2025 மே 21, புதன்கிழமை

முதியோர் பூங்கா அமைப்பது தொடர்பில் ஆராய்வு

Kogilavani   / 2016 ஏப்ரல் 03 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா

அரச சேவை ஓய்வூதியர்களின் நலன் கருதி சாய்ந்தமருது பிரதேசத்தில் முதியோர் பூங்கா ஒன்றை அமைப்பதற்கு காணி ஒன்றை ஒதுக்கீடு செய்வதற்கு தான் தயாராக இருப்பதாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தெரிவித்தார்.

அரச சேவை ஓய்வூதியர் நம்பிக்கை நிதியத்தின் சாய்ந்தமருது பிரதேச செயலகக் கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம் நேற்று சனிக்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அமைப்பின் தலைவரும் முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளருமான எம்.ஐ.அப்துல் ஜப்பார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில், 'அரச சேவை ஓய்வூதியர்களின் பொழுது போக்குக்காக ஒரு முதியோர் பூங்கா அமைப்பதற்கு உதவுமாறு என்னிடம் இங்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதற்காக சாய்ந்தமருது கடற்கரை பிரதேசத்தில் ஓர் இடமொன்று ஏற்கனவே என்னால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த இடம் பொருத்தமில்லாவிட்டால் கரைவாகு வயல் பகுதியில் ஒரு காணித்துண்டு ஒன்றை ஒதுக்கித் தருவதற்கு நான் தயாராக உள்ளேன்;. அதனை மண்ணிட்டு நிரப்பி அங்கு பூங்காவொன்றை அமைக்க முடியும். அதற்கான வேலைத் திட்டம் மற்றும் வரைபடத்தை தயாரிப்பதுடன் நிதி மூலங்களையும் கண்டறிவது அவசியமாகும்.

சாய்ந்தமருது பிரதேசத்தில் அரச சேவை ஓய்வூதியர்கள் 330பேர் இருக்கின்ற போதிலும் அவர்களுள் 111பேர் இன்னும் அரச சேவை ஓய்வூதியர் நம்பிக்கை நிதியத்தில் இணைந்து கொள்ளவில்லை. இனிவரும் காலங்களில் அனைவரையும் அந்த நிதியத்தில் இணைத்துகொள்ள வேண்டும் என ஓய்வூதிய திணைக்களம் கட்டாயப்படுத்தியுள்ளது.

ஏனெனில் அந்த நம்பிக்கை நிதியத்தினால் கிடைக்கும் நன்மைகள், அனைத்து ஓய்வூதியர்களுக்கும் போய்சேர வேண்டும் என அரசாங்கம் எதிர்பார்க்கிறது. அதனால் எமது பிரதேச செயலகம் அதுவிடயத்தில் கூடிய கவனம் செலுத்தவுள்ளது.

இதேவேளை, எமது பிரதேச செயலகத்தில் அனைத்து ஓய்வூதியர்களின் சம்பள மாற்றங்களை நேர்த்தியாக செய்து முடித்துள்ளோம்.

ஓய்வூதியர்களின் எந்தவொரு பிரச்சினை தொடர்பிலும் தீர்வுகளை பெற்றுத் தருவதற்கு எமது செயலகம் எந்த நேரத்திலும் தயாராகவே உள்ளது. ஓய்வூதிய திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகம் எனக்கு தனிப்பட்ட முறையில் நெருக்காமானவர் என்ற அடிப்படையில் அந்த மட்டத்தில் ஏதாவது பிரச்சினைகள் இருந்தாலும் நான் உதவுவதற்கு தயாராக உள்ளேன். அத்துடன் இந்த சங்கத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்தும் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்' என்றார்.

இந்நிகழ்வில் அரச சேவை ஓய்வூதியர் நம்பிக்கை நிதியத்தின் அம்பாறை மாவட்டக் கிளையின் தலைவர் எம்.செல்லத்துரை, செயலாளர் ஏ.எல்.எம்.அமீன்,  சாய்ந்தமருது கிளையின் செயலாளர் ஏ.எல்.மீராலெப்பை, பொருளாளர் எம்.எம்.பாறூக், சாய்ந்தமருது பிரதேச செயலக கணக்காளர் எம்.எப்.உசைமா, டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல், ஓய்வுபெற்ற பொறியியலாளர் அப்துல் அஜீஸ் ஆகியோரும் உரையாற்றினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X