2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

இடமாற்றத்தை தடுக்குமாறு வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 28 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

வடமாகாண சபையால் அதிசிறப்புத் தரத்துக்கு பதவி உயர்வு வழங்கப்பட்ட முகாமைத்துவ உதவியாளர் சேவையைச் சேர்ந்த உத்தியோகஸ்தர்கள், கிழக்கு மாகாண சபையின் கீழுள்ள  அலுவலகங்களுக்கு அதிசிறப்புத்தர உத்தியோகஸ்;தர்களாக இடமாற்றம் பெறுகின்றனர். இந்த இடமாற்றத்தை தடுத்து நிறுத்துமாறு அனைத்து முகாமைத்துவ உதவியாளர்கள் தொழிற்சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுக்கு இன்று புதன்கிழமை இது தொடர்பான மகஜர் அனுப்பியுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் ஏ.ஜீ.முபாறக் தெரிவித்தார்.

அம்மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'இந்த இடமாற்றம் காரணமாக கிழக்கு மாகாண சபையால் நிரப்பப்பட வேண்டிய வெற்றிடங்களின் எண்ணிக்கை குறைகின்றது. இவ்வாறு வெற்றிடங்களின் எண்ணிக்கை குறைவதால், அதிசிறப்பு தரத்துக்கு பதவி உயர்வு பெறக்கூடிய இம்மாகாணத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை குறைந்து அவர்களுக்கான வாய்ப்பும் குறைகின்றது.  

வடமாகாணத்திலுள்ள அதிசிறப்புத்தர முகாமைத்துவ உதவியாளர்கள் கிழக்கு மாகாணத்துக்கு இடமாற்றம் செய்யப்படும்போது, அங்கு ஏற்படும் வெற்றிடங்கள் வடமாகாணத்தை சேர்ந்தவர்களைக் கொண்டே நிரப்பப்படுவதால் அம்மாகாணத்தைச் சேர்ந்தவர்களுக்கே வாய்ப்பு அதிகமாகும்.

மேலும், அதிசிறப்புத் தரத்துக்கு பதவி உயர்வு வழங்கும் பொருட்டு நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின்போது மாகாணங்களுக்கு இடையிலான வெட்டுப்புள்ளி வடமாகாணத்தை விட, கிழக்கு மாகாணத்துக்கு அதிகமாக இருந்தது. இதனால், வடமாகாண சபையிலிருந்து நியமனம் பெற்றவர்களைக் காட்டிலும், அதிக புள்ளிகளைப் பெற்ற கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் நியமனம் பெறவில்லை. வடமாகாண வெட்டுப்புள்ளியைக் கொண்டு நியமனம் பெற்று,  கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றுகின்றமையானது, கிழக்கு மாகாணத்தில் அதிக புள்ளிகளைப் பெற்று நியமனம் கிடைக்காமல் போனவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X