2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

விசா நெருக்கடி: காதலியை விட்டு பறந்த காதலன்

Editorial   / 2025 செப்டெம்பர் 23 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

H 1 B விசாவில் மாற்றம் செய்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால் உலகம் முழுவதும் உள்ள ஐடி ஊழியர்கள் அவசர அவசரமாக அமெரிக்க சென்று கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் ஒரு காதல் ஜோடி இத்தாலிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். டிரம்பின் அறிவிப்பால் காதலன், தன்னுடைய காதலியை விட்டு பிரிந்து அவசர அவசரமாக அமெரிக்கா சென்றுள்ளார். இதுதொடர்பாக அவரின் காதலி வெளியிட்டுள்ள வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதி  பதவியேற்றதில் இருந்து, தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். நட்பு நாடாக இருந்த இந்தியா - அமெரிக்கா இடையே கடந்த சில மாதங்களாக பனிப்போர் நிலவி வருகிறது.  ஜனாதிபதியாக பதவியேற்ற சில மாதங்களிலேயே விசா விஷயத்தை கையில் எடுத்து நெருக்கடி கொடுத்தார்.

 

ஹெச் 1 பி விசா

இந்நிலையில் கடந்த மாதம் இந்திய பொருட்களுக்கான அமெரிக்கா வரியை 50 சதவீதம் உயர்த்தினார். இதன் காரணமாக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. டிரம்பின் இந்த நடவடிக்கைகளுக்கு பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்தியா - அமெரிக்கா நட்புறவு பாதிக்கப்டும் என்று அமெரிக்காவில் உள்ள எதிர்க்கட்சிகளும் எச்சரித்துவிட்டன.

ஆனால் டிரம்ப் மீண்டும் மீண்டும் இந்தியா மீது நெருக்கடியை சுமத்தி வருகிறார். கடந்த வாரம் திடீரென வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்காக வழங்கப்படும் ஹெச் 1 பி விசா வருட கட்டணத்தை 1 லட்சம் டாலராக (இந்திய மதிப்பில் 88 ரூ.லட்சம்) உயர்த்தி அறிவித்துள்ளார். இதன் காரணமாக அமெரிக்காவுக்காக பணியாற்றும் ஐடி ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொகை அதிகரித்த நெருக்கடி ஒரு பக்கம் என்றால், மறுபக்கம் அதை பதிவு செய்வதற்கு டிரம்ப் நிர்ணயம் செய்த காலக்கெடுவும் மிகவும் குறைவு. இதனால் இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகளைச் சேர்ந்த ஐடி ஊழியர்கள் அவசர அவசரமாக அமெரிக்கா சென்று வருகின்றனர். இதனால் விமான கட்டணங்களும் தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளன.

இது ஊழியர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை அதிகம் பாதிக்கிறது. பலர் தங்கள் சொந்த ஊர்களில் இருந்து அவசர அவசரமாக அமெரிக்கா செல்ல வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். இத்தாலியில் காதலனுடன் பெண் சுற்றுலா சென்றிருந்தார். டிரம்பின் திடீர் அறிவிப்பதால் காதலன் அமெரிக்கா சென்றுவிட்டதாக பெண் வேதனையுடன் கூறியுள்ளார்.

காதலி வேதனை

இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு அந்த பெண், "நானும் என் காதலனும் இத்தாலி தலைநகர் ரோம் நகருக்கு சுற்றுலா வந்துள்ளோம். இத்தாலியன் பாஸ்தா தயாரிப்பது தொடர்பான பயிற்சியில் இருந்தபோது என் காதலன் என்னை விட்டு அவசர அவசரமாக சென்றுவிட்டார். அந்த வகுப்பில் இருந்து மட்டுமல்லாமல், ரோமில் இருந்தே சென்றுவிட்டார்.

விசா கட்டண உயர்வை உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என்பதால் எங்கள் பயணத் திட்டத்தை பாதியில் கைவிட்டு செல்ல வேண்டிய நிலை. எப்படியாவது அமெரிக்கா செல்ல வேண்டும் என்பதால் முதல் விமானத்தை புக் செய்து புறப்பட்டுவிட்டார். இப்போது ரோம் நகரை நான் மட்டும் தனியாக வலம் வந்து கொண்டிருக்கிறேன்.

இத்தாலி பயணத்தை மற்றொரு நாள் கூட திட்டமிட்டுக் கொள்ளலாம். ஆனால் உலகின் வெவ்வேறு பகுதிகளில் இருப்போர், உடனடியாக அமெரிக்க செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். ஒரே நாளில் அவர்களின் உலகம் தலை கீழாக மாறிவிட்டது. எல்லாவற்றுக்கும் கால நேரம் இருக்கிறது." என்று கூறியுள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .