2021 ஜூன் 19, சனிக்கிழமை

கல்முனை வலய பிரதேசத்தில் பாடசாலை செல்லாத 152 சிறார்கள்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 03 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எல்.ஏ.அஸீஸ்)


பாடசாலையை விட்டு இடைவிலகிய மற்றும் பாடசாலை செல்லாத 5 தொடக்கம் 14 வயது வரையிலான வயதெல்லையுடைய 152 மாணவர்கள் கல்முனை கல்வி வலய பிராந்தியத்தில் இருப்பதாக ஆய்வொன்றின் மூலம் இனங்காணப்பட்டுள்ளது.

சர்வதேச எழுத்தறிவு தினம் இம்மாதம் 8 ஆம் திகதி கொண்டாடப்பட இருக்கும் அதேவேளை, இலங்கையில் எழுத்தறிவு வீதத்தை 98% இலிருந்து 100% மாக அதிகரிப்பதற்கான வேலைத் திட்டங்களை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. இந்தரீதியில், கல்வித் திணைக்களத்தினால், வலயக்கல்விப் பணிமனைகள் ஊடாக பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கல்முனை வலயக் கல்விப் பணிமனையினால் பாடசாலை விட்டு இடைவிலகிய மற்றும் பாடசாலை செல்லாத மாணவர்களுக்காக எழுத்தறிவு வகுப்புக்கள், ஆற்றல்களை வெளிக்கொணர்வதற்கான போட்டிகள் போன்றவை நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் அதேவேளை, இவர்களைப் பற்றிய தரவுகளைப் பெறுவதற்கான ஆய்வொன்றையும் அண்மையில் நடத்தப்பட்டது.

கல்முனைக் கல்வி வலயப் பிராந்தியத்திற்கு உட்பட்ட கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர் ஆகிய பிரதேசங்களில் கடந்த ஜூன் 14ஆம் திகதி தொடக்கம் ஜூலை 13ஆம் திகதி வரை விசேடமாக நியமிக்கப்பட்ட தொண்டர்களைக் கொண்டு நடாத்தப்பட்ட ஆய்வின்மூலம் 5 தொடக்கம் 14 வயது வரையிலான பாடசாலை விட்டு இடைவிலகிய மற்றும் பாடசாலை செல்லாத 152 மாணவர்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

கல்முனைப் பிரதேசத்தில் 23 மாணவர்களும்,  கல்முனை தமிழ்ப் பிரதேசத்தில் 46 மாணவர்களும், சாய்ந்தமருதுப் பிரதேசத்தில் 25 மாணவர்களும்,  காரைதீவுப் பிரதேசத்தில் 31 மாணவர்களும்,  நிந்தவூர்ப் பிரதேசத்தில் 27 மாணவர்களுமே இவ்வாறு பாடசாலை செல்லாதவர்களென கண்டறியப்பட்டவர்களாவர். 

மேலும் இவ்வாறு இணங்காணப்பட்ட மாணவர்களுக்கு  எழுத்தறிவு வகுப்புக்கள் மூலம் எழுத்தறிவைக் கற்பித்தல், தொழில்திறன்களை ஏற்படுத்துவதற்கான பயிற்சிக் கல்வியை வழங்குதல், போட்டிகள் நடத்துவதன் மூலம் வலய மட்டத்தில் சான்றிதழ்கள் வழங்கி தகைமைகளைப் பெற்றுக் கொடுத்தல் போன்ற நடவடிக்கைகளை கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் முறைசார கல்விப் பிரிவு மேற்கொண்டு வருவதாக கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் முறைசாராக் கல்வி மற்றும் முன்பள்ளிக் கல்வி நடவடிக்கைகளுக்கு பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.சக்காப் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .