2025 ஜூலை 07, திங்கட்கிழமை

'இளைஞர் நாடாளுமன்றத் தேர்தல் முடிவினால் முரண்பாடு'

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 13 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

கடந்த 07.11.2015 இல் நடைபெற்ற இளைஞர் நாடாளுமன்றத் தேர்தல் முதலாவது தடவையாக தேர்தல் தொகுதி அடிப்படையில் நடைபெற்றது. இத்தேர்தல் முடிவு இனங்களுக்கிடையே முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளதாக கல்முனை மாநகரசபையின் பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீத் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில், 'மட்டக்களப்பு, பொத்துவில் ஆகிய தொகுதிகள் இரட்டை அங்கத்தவர் தொகுதியாக அமையப்பெற்றிருப்பது அனைவரும் அறிந்ததே.  தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகள் தலா ஒவ்வொருவர் தெரிவு செய்யப்படும் வகையிலேயே பொத்துவில், மட்டக்களப்பு தொகுதிகள் அமையப்பெற்றுள்ளன.

இவ்விடயம் சம்பந்தமாக இளைஞர் விவகார அமைச்சும் தேசிய இளைஞர் சேவை மன்றமும் கவனத்திற்கொள்ளாமை பாரிய தவறு. இத்தவறினால் மட்டக்களப்பு தொகுதியில் கிடைக்க வேண்டிய முஸ்லிம் பிரதிநிதித்துவமும் பொத்துவில் தொகுதியில் தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய பிரதிநிதித்துவமும் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.

இளைஞர் விவகார அமைச்சும் இளைஞர் சேவை மன்றமும் இதுபோன்ற தவறுகள் எதிர்காலத்தில் நிகழாவண்ணம் இருப்பதை உறுதிசெய்ய உடனடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமெனக் கேட்டுக்கொள்வதுடன், இளைஞர் நாடாளுமன்றத் தேர்தல் முறையை மீளாய்வு செய்தல் வேண்டும்.

தேர்தலில் இளைஞர் கழக உறுப்பினர்களுக்கு மாத்திரம் போட்டியிடுவதற்கும் வாக்களிப்பதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ள முறையானது மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஏனெனில், நடைமுறையிலுள்ள தேர்தல் முறையானது பிரதேச செயலக அதிகாரிகளின் செல்வாக்குக்குட்படுத்தப்பட்டு வருவதாக பரவலான விசனங்களும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எனவே, நீதியானதும் பக்கச்சார்;பற்றதும் ஜனநாயகத்தன்மை வாய்ந்ததுமான தேர்தலொன்றுக்கு செல்ல வேண்டுமானால் நாட்டிலுள்ள அனைத்து இளைஞர்களும் தேர்தலில் போட்டியிடுவதற்கும் வாக்களிப்பதற்குமான சந்தர்ப்பம் வழங்குகின்றதான தேர்தல் முறையொன்றை அறிமுகம் செய்ய இளைஞர் விவகார அமைச்சும் தேசிய இளைஞர் சேவை மன்றமும் முன்வர வேண்டும்' என்றார்.

இது இவ்வாறிருக்க, இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலில் இன ரீதியான பிரதிநிதித்துவங்களை உறுதிசெய்யும் பொருட்டு இரட்டை அங்கத்தவர் முறைமை அறிமுகப்படுத்தப்பட வேண்டுமென கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஏ.எல்.அப்துல் மஜீத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் தேசிய  இளைஞர் சேவை மன்றத் தலைவர் ஆகியோருக்கு இக்கோரிக்கையை வலியுறுத்தி இன்று வெள்ளிக்கிழமை கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .