2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

மருதமுனையில் கொரோனா வைத்தியசாலை

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 01 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா. ஏ.எல்.எம். ஷினாஸ்

மருதமுனை வைத்தியசாலை, கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் விசேட வைத்தியசாலையாக செயற்படுத்தப்படும்போது, அப்பிரதேச மக்களுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது என உறுதியளித்துள்ள கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன், இது விடயத்தில் எவரும் வீண் அச்சம் கொள்ள வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மருதமுனை வைத்தியசாலையை கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் விசேட வைத்தியசாலையாக செயற்படுத்துவதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், பிரதேச முக்கியஸ்தர்கள் குழுவொன்று, நேற்று  (30) மாலை, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரை சந்தித்து கலந்துரையாடியபோதே, அவர் இதனைக் கூறினார். 

கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் முன்னிலையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், மருதமுனையை பிரதிநிதித்துவப்படுத்தும் மாநகர சபை உறுப்பினர்கள், உலமா சபை, பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள், அதிபர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது குறித்த வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமாயின், அதனை சூழவுள்ள பாடசாலை மற்றும் அரபுக் கல்லூரி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதிப்புகள் ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுவதாக, பிரதேச முக்கியஸ்தர்கள் தெரிவித்தனர். 

இதற்கு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன் பதிலளிக்கையில், “கொரோனா சிகிச்சைக்காக இவ்வைத்தியசாலையை தெரிவுசெய்ததில் எமது பங்களிப்பை விட மேலிடத்து பணிப்புரையே முக்கியமாக அமைந்திருந்தது.

“தற்போது புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையிலேயே தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. எம்மிடம் கேட்கப்படுகின்ற தகவல்களையே நாம் வழங்குகின்றோம். எமக்கு விடுக்கப்படுகின்ற பணிப்புரைகளை செயற்படுத்துகின்ற அதிகாரிகளாவே நாம் செயற்படுகின்றோம். நாங்கள் இன, மத, பிரதேச ரீதியாக சிந்தித்து எவ்வித முடிவையும் எடுப்பதில்லை.

“எவ்வாறாயினும், மருதமுனை வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படவுள்ள கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் செயற்பாட்டினால், பிரதேச மக்களுக்கோ வைத்தியசாலையை சூழ நடமாடுகின்ற எவருக்குமோ ஒருபோதும் எவ்விதப் பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என்ற உத்தரவாதத்தை நான் வழங்குகின்றேன்.

“எவ்வாறாயினும், இது விடயமாக பிரதேச மக்களிடையே ஏற்பட்டிருக்கின்ற அச்சம், சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்காக விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X