2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

சிறுபோக நெற்செய்கைக்கு நிலப்பரப்பு அதிகரிப்பு

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 ஏப்ரல் 09 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டத்தில் எதிர்வரும் சிறு போகத்தில் 26 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் மட்டுமே நெற்செய்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர் , நிலப்பரப்பை மேலும் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அம்பாறையில் நேற்று  (08) மாலை இடம்பெற்ற  ஊடக சந்திப்பில் அவர் இந்த விடயத்தைத் தெரிவித்தார்.

இந்த ஊடக சந்திப்பில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

" நாட்டில் ஏற்பட்ட வரட்சி காரணமாக கடந்த வருடங்களை விட இம்முறை அம்பாறை மாவட்டத்தில் குறைந்த அளவிலேயே சிறுபோக நெற்செய்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

“சிறுபோக நெற்செய்கையை மேலும் அதிகரிப்பதற்கு மாவட்ட அரசாங்க அதிபர் துஷித பி. வணிகசிங்க, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆகியோரிடம் கூடுதலாக  மூவாயிரம் ஏக்கர் நெற்செய்கையை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்குமாறு கேட்டுள்ளேன்.

“அம்பாறை சேனநாயக்க சமுத்திரத்தில் 65 ஆயிரத்து, 720 ஏக்கர் கன அடி நீர் மாத்திரமே காணப்படுகின்றது. இது அனைத்து வயல் நிலங்களுக்கும் நீரை வழங்க முடியாது எனத் தெரிவித்து, 26 ஆயிரம் ஏக்கர் வயல் நிலங்களுக்கு மாத்திரமே நீரை வழங்க முடியும் என அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“குறைந்த நிலப்பரப்பில் வேளாண்மை செய்கைக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் அம்பாறை மாவட்டத்தில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, பொருளாதாரத்திலும் எதிர்காலத்தில் பெரும் வீழ்ச்சி ஏற்படும். இதனை கருத்திற்கொண்டே வேளாண்மைச் செய்கை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டார்.

இதேவேளை, வேளாண்மை செய்கைக்கு அனுமதி வழங்கப்படாத பிரதேசங்களில் விவிசாயிகள் உப உணவுப் பயிர்ச்செய்கையை மேற்கொள்ள முடியுமெனவும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .