2025 மே 05, திங்கட்கிழமை

ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்துமாறு வேண்டுகோள்

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2019 ஜனவரி 24 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சாய்ந்தமருது வைத்தியசாலையை, ஆதார வைத்தியசாலையாகத் தரமுயர்த்துவதற்கு, கிழக்கு மாகாண அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்தை உடனடியாக அமுல்படுத்துமாறு, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்விடம் சாய்ந்தமருது ஷூரா சபை கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக சாய்ந்தமருது ஷூரா சபையின் பதில் செயலாளர் எஸ்.எம்.கலீல், ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், "952ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட சாய்ந்தமருது வைத்தியசாலை, அம்பாறை மாவட்ட கரையோர பிராந்திய மக்களின் மருத்துவத் தேவைகளை நிவர்த்தி செய்வதில் பாரிய பங்களிப்பை செய்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாகத் தரமுயர்த்துவதற்கு வைத்தியசாலை அபிவிருத்தி சபையால் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளின் பயனாக, 2011ஆம் ஆண்டு, கிழக்கு மாகாண அமைச்சரவையில் அதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

எனினும், அந்த அமைச்சரவைத் தீர்மானம் இதுவரை அமுல்நடத்தப்படவில்லையெனவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

1979ஆம் ஆண்டில் இங்கு மகப்பேற்று மருத்துவப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. இவ்வைத்தியசாலை 1990 ஆம் ஆண்டு மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டது.

2004ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தால் முற்றாக அழிவடைந்த சாய்ந்தமருது வைத்தியசாலை ஒரு சில வருடங்களில் பிரதான வீதிக்கு இடமாற்றப்பட்டு, மீள்நிர்மாணம் செய்யப்பட்டது.

 அதேவேளை வேறு சில வைத்தியசாலைகள் காலத்துக்கு காலம் ஆதார வைத்தியசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளன.

சாய்ந்தமருது வைத்தியசாலை தரமுயர்த்தப்படாத காரணத்தினால் இங்கு நிலவி வருகின்ற வளங்கள் மற்றும் ஆளணிப் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியாமல், வைத்தியசாலையின் சேவைகளில் பாரிய தளர்வு ஏற்பட்டிருந்தது. இதனைக் காரணம் காட்டி இவ்வைத்தியசாலையை மூடி விடுவதற்கும் திரைமறைவில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்துள்ளன.

எவ்வாறாயினும் அவையெல்லாம் முறியடிக்கப்பட்டு தற்போது வைத்தியசாலை அபிவிருத்தி சபை, பெரிய பள்ளிவாசல் நிர்வாக சபை மற்றும் பொது அமைப்புகளின் முயற்சிகளினால் இவ்வூர் தனவந்தர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் பாரிய பங்களிப்புடன் இவ்வைத்தியசாலை சொந்தக்காலில் வீறுநடைபோடுகிறது. தவிரவும் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் அவர்களும் கடந்த வருடம் இவ்வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு ஒரு கோடி ரூபாவை ஒதுக்கீடு செய்திருந்தார்.

எனினும் தற்போதைய கால சூழலுக்கேற்ப முழுமையான அபிவிருத்தியை மேற்கொண்டு, நிறைவான மருத்துவ சேவைகளை வழங்க இயலுமான கட்டமைப்பைப் பெறுவதற்கு இவ்வைத்தியசாலை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட வேண்டும் என்ற எமது கோரிக்கையில் தங்களுக்கு மாற்றுக்கருத்து இருக்காது என நம்புகின்றோம்.

 

இதனை தரமுயர்த்துவது தொடர்பில் எமது ஷூரா சபை கடந்த 2017 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக பதவி வகித்த ஏ.எல்.எம்.நசீரை சந்தித்து, பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தது. எனினும் சிறிது காலத்தில் மாகாண சபை கலைந்து விட்டது.

தற்போது கிழக்கு மாகாண சபையின் முழு அதிகாரத்தையும் தன்னகத்தே கொண்டுள்ள ஆளுநர் பதவியை ஏற்றிருக்கின்ற தங்களுக்கு, இவ்வைத்தியசாலை தொடர்பில் மாகாண அமைச்சரவை ஏலவே மேற்கொண்டிருக்கின்ற தீர்மானத்தை அமுல்படுத்துவதென்பது சிரமமான ஒரு விடயமாக இருக்காது என நம்புகின்றோம். இதனையே சாய்ந்தமருது சமூகம் பாரிய நம்பிக்கையுடன் தங்களிடம் வேண்டிநிற்கிறது என்று சாய்ந்தமருது ஷூரா சபை அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X