2025 மே 05, திங்கட்கிழமை

அம்பாறையில் பாலத்த மழை

Princiya Dixci   / 2020 நவம்பர் 17 , பி.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.ஏ.றமீஸ், வி.சுகிர்தகுமார்   

அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடரும் மழையுடனான காலநிலை காரணமாக, இம்மாவட்டத்திலுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. 

இன்று (17) காலை முடிந்த 24 மணித்தியாலங்களில் அம்பாறை மாவட்டத்தின் தீகவாபி பகுதியில் 65.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி அதிகப்படியாக பதிவாகியுள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களத்தின்  அம்பாறை மாவட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது. 

மாவட்டத்தின் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, பாலமுனை, ஒலுவில், சாய்ந்தமருது, அட்டப்பள்ளம், நிந்தவூர், காரைதீவு, கல்முனை, நட்பிட்டிமுனை, மருதமுனை, இறக்காமம் மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களில்  உள்ள தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள நீர் நிறைந்து காணப்படுகின்றன. சில பிரதேசங்களில் உள்ள மக்கள் குடியிருப்புப் பகுதிகளில்  மழை நீர் புகுந்துள்ளதால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

அத்துடன், மாவட்டத்தின் தாழ்நில விவசாய நிலங்கள் நீரில் மூழ்கிக் காணப்படுவதால் பெருந்தொகையான விவசாயச் செய்கை பாதிப்படைந்துள்ளது. பெரும்போகத்துக்கான விதைப்பு கடந்த இரு வாரம் முதல் சுறுசுறுப்பாக நடைபெற்று முடிவடைந்த நிலையில், பெய்துவரும் மழையானது நெல்விதைகள் முளைவரும் நிலையை பாதித்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, பல்வேறு பிரதேசங்களில் உள்ள வீதிகளில் நீர் நிறைந்து காணப்படுவதனால் மக்களின் போக்குவரத்துக்கும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

மேலும் பெய்து வரும் பலத்த மழையால் பல இருப்பிடங்கள் வெள்ளத்தால் சூழும் நிலை ஏற்படும் சந்தர்ப்பங்கள் அதிகமாக உள்ளபோதிலும் இதுவரையில் யாரும் இடம்பெறவில்லை என ஆலையடிவேம்பு பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்தோடு கடலுடன் இணையும் ஆலையடிவேம்பு சின்னமுகத்தவாரம் பகுதி நீர்வடிந்தோடுவதன் பொருட்டு அகழ்ந்து விடுவதற்கான ஆலோசனை இடம்பெற்று வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X