2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

அம்பாறை மாவட்டத்தில் நெற்செய்கை வீழ்ச்சி

யூ.எல். மப்றூக்   / 2018 ஏப்ரல் 19 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டத்தில் தற்போதை சிறுபோகத்தில் சுமார் 25 சதவீதமான நெற்செய்கைக் காணிகளிலேயே விவசாயம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமையால், பெருமளவான விவசாயிகள் நெற்செய்கை மேற்கொள்ள முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிறுபோகங்களின்போது நெற்செய்கைக்கான நீரை வழங்கும் இக்கினியாகல குளத்தில் கணிசமானளவு நீர் குறைந்துள்ளமை காரணமாகவே, இம்முறை மிகக் குறைந்தளவு நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்வதற்கு விவவாசயத் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.

போதியளவான நீர் கிடைக்குமாயின் சிறுபோகக் காலப்பகுதியில் 01 இலட்சத்து 83 ஆயிரம் ஏக்கர் காணிகளில் நெற் செய்கை மேற்கொள்ளப்படும். ஆனால், இம்முறை 48 ஆயிரத்து 50 ஏக்கர் பரப்பளவுள்ள காணிகளில் மட்டுமே நெற்செய்கை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, சிறுபோகத்தில் நெற்செய்கை மேற்கொள்ளப்படும் மொத்தக் காணிகளில் சுமார் 25 சதவீதம் பரப்பளவுள்ள காணிகளில் மட்டுமே, இம்முறை நெற்செய்கை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இக்கினியாலகல குளத்தில் 07 இலட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் அடி அளவான நீர் இருக்கும் போது மட்டுமே, சிறுபோகங்களில் நெற்செய்கை மேற்கொள்ளக் கூடிய அனைத்துக் காணிகளிலும் விவசாயம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என, அம்பாறை மாவட்ட விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. கலீஸ் தெரிவித்தார்.

ஆனால், தற்போது இக்கினியால குளத்தில் 01 இலட்சத்து 44 ஆயிரம் ஏக்கர் அடி நீர் மட்டுமே காணப்படுவதாகவும் அவர் கூறினார்.

அதாவது, இக்கினியாகல குளத்தில் சுமார் 20 சதவீதமானளளவு நீர் மட்டுமே சேமிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் சுமார் 25 சதவீதமானளவு நிலப்பரப்பில் மட்டும் நெற்செய்கை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அம்பாறை மாவட்ட விவசாயப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

இதன் காரணமாக, இம்முறை அம்பாறை மாவட்டத்தில் நெல் விளைச்சலில் பாரியளவு வீழ்ச்சி ஏற்படும் என அஞ்சப்படுகிறது.

நாட்டின் நெல் உற்பத்தியில் 23 சதவீதமான பங்களிப்பை அம்பாறை மாவட்டம் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .