான்ஸ் அணியுடன் குழு சியில் இடம்பிடித்தவர்கள் பிரான்ஸ் அணியுடன் தோல்வியைச் சந்தித்தனர். சவுதி அரேபியா அணியை வென்றவர்கள், தென்னாபிரிக்க அணியுடன் சமநிலை முடிவை பெற்று இரண்டாம் இடத்தை பிடித்து இரண்டாம் சுற்றான காலிறுத்திக்கு முந்தைய சுற்றுக்குத் தெரிவானார்கள்.

இரண்டாம் சுற்றில் குழு டியில் முதலிடம் பிடித்த நைஜீரிய அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறி பிரேஸில் அணியைச் சந்தித்தார்கள். பலமான பிரேஸில் அணியை இவர்கள் இலகுவாக விட்டு வைக்கவில்லை. கடுமையான போட்டியொன்றுக்கு மத்தியில் 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியைச் சந்தித்தார்கள். அந்த உலகக் கிண்ணத் தொடரில் பிரேஸில் அணி இறுதிப் போட்டி வரை சென்றது.

2002ஆம் உலக கிண்ணத்தில் விளையாடிய அணி

அடுத்த உலகக் கிண்ண தொடரிலும் சிறப்பாக விளையாடியவர்கள் இரண்டாம் சுற்று வரை முன்னேறினார்கள். பிரான்ஸ் அணியை குழுயில் தோற்கடித்து முதலிடத்தைப் பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை பெற்றார்கள். ஆனால் இங்கிலாந்து அணியிடம் தோற்றுப் போனார்கள். 2006 ஆம் ஆண்டு தகுதி பெறத் தவறியவர்கள், 2010 ஆம் ஆண்டு முதல் சுற்றோடு வெளியேறினார்கள்.

உலக கிண்ண தொடருக்கு வருவதும் போவதுமாக உள்ளவர்கள் உலகக் கிண்ண தரப்படுத்தல்களில் 25ஆம் இடத்தில் காணப்படுகிறார்கள். 16 போட்டிகளில் எட்டு வெற்றிகளைப் பெற்றுள்ளார்கள். இரண்டு சமநிலை முடிவுகளையும் பெற்றுளார்கள். ஆறு போட்டிகளில் தோல்வி. வெற்றி சதவீதம் என்பது இவர்களுக்கு சிறப்பாகவே காணப்படுகிறது. முக்கிய போட்டிகளில் சோபிக்கத் தவறுவது இவர்களுக்கான மிகப் பெரிய பிரச்சினையாக காணப்படுகிறது.

இம்முறை இவர்களுக்கான உலகக் கிண்ண வாய்ப்பு இலகுவாக கிடைக்கவில்லை. குழு ஈயில் இடம்பிடித்திருந்தவர்கள் இரண்டாமிடத்தையே பெற்றார்கள். இக்குழுவில் முதலிடம் பிடித்த போலந்து அணி நேரடி வாய்ப்பை பெற்றது. விளையாடிய 10 போட்டிகளில் ஆறு வெற்றிகள், இரண்டு சமநிலை, இரண்டு தோல்விகள் என்ற முடிவைப் பெற்றுக் கொண்டார்கள். இதன் காரணமாக அயர்லாந்து அணியுடன் இரண்டாவது தகுதிகாண் சுற்றில் மோதினார்கள். டென்மார்க் அணியிலும் பார்க்க அயர்லாந்து அணிக்கான வாய்ப்புகள் இருப்பதாகவே எதிர்வு கூறப்பட்டது. ஆனால் அயர்லாந்தில் வைத்து 5-1 என்ற கோல் கணக்கில் பெரிய வெற்றியைப் பெற்றதன் மூலம் உலக கிண்ண வாய்ப்பை ஏற்படுத்தினார்கள். தங்கள் நாட்டில் நடைபெற்ற போட்டியில் சிரமப்படாமல் கோல்களின்றி சமநிலையில் நிறைவு செய்து உலக கிண்ண வாய்ப்பை பெற்றுக் கொண்டார்கள்.

மீண்டுமொரு தடவை பிரான்ஸ் அங்கம் வகிக்கும் குழுவில் இவர்களுக்கு இடம் கிடைத்துள்ளது. பிரான்ஸ் அணியை இவர்களால் இம்முறை வீழ்த்த முடியுமா என்பது கேள்வியே. பெரு அணி இன்னுமொரு பலமான அணியாக இவர்களது குழுவில் இடம் பிடித்துள்ளது. பெரு அணி இவர்களிலும் பார்க்க ஒரு இடம் முன்னணியில் காணப்படுகிறது. அடுத்த அணி அவுஸ்திரேலியா. அவுஸ்திரேலிய அணி இவர்களுக்கு பெரியளவில் சவாலாக இருக்கப்போவதில்லை.

இவர்கள் இரண்டாமிடத்தைப் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்புள்ள கணிப்பின் படி பார்த்தால் அடுத்த சுற்றில் ஆர்ஜென்டீனா அணியை எதிர்கொள்ள வேண்டி வரலாம்.  ஆர்ஜென்டீனா அணி பலமான அணியென்பதால் இரண்டாம் சுற்றை இவர்கள் தாண்டுவது கடினமாக இருக்கும். ஆனால் முதலிடத்தை பெற்றால், குழு டியிலுள்ள குரேஷியா, நைஜீரியா, ஐஸ்லாந்து அணிகள் இவர்களிலும் பார்க்க பலம் குறைந்தவர்களே. அவ்வாறான நிலை ஏற்பட்டால் காலிறுதிப் போட்டிகளுக்கு செல்லலாம். தகுதிகாண் போட்டிகளை வைத்து பார்க்கும் போது இவர்கள் மிகப் பெரிய பலத்திலுள்ளார்கள் எனவும் கூற முடியாத நிலை காணப்படுகிறது. பெரு அணியும் இலகுவாக விட்டுக்கொடுக்காது என்ற நிலையில் இவர்களுக்கு இரண்டாம் சுற்று சந்தேகம்தான்.

பந்தயக் காரர்கள் இவர்களுக்கு 14 ஆம் இட வாய்ப்பை வழங்கியுளார்கள். அவர்கள் பெரு அணியிலும் பார்க்க இவர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என்ற கணிப்பையே வெளியிட்டுள்ளார்கள். இவர்களது கடந்த காலங்கள், கடந்த உலக கிண்ண தொடர்களில் விளையாடிவரும் விதம், ஐரோப்பா கண்டத்தில் போட்டி நடைபெறுகிறது என்ற காரணங்களை வைத்து இரண்டாம் சுற்று வாய்ப்புள்ளதாக கணிப்பிடலாம். தொடர்ச்சியான பெறுபேறுகளை காட்டி, தொடந்தும் நல்ல முறையில் விளையாடினாள் இவர்கள் சவால் மிக்க அணியே.

முதல் சுற்று போட்டி விபரங்கள்

ஜூன் 16 இரவு 9.30 -   பெரு எதிர் டென்மார்க்

ஜூன் 21 இரவு 5.30 -   டென்மார்க் எதிர் அவுஸ்திரேலியா

ஜூன் 26 இரவு 9.30 - டென்மார்க் எதிர் பிரான்ஸ்

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .