2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

உளவளத்துணை மற்றும் தொழில் வழிகாட்டல் செயலமர்வு

வி.சுகிர்தகுமார்   / 2017 ஓகஸ்ட் 12 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் தொழிற்படும் சமுக அபிவிருத்திப் பிரிவின் வலுவூட்டல் வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட சமுர்த்திப் பயனாளிகள் மற்றும் சமுர்த்தி வங்கிச் சங்க நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உளவளத்துணை மற்றும் தொழில் வழிகாட்டல் செயலமர்வு, ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில், வியாழக்கிழமை (10) நடைபெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுர்த்தி சமுக அபிவிருத்திப் பிரிவால் தலைமைப்பீட முகாமையாளர் என்.கிருபாகரன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த நிகழ்வுக்கு, ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸன், அட்டாளைச்சேனை பிரதேச செயலக உளவளத்துணை உதவியாளர் ஏ.மனூஸ் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலக உளவளத்துணை உதவியாளர் திருமதி. ஏ.எம்.சப்றினா ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டிருந்தனர்.

மூன்று அமர்வுகளாகப் பிரிக்கப்பட்டு நடத்தப்பட்ட குறித்த வழிகாட்டல் செயலமர்வின் முதலாவது பகுதியை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸன் முன்னெடுத்திருந்தார்.

அவர், தற்கால சமூகங்களுக்கு உளவளத் துணையின் தேவைப்பாடுகள் தொடர்பாகத் தனது அமர்வின்போது தெளிவுபடுத்தியிருந்ததோடு, வாழ்வாதாரத் தொழில் அபிவிருத்தியில் அவை எவ்வாறான தாக்கங்களைச் செலுத்துகின்றது என்பது தொடர்பாகவும் அச்செயலமர்வில் கலந்துகொண்டோருக்கு விளக்கியிருந்தார்.

இரண்டாவது பகுதியை நடத்திய அட்டாளைச்சேனை பிரதேச செயலக உளவளத்துணை உதவியாளர் ஏ.மனூஸ், குடும்ப உளவளமும் அபிவிருத்தியில் அதன் தாக்கமும் குறித்து முதலில் தெளிவுபடுத்தியிருந்ததுடன், விளக்கக் காணொளிகளூடாகக் குடும்ப உளவளத்தின் சமூகத் தாக்கங்கள் குறித்த தகவல்களைப் பங்குபற்றுனர்களோடு பகிர்ந்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற மூன்றாவது அமர்வில் ஆளுமை மோசடிகள் மற்றும் உளவியல் பிரச்சனைகளை இனங்காணுதல் தொடர்பாக ஆலையடிவேம்பு பிரதேச செயலக உளவளத்துணை உதவியாளர் திருமதி. ஏ.எம்.சப்றினா விளக்கமளித்ததுடன், ஆரம்பச் சிறுபராய அபிவிருத்தியில் ஆளுமை விருத்தி எவ்வாறான தாக்கங்களைச் செலுத்துகின்றது தொடர்பாகவும் எடுத்துரைத்திருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .