2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'செனட்டர் மசூர் மௌலானா இல்லை என்றால் ஹக்கீம் தலைவராக இருந்திருக்க முடியாது'

Niroshini   / 2016 ஜனவரி 04 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

2002ஆம் ஆண்டு செனட்டர் மசூர் மௌலானா ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருக்கவில்லை என்றால் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக இருந்திருக்க முடியாது என அக்கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

ஏறாவூர், வாவிக்கரையோர சிறுவர் பூங்காவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற செனட்டர் மசூர் மௌலானாவின் நினைவுப் பேருரை நிகழ்வில் பிரதான பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஏறாவூர் அஷ்ரப் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் முஹைதீன் பாவா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் மேலும் பேசுகையில்,

1977ஆம் ஆண்டில் எமது மண்ணில் பரீத் மீராலெப்பை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது அவர் வீட்டிலிருந்து வெளியேற முடியாமல் முடக்கப்பட்டிருந்தார். அப்போது மசூர் மௌலானா மிகவும் துணிச்சலுடன் ஏறாவூரில் களமிறங்கி பிரசாரத்தில் ஈடுபட்டு பரீத் மீராலெப்பையின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.

அவர் தமிழ், முஸ்லிம் ஐக்கியத்தின் அடிநாதமாகத் திகழ்ந்த ஓர் அரசியல் தலைவர். இந்த சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்காக தமிழ் தேசியத் தலைமைகளுடன் இணைந்து பல போராட்டங்களை முன்னெடுத்து அதற்காக இரத்தம் சிந்தி சிறைவாசமும் அனுபவித்திருந்தார்.

செனட்டர் மசூர் மௌலானாவுக்கும் எனக்கும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. தமிழ் தேசியத்துக்காக அவர் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். அதே விடயத்துக்காக நான் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தேன். அவரும் நானும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் ஒரே நாளில் சேர்ந்து ஒரே பதவியை வகித்திருந்தோம்.

நான் 1994ஆம் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் முதன்முறையாகப் போட்டியிட்டபோது தேர்தல் பிரசாரப் பணிகளில் நான் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தேன். அப்போது மசூர் மௌலானா இங்கு வந்து எனக்காகப் பிரசாரம் செய்தார்.

அதனால் அவருக்கும் எனக்கும் நெருக்கமான உறவு இருந்து வந்தது. அவர் பற்றி என்னால் நிறையப் பேச முடியும். ஆனால் இன்று நான் ஒரு முக்கிய இரகசியத்தை வெளியிடப் போகின்றேன். அந்த ரகசியம் என்னையும் மசூர் மௌலானாவையும் தவிர வேறு எவருக்கும் இதுவரை தெரிந்திராத இரகசியமாகும்.

அதாவது 2002 ஆம் ஆண்டு அரசாங்கம் புலிகள் சமாதானப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக எமது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஒஸ்லோவுக்கு சென்றிருந்தவேளை எமது கட்சியின் தவிசாளராகவிருந்த முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து ரவூப் ஹக்கீமை அகற்றுவதற்கு சதிப் புரட்சி ஒன்றை அரங்கேற்றினார்.

பேரியல் அஷ்ரப் தலைமையில் கட்சி பிளவுபட்டபோதோ ரிசாத் பதியுதீன் தலைமையில் பிளவு ஏற்பட்ட போதோ அல்லது வேறு சில சந்தர்ப்பங்களில் உருவான நெருக்கடிகளின் போதோ இல்லாதளவுக்கு பாரதூரமான ஒரு விடயமாக அதாவுல்லாவின் திட்டம் அமைந்திருந்தது.

அதற்கான அத்தனை வேலைகளையும் கனகச்சிதமாக அதாவுல்லா மேற்கொண்டிருந்தார். அப்போதைய செயலாளர் டொக்டர் ஹப்ரத்தைக் கொண்டு கட்சியின் அதியுயர் பீடத்தைக் கூட்டுவதற்கான அழைப்பை உத்தியோகபூர்வமாக விடுத்திருந்தார். அதியுயர் பீட உறுப்பினர்களுள் பெரும்பாலானோர் அதாவுல்லாவின் பக்கம் சாய்ந்திருந்தனர். அவரிடம் சட்டப்படி கூட்டம் நடத்துவதற்கான கோரம் இருந்தது. அன்றிரவு அதாவுல்லா திட்டமிட்டிருந்தபடி கூட்டம் நடந்திருந்தால் கட்சி யாப்பின் பிரகாரம் ரவூப் ஹக்கீமின் தலைமைப் பதவி நிச்சயம் பறிபோயிருக்கும்.ஆனால் அந்த சதியை முறியடிப்பதற்கு காரணமாக இருந்தவர் செனட்டர் மசூர் மௌலானா எனும் இரகசியத்தை நான் இன்று அம்பலப்படுத்துகின்றேன் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X