2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

‘இயற்கை வளங்களை பாதுகாப்பது தார்மீக கடமை’

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2017 செப்டெம்பர் 23 , மு.ப. 11:33 - 1     - {{hitsCtrl.values.hits}}

இயற்கை வளங்களைப் பாதுகாப்பது, நாட்டில் வாழும் ஒவ்வொரு பிரஜயின் தார்மீகக் கடமையாகுமென, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ரீ.ஜே. அதிசயராஜ் தெரிவித்தார்.

சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினத்தை முன்னிட்டு, ஒலுவில் கடற்கரை பிரதேசத்தைத் துப்பரவு செய்யும் நிகழ்வு, இன்று  (23) இடம்பெற்றது.

இதனை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

“எமது நாட்டின் இயற்கை வளங்களைப் பாத்து இரசிப்பதற்கு உலகளாவிய ரீதியிலிருந்து உல்லாசப் பயணிகள் பல மில்லியன் ரூபாய் செலவு செய்து நாட்டுக்கு வருகின்றார்கள். இதனால் எமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு கூடுதலான அன்னியச் செலாவனி கிடைக்கின்றது.

“எமது நாடு அபிவிருத்தியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு நாம் ஒவ்வொருவரும் சிறந்த நாடு ஒன்றை கட்டியெழுப்புவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற செயற்படுவதோடு, நாட்டின் சுற்றாடலையும் தூய்மைப்படுத்தும் செய்பாடுகளை முன்கொண்டு, மக்கள் பாதுகாப்புத் தொடர்பான விடயங்களிலும் மிகவும் அக்கரையோடு செயற்பட்டு வருகின்றார்.

“இயற்கை வளங்களையும் கடற்கரை பிரதேசங்களையும் அசுத்தப்படுத்துவோர் மீது சட்டம் வலுவாக்கப்பட்டுள்ளது. எமது மக்கள் கடற்கரை பிரதேசங்களிலும், பொது இடங்களிலும் இன்றும் குப்பை கொட்டும் இடங்களாகவே பார்க்கின்றார்கள்.

“மக்களின் மனதில் மாற்றங்களை கொண்டுவருதல் வேண்டும். இவ்வாறான நாட்டைத் தூய்மைப்படுத்தும் செயற்பாடுகளை மக்கள் முன்கொண்டு செல்வதற்கு அரச அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

“குப்பை தொட்டிகளிலேயே குப்பைகளை இடவேன்றுமென்று அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அதனை மக்கள் உதாசீனம் செய்பவர்களாகவே உள்ளார்கள். அவ்வாறானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு யாரும் தயங்கக் கூடாது.

“ஒவ்வொரு ஜீவராசியும் வாழ்வதற்கு வகைசெய்யும் கடல்களையும் அவை சார்ந்த கடற்கரைகளையும் நாம் தூய்மையாக வைத்திருக்கிறோமா என்றால் அதற்கான பதிலும் கேள்விக்குறிதான்.

“சுற்றுச்சூழல் என்பதும் நிலத்தில் உள்ள குப்பைகளை எல்லாம் அப்புறப்படுத்தி கடலில் கொட்டுவது அல்ல முதலில் சுற்றுச்சூழல் என்பது கடலையும் சேர்த்துத்தான் நாம் அறிந்தோ அறியாமலோ செய்யும் தவறுகள் கடலுக்கும் கடல்வாழ் உயிரினங்களுக்கும் பெரும் கேடு விளைவித்து வருகின்றன.

“கடற்கரைகளில் நாம் தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களை பறவைகள் உண்டு மடிகின்றன. கடலில் கலக்கும் கிரிஸ் மற்றும் எண்ணெய் பொருட்களால் மீன்களும் பிற உயிரினங்களும் இறக்கின்றன.

“நாம் கடல் சூழலை பாதுகாப்பதற்கு நம்மில் கடல் மீது அக்கறை கொண்ட சிலர் கடந்த 30 வருடங்களாக ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மூன்றாம் இதனை மேற்கொண்டு வருகின்றனர். நாம் இத்தினத்தை மாத்திரம் கருத்திற்கொள்ளாமல் நாம் ஒவ்வொரு நாளும் நாமும் நாம் வாழும் சுற்றுச் சூழலை பாதுகாப்பது தலையாய கடமையாகும்” என்றார்.


  Comments - 1

  • SH. தம்ஜீது _ பாலமுனை Sunday, 24 September 2017 04:09 PM

    தரமானதும் மக்கள் விழிப்புணர்வு பெறும் செய்தியாக இதனைப் பார்கின்றேன்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .