2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

காணி அனுமதிப்பத்திரங்களை வழங்குமாறு வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 13 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சந்தோசபுரம் கிராமத்தில் சுனாமிப் பாதிப்புக்குள்ளான கைம்பெண்களுக்காக மண்டானைக் கிராமத்திலிருந்து தெற்காக சுமார் 500 மீற்றர்; தொலைவில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் அமைந்துள்ள காணிகளுக்கான  அனுமதிப்பத்திரங்கள் இதுவரையில் வழங்கப்படவில்லை. எனவே, தங்களுக்கு காணி அனுமதிப்பத்திரங்களை வழங்குமாறும் இந்த வீட்டுத்திட்டப் பயனாளிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அரசசார்பற்ற நிறுவனமொன்றினால் 2006ஆம் ஆண்டு இங்கு கட்டப்பட்ட 13 வீடுகளில் 04 வீடுகளில் மாத்திரமே பயனாளிகள் வசிக்கின்றனர். ஏனைய 09 வீடுகளும் சேதமடைந்து ஆடுகள், மாடுகள் தங்குமிடங்களாக மாறியுள்ளன.

இந்த வீடுகளுக்கு மின்சாரம், குடிநீர் வசதிகள் மற்றும் பாதை வசதி, ஏனைய சுகாதார ரீதியான எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி தாம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பயனாளிகள் கூறினர்.

எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி தங்களினால் இவ்வீடுகளில் வாழ முடியாதெனக் கூறி அயல் கிராமங்களாக காயத்திரி கிராமம், விநாயகபுரம் கிராமம் ஆகியவற்றில் ஏனைய பயனாளிகள் வாழ்ந்து வருகின்றனர்.

இது தொடர்பில் திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜனிடம்  செவ்வாய்க்கிழமை கேட்டபோது, இந்த வீட்டுத்திட்டப் பயனாளிகளின் பிரச்சினைகள் தொடர்பில் உரிய  அதிகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளோம்' என்றார்.

'மேலும், இவர்களின் வீடுகள் அமைக்கப்பட்டுள்ள காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் சில பிரச்சினைகள் காணப்பட்டன. இப்பிரச்சினைகள் சரி செய்யப்பட்டு அக்காணிகளுக்கு நில அளவை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கிவைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இந்தப் பயனாளிகளின் பிரச்சினைகளை மிக விரைவில் தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கையையும் மேற்கொண்டுள்ளோம்' என அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X