2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் 15 பேருக்கு விளக்கமறியல்

Editorial   / 2018 ஒக்டோபர் 25 , பி.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

யூ.எல். மப்றூக்

தென்கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்தை, கடந்த இரு வாரங்களாக ஆக்கிரமித்திருந்த 15 மாணவர்களை, இன்று (25) பொலிஸார் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.

அக்கரைப்பபற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் வந்திருந்த பொலிஸார்,  நிர்வாகக் கட்டடத்தை ஆக்கிரமித்திருந்த மாணவர்களைக் கைது செய்தனர்.

தென்கிழக்குப் பல்லைக்கழக நிர்வாகக் கட்டடத்தை ஆக்கிரமித்திருந்த மாணவர்களை அங்கிருந்து அகன்று செல்லுமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம், ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

அதனையும் மீறி, தொடர்ச்சியாக அந்த மாணவர்கள் நிர்வாகக் கட்டடத்தை ஆக்கிரமித்திருந்தமையால், அவர்களைக் கைது செய்யுமாறு, நீதிமன்றம் கட்டளை பிறப்பிருந்தது.

இந்த நிலையில், குறித்த மாணவர்களைக் கைது செய்யாமல், பொலிஸார், அலட்சியமாக நடந்து கொண்டார்கள் எனக் குற்றஞ்சாட்டியிருந்த பல்கலைக்கழக சமூகத்தினர், பொலிஸாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றில் அண்மையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் (24) இரவு, பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்த பொலிஸார், நிர்வாகக் கட்டடத்தை ஆக்கிரமித்திருந்த மாணவர்களை அங்கிருந்து அகன்று செல்லுமாறு வலியுறுத்தியிருந்தனர்.

அம்பாறைப் பொலிஸ் பிரிவுக்கான பொலிஸ் அத்தியட்சகர், அக்கரைப்பற்றுப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோரின் தலைமையிலான பொலிஸ் குழு, இதன்போது வருகை தந்திருந்தது.

ஆயினும், அம்பாறை மாவட்டத்துக்கான பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை ஒன்றில் ஈடுபட்ட பின்னரே, தாம் ஆக்கிரமித்துள்ள இடத்திலிருந்து விலகிச் செல்வது குறித்து தீர்மானிக்க முடியும் என்று, அங்கிருந்த மாணவர்கள் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து, குறித்த பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்து தருவதாக, அந்த மாணவர்களிடம் கூறிச் சென்ற பொலிஸார், இன்று காலை, பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்து, ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருந்த மாணவர்களைக் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில், குறித்த 15 மாணவர்களையும், அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்திய போது, அடுத்த மாதம் 01ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.

பகடிவதையில் ஈடுபட்டார்கள் எனும் குற்றச்சாட்டில், தகவல் தொழில்நுட்ப பீட மாணவர்கள் சிலருக்கு வழங்கப்பட்டுள்ள வகுப்புத்தடையை நீக்குமாறு கோரி, அதே பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள், இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .