2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

அரசியல்வாதிகள் ‘பிரதேசவாதம் வளர்க்கின்றனர்’

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2018 ஒக்டோபர் 31 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுவில் பிரதேச மக்கள், அம்பாறை மாவட்ட மீனவா்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு நிரந்தரமான தீர்வுகளை முன்வைக்காது, சில அரசியல்வாதிகள், முஸ்லிம் பிரதேசங்களில் பிரதேசவாத உணர்வுகளை வளர்த்து வருவது வேதனைக்குரிய விடயமாகுமென, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர்  எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.  

ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பட்டுவரும் கடலரிப்பு, கடற்தொழில் பாதிப்பு தொடா்பில் தீர்வுத் திட்டம் எதுவுமின்றி நீடித்துவரும்  நிலையில், ஊடகங்களுக்கு இன்று (31) கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர் கூறியதாவது, ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பட்டுவரும் கடலரிப்பு, மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருந்துவரும் நிலையில், ஒலுவில் பிரதேச மக்களின் வாழ்வாதாரம், தொழில்துறைகள் பாதிக்கப்பட்டு, மீனவர்களின் வாழ்வாதாரம் இழக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில், ஒற்றுமையாக வாழ்ந்துவரும் முஸ்லிம் பிரதேசங்களை, எழுந்துள்ள முக்கியத்துவமிக்க இப்பிரச்சினைகளை வைத்து, அரசியல் நோக்கங்களுக்காக, சில அரசியல்வாதிகள், மக்களை மோதவிட்டு பிரதேசவாதத்தை வளர்த்துள்ளமை தொடர்பில், வேதனைப்பட வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒலுவில் மக்களின் பூர்வீகக் காணிகளை, இலங்கைத் துறைமுகம், தென்கிழக்குப் பல்கலைக் கழகம், மஹாபொல பயிற்சி நிலையம், வீடமைப்புத் திட்டம், துறைமுக உல்லாச விடுதிகள் ஆகியன அமைப்பதற்கு அரசாங்கம் சுவிகரித்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

மிகுதியாகவுள்ள காணிகளையும் கடலரிப்பால், படிப்படியாக ஒலுவில் மக்கள் இழந்து வருகின்றனர் எனவும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர்  உதுமாலெப்பை கவலை தெரிவித்தார்.

எனவே, ஒலுவில் பிரதேசத்தில் எஞ்சியுள்ள நிலத்தைப் பாதுகாப்பதற்கு நிரந்தரமான தீர்வொன்றை ஏற்படுத்துவதுடன்,  ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை பிரதேசத்தில் துறைமுக நிர்மாணிப்பால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள ஆயிரக்கணக்கான மீனவர்களுக்கான நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .