2025 ஜூலை 17, வியாழக்கிழமை

காஸான் கேணி காணிகளை மீள வழங்குமாறு கோரிக்கை

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 18 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அட்டாளைச்சேனைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட ஒலுவில், காஸான் கேணி விவசாயக் காணிகள் மற்றும் குடியிருப்புக் காணிகளை மீள வழங்குமாறு காஸான் கேணி காணி உரிமையாளர் சங்கத் தலைவர் அகமதுலெப்பை மிஸ்பாக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பான மகஜரை  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்று (18)  அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

அம்மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,'1980ஆம் ஆண்டில் அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகத்தால் இக்காணிகளுக்குரிய அனுமதிப்பத்திரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டிருந்தன தற்போது இக்காணி அபகரிக்கப்பட்டு,  அதில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,  இக்காணிகளை  வேறு நபர்களுக்கு வழங்குவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரியவருகின்றது.

சுமார் 63 ஹெக்டேயர் காணி அபகரிக்கப்பட்டுள்ளதால், சுமார் 59 குடும்பங்கள் கடந்த 06 வருடங்களாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில் 2000ஆம் ஆண்டில்; இக்காணிகள் அளக்கப்பட்டு எல்லைக் கற்கள் இடப்பட்டிருந்தன. இந்நிலையில், யானை வேலி அமைப்பது என்ற போர்வையில் இக்காணிகளுக்கு இடப்பட்டிருந்த எல்லைக் கற்கள் அகற்றப்பட்டு, அக்காணிகளை தற்போது வன இலாகாத் திணைக்களம் பொறுப்பேற்றுள்ளதாக நாம் அறிகின்றோம்.

மேலும், அக்காணிகளில் மர நடுகைத் திட்டம் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நாம் அறிகின்றோம்.

எனவே, இராணுவ முகாம் அமைந்துள்ள  எங்களின் காணிகளிலிருந்து முகாமை அகற்றி எங்களின் காணிகளை மீள வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுகின்றோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X