2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

அடையாள வேலை நிறுத்தமும் ஆர்ப்பாட்டப் பேரணியும்

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2017 செப்டெம்பர் 18 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்கரைப்பற்று மாநகரசபையின் ஆணையாளரை அவமதித்து, வீண்பழி சுமத்தும் செயற்பாட்டைக் கண்டித்து, மாநகரசபையின் ஊழியர்கள், உத்தியோகத்தர்களால் அடையாள வேலை நிறுத்தமும் ஆர்ப்பாட்டப் பேரணியும் இன்று (18) நடத்தப்பட்டது.

 

 ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸால் அக்கரைப்பற்றில் கடந்த 15ஆம் திகதி நடத்தப்பட்ட அபிவிருத்தி நிகழ்வில் அடிக்கல் நாட்டுவதற்கான ஒழுங்குகளை ஆணையாளர் மேற்கொள்ளவில்லை என்று ஒரு குழுவினர், ஆணையாளரை தகாத வார்த்தைகளால் திட்டியமைக்கும் அச்சுறுத்தல் விடுத்தமைக்கும் எதிர்ப்புத் தெரிவித்தே, இவை நடத்தப்பட்டன.

 மாநாகர சபையின் 138 ஊழியர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு பட்டியணிந்து காலை 7 மணி முதல் 10 மணி வரையில் அடையாள வேலை நிறுத்தத்தை மேற்கொண்டதால், சபையின் செயற்பாடுகள் தடைப்பட்டன.

இவ்வார்ப்பாட்டத்தில் கண்டனங்கள், கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஊழியர்கள் ஏந்தியவாறு மாநகர சபையின் வாசலிலிருந்து கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதிக்குச் சென்று கோசமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

“அரசியல்வாதிகளின் கையாட்களின் இவ்வாறான மோசமான அவமதிப்புச் செயற்பாடு, சமூகவலைத்தளங்களில பரப்பப்பட்டதால்  உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள் அரச கடமையில் ஈடுபடுவதில் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்” என, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் தெரிவித்தனர்.

கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஊடாக, கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர், கிழக்கு மாகாண ஆளுநருக்குத் தெரியப்படுத்தி, உரிய தீர்வைப் பெற்றுத்தருமாறு கோரி, அக்கரைப்பற்று மாநகர சபையின் ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மியிடம் மகஜரொன்று, இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களால் கையளிக்கப்பட்டது.

மேலும், “இவ்வாறான செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்”, “எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகள், அசம்பாவிதங்கள் இடம்பெறாமல் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”, “மக்களின் நிலை அறிந்து நடக்கின்ற மாநகர சபையின் செயற்பாடுகளை ஸ்தம்பிக்கச் செய்யும் நபர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்” என அம்மகஜரில் கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .