விடாமுயற்சி வெற்றி தரும்

- ச. சேகர்

உடலினுள் ஹோர்மோன்கள் செயற்படுகையில் அட்ரினலின் உடலுக்கு உடனடியாக சக்தியை பெற்றுக் கொடுக்கும் வகையில் செயற்படுகின்றது. இந்நிலைக்கு ஆளாவோர் வலுவுடனான வேகமான செயற்பாடுகளை தெரிவு செய்வார்கள். ஃபோர்மியுலா வண்ணில் இவ்வாறு உலகை வியப்பில் ஆழ்த்தும் திறமைகளை வெளிப்படுத்தும் வீரராக, ஐந்து தடவைகள் உலக சம்பியன் பட்டம் பெற்றவராக லூயிஸ் ஹமில்டன் திகழ்கின்றார்,

1985 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஏழாம் திகதி இங்கிலாந்தின் ஹர்டஃபோட்ஷெயார் பிரதேசத்தில் ஸ்டீவனேஜ் நகரில் லூயிஸ் ஹமில்டன் பிறந்தார். இவரின் தாயார் காமன், ஒரு ஐரோப்பிய நாட்டவர். தந்தை அந்தனி, ஆபிரிக்க இனத்தவர் என்பதன் காரணமாக, லூயிஸ் ஹமில்டன் புதிய கலப்பு இனத்தவராக பிறந்தார்.

லூயிஸ் ஹமில்டனுக்கு இரண்டு வயது நிரம்பிய வேளையில், பெற்றோர் விவாகரத்து பெறுகின்றனர். அந்நாட்டு விதிமுறைகளின் பிரகாரம், விவாகரத்தான பின்னர் பிள்ளையை பராமரிக்கும் பொறுப்பு தாயைச் சேரும் என்ற நிலையில், ஹமில்டன் தனது தாயாருடன் வளர நேர்ந்தது. இந்நிலையில் வார இறுதி நாட்களில் அவர் தந்தையை சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

ஹமில்டன் குழந்தையாக மற்றும் சிறுவனாக இருந்த காலப்பகுதியில் அவருடன் எவ்வாறு பொழுதை செலவிட வேண்டும் என்பது தொடர்பில் அந்தனிக்கு போதியளவு அனுபவம் காணப்படாதபோதிலும், மகனுடன் பொழுதை மகிழ்ச்சியுடன் செலவிடும் வகையில் பல்வேறு செற்பாடுகளில் ஈடுபட்டதுடன், ஒரு தொலை கட்டுப்பாட்டால் இயங்கும் காரொன்றை வாங்கிக் கொடுத்திருந்தார். பொது இடங்களில், இரவிரவாக குறித்த காரை செலுத்தி தனது தந்தையுடன் ஹமில்டன் மகிழ்ச்சியடைந்தார். இவ்வாறு விளையாடிய பொழுதுகள், அந்த விளையாட்டுக்கார் காலப்போக்கில் உலக சம்பியனாக ஹமில்டன் திகழ்வதற்கான அடித்தளத்தை அவரில் ஏற்படுத்தியிருந்தது.

இங்கிலாந்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தொலை கட்டுப்பாட்டால் இயங்கும் கார் போட்டிகளில் லிவிஸ் ஹமில்டன் பங்கேற்று வெற்றியீட்டினார். தூரத்தில் இருந்து ஒரு விளையாட்டு காரை ஓட்டுவதற்கு பதிலாக, ஓட்டு வளையத்தை பிடித்த வண்ணம் உண்மையான காரில் ஏறி வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டும் என்ற அவா, அவரில் எதிர்பாராதவிதமாக ஏற்படுகின்றது. இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் தனது பிள்ளைக்கு அந்தனி ஓரளவு ஓட்டத்தில் ஈடுபடக்கூடிய ஒரு கோ கார்ட் ஒன்றை வாங்கிக் கொடுத்தார். தனது எதிர்காலத்துக்கு வழிகோலும் துறையாக இதுவே அமைந்திருக்கும் என்பதை அந்த வண்டியின் ஓட்டு வளையத்தின் முன்னால் ஹமில்டன் அமரும்போது உணர்ந்திருந்தார். அப்போது ஹமில்டனுக்கு வயது ஆறு.

சிறுவர் மோட்டார் வாகன போட்டிகளில் பங்கேற்கும் ஹமில்டனின் எதிர்பார்ப்பு நிறைவேறுவது என்பது எளிமையான காரியமாக அமைந்திருக்கவில்லை. ஏனெனில் இதற்கு பெருமளவு பணம் தேவைப்பட்டிருந்தது.

ஆனாலும் தனது மகனின் கனவை நிறைவேற்றவும், ஆர்வத்தை ஊக்குவிப்பதற்காகவும், தந்தையான அந்தனி தனது தகவல் தொழில்நுட்ப பணியிலிருந்து வெளியேறி, அதிக வருமானத்தை பெற்றுக் கொள்வதற்காக மூன்று பணிகளில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டது. அன்பு மகனுக்காக அவர் அதை மேற்கொண்டார்.

இலங்கையில் பண்டாரகம பகுதியில் கோ கார்ட் விளையாட்டு பகுதி காணப்படுவதுடன், நாம் அவற்றிலும், ஏனைய பகுதிகளிலும் பொழுதுபோக்காகவும், விநோதமாகவும் இந்த விளையாட்டில் ஈடுபட்ட போதிலும், மேற்குலக நாடுகளில் நிபுணத்துவம் வாய்ந்த கோ கார்ட் போட்டிகளுக்கு அதிகளவு வரவேற்பு காணப்படுகின்றது. தனது எட்டு வயதில் ஹமில்டன் இப்போட்டியில் முதன்முறையாக பங்கேற்றார். இதன்போது வெற்றி இலக்கை எய்துவது என்பது ஹமில்டனுக்கு கடினமான விடயமாக அமைந்திருக்கவில்லை. ஒரு எட்டு வயது நிரம்பிய சிறுவனுக்கு ஓட்டு வளையத்தை இலகுவாக திருப்பி, நிபுணத்துவம் வாய்ந்த போட்டியில் எவ்வாறு திறமையை வெளிப்படுத்த முடிந்தது என இங்கிலாந்தின் பெரும்பாலான மோட்டார் பந்தய ஆர்வலர்கள் ஆச்சரியப்பட்டிருந்தனர்.

இவ்வாறு 1995ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இடம்பெற்ற வருடாந்த மோட்டார் பந்தய வீரர்களுக்கான பரிசளிப்பு வைபவத்தில் 10 வயது நிரம்பிய ஹமில்டனுக்கும் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் கோ கார்ட் பிரித்தானிய சம்பியன்ஷிப் பட்டத்தை வெற்றியீட்டியவராக ஹமில்டன் பங்கேற்றார். இந்த நிகழ்வில் பங்கேற்பதற்கு பொருத்தமான ஆடைகளை கொள்வனவு செய்யக்கூட அவருக்கு நிதி வசதி காணப்படவில்லை. இதன் காரணமாக, முன்னைய ஆண்டில் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டவரின் ஆடையை இரவல் வாங்கி அணிந்தே இந்த பரிசளிப்பு வைபவத்தில் ஹமில்டன் கலந்து கொண்டார்.

இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில் பந்தய உலகின் பல பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தனர். உலகப் புகழ்பெற்ற மக்லரன் மோட்டார் கார் நிறுவனத்தின் ஸ்தாபகரும் தலைவருமான ரொன் டெனிஸ் இதில் கலந்து கொண்டார். இதன்போது அவரை நாடி, அவரின் வாழ்த்தொப்பத்தை நாடும் ஹமில்டன்,”எனது பெயர் லூயிஸ் ஹமில்டன், நான் பிரித்தானிய கோ கார்ட் பட்டத்தை வென்றுள்ளேன். என்றாவது ஒருநாள் உங்களின் பந்தய கார்களை செலுத்த எனக்கு விருப்பமாக உள்ளது.” என்று கூறினார். இந்நிலையில், ஹமில்டன் வழங்கிய வாழ்த்தொப்ப குறிப்பில், ”இன்னும் ஒன்பது வருடங்களில் எனக்கு தொலைபேசி அழைப்பொன்றை எடுக்கவும்.” என ரொன் டெனிஸ் குறிப்பிடுகின்றார். சாதாரண ஒரு சிறுவன் என்றால், இந்த வாக்கியத்தை வாசித்துவிட்டு, மகிழ்ச்சியுடன் நின்றிருக்கக்கூடும். ரொன் வழங்கிய இந்த வாழ்த்தால், மேலும் ஊக்கமடைந்த ஹமில்டன், எந்நாளும் மீட்டுப்பார்த்த வண்ணம், சிறந்த போட்டியாளராக திகழ்வதற்கு கடும் முயற்சி செய்திருந்தார்.  

ஒன்பது ஆண்டுகளின் பின்னர் தம்மை அழைக்குமாறு தெரிவித்த ரொன் டெனிஸ், இரண்டே ஆண்டுகளில் ஹமில்டனுடன் தொடர்பு கொள்கின்றார். தம்மை வந்து சந்திக்குமாறு அந்த அழைப்பில் ஹமில்டனுக்கு அவர் கூறினார்.

ஃபோர்மியுலா வண் மோட்டார் பந்தயத்தில் பங்கேற்ற வயது குறைந்த, ஆபிரிக்க இன பின்புலத்தைக் கொண்ட முதலாவது போட்டியாளராக ஹமில்டன் தனது கனவு பயணத்தை ஆரம்பித்தார். பல தடைகள், நெருக்கடிகள் போன்றவற்றை கடந்து இந்தளவு தூரம் பயணித்த ஹமில்டன், குறைந்த வயதில் திறமைகளை வெளிப்படுத்திய அவர், இதுவரையில் ஐந்து உலக சம்பியன் பட்டங்களை ஃபோர்மியுலா வண் பந்தயத்தில் வென்றுள்ளார்.

இவரின் இன்றைய சொத்துக்களின் பெறுமதி 285 மில்லியன் அமெரிக்க டொலர்களை விட அதிகமாகும். ஃபோர்மியுலா வனண் வரலாற்றில் இரண்டாவது அதிகூடிய உலக சம்பியன் பட்டங்களை வென்ற வீரராக இவர் திகழ்வதுடன், முதலாமிடத்தில் புகழ்பெற்ற ஜேர்மன் நாட்டு வீரரான மைக்கல் சூமேக்கர் திகழ்கின்றார்.

ஹமில்டனின் இலக்கு என்றோ ஒரு நாள், சூமேக்கரின் சாதனையை கடந்து, உலகின் தலைசிறந்த மோட்டார் பந்தய வீரராக திகழ வேண்டும் என்பதாக அமைந்துள்ளது. வாழ்க்கையில் எந்த தடைகள் வந்தாலும், வெற்றி இலக்கை தவற வேண்டாம். இடையில் எதிர்கொள்ள வேண்டிய தடைகளை கண்டு வேகத்தை குறைத்த போதிலும், இலக்கை அடைய தவற வேண்டாம். உங்கள் இலக்கு எய்தப்படும் வரை இடைவிடாமல் பயணிக்க வேண்டும் என்பதற்கு ஃபோர்மியுலா வண் உலக சம்பியனான ஹமில்டனின் வாழ்க்கை வரலாறும் ஒரு சிறந்த முன்னுதாரணமாக அமைந்துள்ளது.


விடாமுயற்சி வெற்றி தரும்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

 
Services
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.