Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Niroshini / 2016 மார்ச் 23 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
வெளியாகியுள்ள கா.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் படி முதல் 10 தரவரிசைப்படுத்தலில் தமிழ் மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை வெளியிடுமாறும் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் வீ.ரி. சகாதேவராஜா இன்று புதன்கிழமை தெரிவித்தார்.
இது தொடர்பாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்துக்கு மகஜர் அனுப்ப வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
க.பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுபேற்றின் படி இம்முறை கூடுதலான மாணவர்கள் சித்தியடைந்திருப்பது வரவேற்புக்குரியது. இதேவேளை, தேசிய ரீதியில் தரவரிசைப்படுத்தும் போது சிங்கள மொழி மூல மாணவர்களை மாத்திரம் கவனத்திற் கொண்டுள்ளமை பாரபட்சமாகும்.
இது தமிழ் மொழி மூல மாணவர்க்கு இழைக்கப்படும் அநீதியாகும். இது அவர்களது அடிப்படை உரிமையை மீறுகின்ற செயலாகும்.எனவே, இதனை பகிரங்கப்படுத்துமாறு வேண்டுகின்றோம்.
மேலும், கல்வி இராஜாங்க அமைச்சர் பி. இராதாகிருஷ்ணன் இது விடயத்தில் தலையிட்டு தமிழ்மொழிமூல மாணவர்களது உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்.
தமிழ்மொழிமூல ஆசிரியர் மற்றும் மாணவர்களது உரிமைகள் மற்றும் நலன்களில் கவனம் செலுத்திவரும் பாரம்பரிய தொழிற்சங்கம் என்ற அடிப்படையில் இது விடயத்தில் அக்கறை செலுத்த வேண்டிய கடமையும் பொறுப்பும் எமக்குள்ளது. அந்த வகையில் தங்களது கவனத்தை ஈர்க்கின்றோம்.
நாட்டில் மூன்று மொழி மூலங்களில் பரீட்சையை நடத்திவிட்டு சிங்கள மொழி மூல மாணவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து மறுநாளே அலரிமாளிகைக்கு வரவழைத்து பாராட்டிக்கௌரவிப்பதென்பது கல்வியில் பாரபட்சம் காட்டப்படுவதற்கு ஒப்பானதாகும். இது தமிழ்மொழிமுல மாணவரது மனநிலையில் பாரியபாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.
கடந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற இவ்வாறன அராஜக செயற்பாடுகள் இன்றைய நல்லாட்சியிலும் தொடர்வது முறையா?
சிங்கள மற்றும் தமிழ்மொழிமூல பரீட்சை முடிவுகளை ஒரு பட்டியலில் சேர்த்து தரப்படுத்துவதென்பது ஏற்புடையதல்ல.
நாட்டில் சிங்கள மொழி மூல பாடசாலைகள், தமிழ் மொழி மூல பாடசாலைகள் என இரு பகுதி பாடசாலைகளே உள்ளன. அது போல இரு மொழி மூலத்தில் பரீட்சைகளும் நடைபெறுவது தெரிந்ததே. அப்படி இரு மொழி மூலத்தில் நடத்திவிட்டு ஒரு மொழிக்கு மாத்திரம் தரப்படுத்தல் பெறுபேற்றினை வெளியிடுவதென்பது பாரபட்சமாகும்.
அதற்காக இது பொதுவான தரப்படுத்தல் என்ற கருத்துக்கும் வரமுடியாது. அப்படியெனின் அந்த முதல் பத்தில் ஒரு தமிழ் மொழி மூல மாணவனாவது வர நிகழ்தகவு இல்லையா?
கருப் பாடங்களைப் பொறுத்த வரை ஒரே வினாக்கள் மூன்று மொழிகளிலும் அமையும். ஆனால் சிங்களம், தமிழ், சமயம் ஆகிய பாடங்களில் கேட்கப்படும் வினாக்கள் இரு மொழி மூலத்துக்கும் வெவ்வேறானவையாகும். சிலசமயம் பௌத்தம் பாடத்துக்கான வினாக்கள் இலகுவாகவிருக்க இந்து அல்லது இஸ்லாம் பாடத்துக்கான வினாக்கள் கஸ்டமாக இருக்கின்ற சந்தர்ப்பமும் வரலாம்.
இந்த சந்தர்ப்பத்தில் இவ்விரு பாடத்துக்கான புள்ளிகளை ஒரே பார்வையில் பார்த்து ஒரே பட்டியலில் தரப்படுத்துவதென்பது பொருத்தமல்ல .அவற்றைப் பொதுமைப்படுத்தமுடியாது என்பது சகலரும் அறிந்தவிடயமே.
இதைவிட இற்றைக்கு 06வருட காலத்துக்கு முன்பு தமிழ் மொழியில் முதலிடம் பெற்ற மாணவியாக காரைதீவைச் சேர்ந்த ச.சாலினி தெரிவாகியிருந்தார். அன்று அப்புள்ளியை வெளியிட்ட பரீட்சைத் திணைக்களத்துக்கு இன்று வெளியிடத்தயங்குவது ஏன்?
முதல் 10 நிலைகளில் ஒரு தமிழ்மொழிமூல மாணவனாவது வரமுடியாதா? அதற்கான நிகழ்தகவு ஏனில்லை? உயர்தரத்திலும் பல்கலையிலும் சாதனை படைக்கின்ற தமிழ் மாணவர்கள் ஏன் இப்பரீட்சையில் சாதனை படைத்திருக்கமுடியாது? எங்கோஓரிடத்தில் முதல் தமிழ் மாணவனின் உச்சப்புள்ளி வந்திருக்கவேண்டுமே. அது எங்கே?
எனவே ஒவ்வொரு மொழிமூலத்துக்கும் தனித்தனியாக தரநிலைப்படுத்தல்கள் வெளியிடப்படவேண்டும். அது பகிரங்கமாக வெளியிடப்படவேண்டும். இதேவேளை, மாவட்ட நிலை தரப்படுத்தல்களும் வெளியிடப்படவேண்டும். எதனையும் பகிரங்கமாக வெளிப்படுத்தினால் எவருக்கும் சந்தேகம் எழாது என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
39 minute ago
3 hours ago