2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

'அபிவிருத்திக்காக தமிழர்களின் உரிமையைத் தாரை வார்க்க முடியாது'

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 20 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில்  அபிவிருத்தியும் அரசியல் தீர்வும் பாரிய சவாலான விடயங்களாக அவர்களுக்கு அமைந்துள்ளன. இருந்த போதிலும், அபிவிருத்திக்காக மாத்திரம்; அவர்களின் இலட்சியங்களை தாரை வார்க்கும் நிலைமைக்கு ஒருபோதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் செல்லாது. இதனை தமிழ் மக்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும் என கிழக்கு மாகாணக் கல்வி மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி தெரிவித்தார்.

திருக்கோவில் செயலகப் பிரிவுக்கு உட்பட்ட தங்கவோலயுதபுரம், கஞ்சிகுடியாறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வீடுகளைப் பூரணப்படுத்துவதற்காக அவர்களுக்கு சீமெந்துப் பக்கெட்டுகள் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் தலைமையில் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்;பினர், தமிழ் மக்களை தாங்களே ஆள்கின்ற சுயாட்சி முறையான சமஷ்டியைக்  கோரி நிற்கின்றனர். இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படும்போது, தமிழர்கள் மாத்திரம் நன்மை அடையப்  போவதில்லை. இந்த நாட்டில் வாழ்கின்ற அனைத்து மக்களும் கௌரவம், சமத்துவம் மற்றும்  சந்தோஷமாக வாழக்கூடிய நிலைமையை  ஏற்படுத்தக்கூடிய தீர்வு யோசனையே இந்த சமஷ்டி ஆட்சிமுறைத்  திட்டம் ஆகும்'; என்றார்.
'இதனைச் சிலர், தங்களின் சுய அரசியல் இலாபங்களுக்காக அதன் ஆரோக்கியமான விடயங்களை மறைத்துவிட்டு, பேரினவாத மக்களிடம் பிழையான செய்திகளை முன்னெடுத்துச் செல்கின்றனர்.

சமஷ்டியை தமிழர்கள் கேட்பதாலோ அல்லது தமிழர்களுக்கு சமஷ்டி முறையை வழங்குவதாலோ இந்த நாட்டில் பிரிவினை ஏற்படப் போவதில்லை. இதனைப் பூதாகரமாக பேரினவாத மக்களிடம் தெரிவித்து, அரசியலில் சிலர் குளிர் காய்கின்றனர். இது மாற்றம் பெற வேண்டும்.

மேலும் அபிவிருத்தியை புறந்தள்ளிவிட்டு, அரசியல் தீர்வை மாத்திரம்; ஏற்றுச் செயற்பட முடியாது. அபிவிருத்தி என்பது மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினையாகும். இதற்கும் நாம் சிறந்த தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
இந்நிலையில், மாகாணத்தின் ஊடாக மக்களுக்கான அபிவிருத்தியையும் மத்தியின் ஊடாக அரசியல் தீர்வையும் பெற்றுக் கொடுக்கும் வகையில் இன்று நாம் பயணிக்கின்றோம்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அதிகாரத் தீர்வையும் அபிவிருத்தியையும் வேகமாக பெற முடியாது. மெதுவாகவே ஒவ்வொரு காரியத்தையும் ஆராய்ந்து தீர்க்கமான முடிவுகளை பெற வேண்டும். இதற்கு தமிழ் மக்கள் தங்களிடம் இருக்கின்ற அரசியல் ரீதியான உறக்க நிலையிலிருந்து விழிக்க வேண்டும். இது எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அரசியல் தீர்வுக்கு பலமாக அமையும்' எனவும் அவர்  கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X