Suganthini Ratnam / 2016 நவம்பர் 08 , மு.ப. 07:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
அம்பாறை, இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மாணிக்கமடு கிராம அலுவலர் பிரிவிலுள்ள மாயக்கல்லி மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அம்பாறை மாவட்டச் சர்வமதப் பேரவைக்கு பணிக்கப்பட்டுள்ளதாக தேசிய சமாதானப் பேரவையின் செயற்றிட்ட அதிகாரி சாந்த பத்திரண, இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
மாயக்கல்லி மலையில் புத்தர் சிலை வைப்புக்கு அம்பாறை மாவட்ட சர்வமதப் பேரவையில் அங்கத்தவராகவுள்ள பௌத்த தேரர் ஒருவரும் பின்னணியிலிருந்து கருமம் ஆற்றியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவது தொடர்பில் கேட்டபோதே, அவர் இதனைக் கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 'சர்வமத மற்றும் சர்வ இன அமைப்புகளிலுள்ள அங்கத்தவர்களின் பரஸ்பர புரிந்துணர்வுடனான சகோதர வாஞ்சையின் கருத்துப் பரிமாறல்கள் மூலமே அடிமட்டத்தில் உறுதியான சமாதானத்தை கட்டியெழுப்ப முடியும் என்று தேசிய சமாதானப் பேரவை உறுதியாக நம்புகின்றது. அதன் அடிப்படையிலேயே மாவட்ட மட்டத்தில் அனைத்துச் சமூக மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சர்வமதப் பேரவைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த அமைப்பிலுள்ள அங்கத்தவர்கள் மக்களின் நம்பிக்கையைப் பெற்றவர்களாக இன, மத, மொழி, பிரதேச, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் கடமையாற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தேசிய சமாதானப் பேரவைக்கு உண்டு' என்றார்.
'அம்பாறை மாவட்ட தேசிய சமாதானப் பேரவையில் அங்கத்துவம் வகிக்கும் குறித்த பௌத்த தேரர், புத்தர் சிலை வைப்பு விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுத் தொடர்பில் முழுமையான அறிக்கை சமர்ப்பிக்குமாறு அம்பாறை மாவட்ட சர்வமதப் பேரவையிடம் கேட்கப்பட்டுள்ளது. அறிக்கை கிடைத்ததும் இந்த விவகாரம் தொடர்பில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
எந்தவொரு மத, இன மக்களினதும் அவநம்பிக்கையையும் வெறுப்பையும் ஏற்படுத்தும் செயற்பாடுகளில் சர்வமதப் பேரவை அங்கத்தவர்கள் ஈடுபடக்கூடாது என்பதே அந்த அமைப்பின் அடிப்படை ஒழுக்கமாக எதிர்பார்க்கப்படுகின்றது.
அதனை நாம் காலத்தின் தேவை கருதியும் இந்த நாட்டின் எதிர்காலச் சந்ததியின் நன்மை கருதி செய்தாக வேண்டும்' எனவும் அவர் கூறினார்.
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago