2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

திண்மக்கழிவகற்றல் சேவைக்கு வருடாந்தம் ரூ.72 மில். செலவு

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2019 மார்ச் 18 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கல்முனை மாநகர சபையால் முன்னெடுக்கப்படுகின்ற திண்மக்கழிவகற்றல் சேவைக்கு வருடாந்தம் 72 மில்லியன் ரூபாய் செலவு செய்யப்படுவதாகத் தெரிவித்த கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப், இச்செலவை ஓரளவு ஈடுசெய்வதற்கு, வர்த்தர்கள் ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட ஹோட்டல்களின் உரிமையாளர்களுடனான விசேட கலந்துரையாடல், மேயர் செயலகத்தில், நேற்று (17) மாலை நடைபெற்றபோதே, இந்த வேண்டுகோளை அவர் விடுத்தார்.

கல்முனை மாநகர சபை எல்லைக்குள் தினசரி 80 தொன் குப்பைகள் சேர்வதாகவும் இதற்காக அரசாங்கம் நிதியொதுக்கீடு செய்வதில்லையெனவும் மக்களிடம் குப்பை வரி அறவிடப்படுவதுமில்லையெனவும் மேயர் தெரிவித்தார்.

மாநகர சபையின் நிதி நெருக்கடிக்கு மத்தியில், அதன் சொந்த வருமானத்தில் பெரும்பகுதி, திண்மக்கழிவகற்றல் சேவைக்கே செலவழிக்கப்படுவதாகவும்  இதனால் ஏனைய அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், கல்முனை மாநகர சபை எல்லைக்குள் குப்பை கொட்டுவதற்கென்று ஓர் இடமில்லை எனச் சுட்டிக்காட்டிய மேயர், அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பள்ளக்காட்டிலேயே குப்பைகளைக் கொட்டுவதாகவும் இதற்காகத் தமது வாகனங்கள், சுமார் 40 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டியுள்ளதாகவும் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கும் கட்டணம் செலுத்தி வருவாதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே, வர்த்தகர்கள் குறிப்பாக ஹோட்டல்களின் உரிமையாளர்கள்  இச்செலவுகளை ஓரளவு நிவர்த்தி செய்வதற்காக சேவைக்கட்டணம் செலுத்தி, தமக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டுமென, மேயர் கேட்டுக்கொண்டார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .