2025 மே 02, வெள்ளிக்கிழமை

பாதை அனுமதிப்பத்திரத்தை மீறல்: தடையுத்தரவுக்கு நடவடிக்கை

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 28 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா

வழித்தடை அனுமதிப்பத்திரமின்றி, கல்முனையில் இருந்து மட்டக்களப்பு ஊடாக கொழும்புக்குப் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுகின்ற தனியார் பஸ்களுக்கு எதிராக, நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெறுவதற்கு, பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் நேற்றுத் தெரிவித்தார்.  

இந்த இணக்கப்பாட்டின் பிரகாரமே, அனுமதிப்பத்திரத்தைக் கொண்டிருக்கின்ற பஸ்களின் உரிமையாளர்கள் மேற்கொண்ட பகிஷ்கரிப்பு நடவடிக்கை, முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாகவும் அவர் கூறினார்.  

கல்முனையில் இருந்து மட்டக்களப்பு ஊடாக வழித்தடை அனுமதிப்பத்திரத்துடன் கொழும்புக்கு போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்ற தனியார் பஸ்களின் உரிமையாளர்கள், ஞாயிற்றுக்கிழமை இரவு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதுடன், காரைதீவு கண்ணகி அம்மன் கோவில் முன்பாக, அனைத்து பஸ்களையும் நிறுத்தி, கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

இதன்போது, அங்கு விரைந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், தொலைபேசி மூலம் பொலிஸ் உயர் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, அவ்விடத்துக்கு வரவழைத்து, குறித்த அனுமதிப்பத்திரம் பெற்றுள்ள பஸ்களின் உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.  

வழித்தடை அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுகின்ற பஸ்களின் உரிமையாளர்கள் மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, இன்று அவர்களது பஸ்கள் சேவையில் ஈடுபடாமல் தடுக்கப்பட வேண்டும் என இதன்போது பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் வலியுறுத்திய தனியார் பஸ்களின் உரிமையாளர்கள், இல்லா விட்டால், தாம் இன்று சேவையில் ஈடுபடாமல் பகிஸ்கரிப்பைத் தொடருவோம் என்று தெரிவித்தனர்.  

இதற்குப் பதிலளித்த பொலிஸ் உயர் அதிகாரிகள், உரிய நடவடிக்கைக்கு கால அவகாசம் கோரியதுடன், அடுத்த ஒரு சில தினங்களுக்குள் சட்டவிரோதமாக சேவையில் ஈடுபடும் பஸ்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் தடையுத்தரவைப் பெற்று, தடுப்பதற்குரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து பகிஷ்காரிப்பு முடிவுக்கு வந்தது.

கல்முனைப் பிராந்தியத்தில் இருந்து தினசரி இரவு 8 மணிக்குப் புறப்படுகின்ற கொழும்புக்கான பஸ்கள் அனைத்தும், ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்தப் பகிஷ்கரிப்பு நடவடிக்கை காரணமாக, இரவு 10.30க்குப் பின்னரே புறப்பட்டுச் சென்றமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X