2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மாயக்கல்லிமலை புத்தர் சிலை விவகாரம்: ‘அரசாங்கத்துக்கு எதிரான சதி?’

Gavitha   / 2016 நவம்பர் 07 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ.ஹுஸைன், வா.கிருஸ்ணா

அம்பாறை - இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாயக்கல்லி மலையில், புத்தர் சிலை வைக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இருப்பதாக கூறப்படும் அமைச்சர், அரசாங்கத்துக்கு எதிரான சக்திகளின் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துகின்றாரா என, கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் கேள்வி எழுப்பியுள்ளார்.    இது தொடர்பாக, நேற்று ஞாயிற்றுக்கிழமை (06), அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  “மாயக்கல்லிமலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதுடன் மாத்திரமன்றி, அதற்கு அருகிலுள்ள காணியையும் தேரர்கள் கோரியிருப்பதாக அறிகின்றேன். கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், சிறுபான்மைச் சமூகத்தினரின் பூர்வீக இடங்கள், திட்டமிடப்பட்ட வகையில் ஆக்கிரமிக்கப்பட்டன. 

“யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், தமது சொந்த இடங்களுக்குத் திரும்பும்போது, புதிய குடியேற்றங்களையும் இராணுவ முகாம்களையுமே அவர்களால் காண முடிந்தது. இந்த நிலைமையை மாற்றியமைக்கவே, சிறுபான்மை மக்கள் பாரிய எதிர்பார்ப்புக்களுடன், நல்லாட்சி அரசாங்கத்துக்கு வாக்களித்தனர். ஆனால் இன்று, ஜனாதிபதியும் பிரதமரும் விரும்பாத பல விடயங்கள், திட்டமிடப்பட்ட வகையில் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. 

“மாயக்கல்லிமலையில் சிலை வைக்கப்பட்டுள்ளமைக்கு பின்னால், நல்லாட்சியின் முக்கிய அமைச்சரொருவர் இருப்பதாக கூறப்படுகின்றது. அவ்வாறாயின், அந்த அமைச்சர் தேசிய அரசாங்கத்தைக் கவிழ்க்க முயலும் சக்திகளுக்கு துணை போகின்றாரா என்ற சந்தேகம் எழுகின்றது. 

“சிறுபான்மைச் சமூகத்தின் மத்தியில், நல்லாட்சியின் பெயரை மங்கி மறையச் செய்வதற்கான பல விடயங்கள், திரைமறைவில் முன்னெடுக்கப்படுகின்றன. அதன் ஓர் ஒப்பந்தத்தை, இந்த அமைச்சர் பொறுப்பேற்று, கிழக்கில் முன்னெடுக்கின்றாரா என்ற சந்தேகம், நல்லாட்சிக்கு வாக்களித்த சிறுபான்மை மக்கள் மனங்களில் எழுந்துள்ளது. இப்பொழுது இறக்காமத்தில் வைக்கப்பட்டுள்ள சிலை, எதிர்காலத்தில் சிறுபான்மையினரின் மதத்தலங்களுக்குள் வைக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

“கிழக்கில், தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள், ஒற்றுமையாகவும் ஐக்கியத்துடனும், வாழ்ந்து வருகின்றனர். அதனை விரும்பாத சிலர், தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவே இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக எண்ணத் தோன்றுகின்றது. இந்த சம்பவத்தினால், இறக்காமம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் மத்தியில், அச்சம் ஏற்பட்டுள்ளது. 

“எனவே, இது தொடர்பிலான நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் அதிகாரிகள், நியாயமாக நடந்துகொள்ள வேண்டும். அவ்வாறு அவர்கள் நடந்துகொள்ள தவறுமிடத்து, இந்த விடயத்தை ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்துக்கு கொண்டுசெல்வேன் என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்” என, முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .