2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்துக்கான முட்டுக்கட்டைகளை தகர்த்தெறிய வேண்டும்

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2017 ஓகஸ்ட் 21 , பி.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாய்ந்தமருது பிரதேசத்துக்குத் தனியான உள்ளூராட்சி மன்றம் உருவாக்கப்படுவதற்கு எதிரான முட்டுக்கட்டைகளைத் தகர்த்தெறிவதற்கு பிரதியமைச்சர் எச்.எச்.எம்.ஹரீஸ் முன்வர வேண்டுமென, சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றத்தின் தலைவரும் ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளருமான அல்ஹாஜ் எம்.ஐ.ஏ.ஜப்பார் தெரிவித்தார்.

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து ஆராய்வதற்காக மறுமலர்ச்சி மன்றம், ஞாயிற்றுக்கிழமை இரவு ஒழுங்கு செய்திருந்த விசேட கூட்டத்தில் தலைமை வகித்து உரையாற்றியபோதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

"சாய்ந்தமருது பிரதேசத்துக்குத் தனியான உள்ளூராட்சி மன்றம் ஏற்படுத்தப்படுவது என்பது எமது ஊர் மக்களின் நீண்ட கால தேவையாகும். இதற்கான பல்வேறுபட்ட போராட்டங்களை எமது மறுமலர்ச்சி மன்றம் மேற்கொண்டு வந்ததன் பயனாக அரசியல் தலைமைகள் அனைவரும் ஏற்றுக்கொண்டு, கடந்த சில வருடங்களாக வாக்குறுதிகளை வழங்கி வந்துள்ளனர்.

“அதன்பிரகாரம், சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்துக்கான வர்த்தமானி அறிவித்தல், எதிர்வரும் 28ஆம் திகதி வெளியிடப்படுமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஏ.எம்.ஜெமீல் ஆகியோரிடம் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்ததாக, கடந்த வாரம் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்திருந்தன. அதேவேளை அமைச்சர் ரவூப் ஹக்கீம், பிரதியமைச்சர் எச்.எச்.எம்.ஹரீஸ் ஆகியோரும் தமது முயற்சிகளால் விரைவில் உள்ளூராட்சி மன்றம் உருவாக்கப்படவுள்ளது எனத் தெரிவித்திருந்தனர்.

“இந்த செய்திகளைத் தொடர்ந்து கல்முனைக்குடி பிரதேசத்தை சேர்ந்த சிலர் இதனைத் தடுப்பதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொண்டிருப்பது எமக்குக் கவலையளிக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு கல்முனை தொகுதியின் மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில்  பிரதியமைச்சர் எச்.எச்.எம்.ஹரீஸ் அவசரமாக முன்வர வேண்டும்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .