2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'தமிழ் மக்கள் பேரவை தேர்தல் காலங்களில் கூத்தடிப்புக்கான அமைப்பல்ல'

Niroshini   / 2016 ஜனவரி 03 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

தமிழ் மக்களின் இலட்சியங்களை வெற்றி கொள்வதற்கான ஓர் அமைப்பே தமிழ் மக்கள் பேரவை.இது பதவிகளுக்காகவோ தேர்தல் காலங்களில் தமிழ் மக்களை ஏமாற்றி கூத்தடிப்புக்காகவோ உருவாக்கப்பட்ட அமைப்பல்ல. மாறாக தமிழ் மக்களின் அரசியல் தீர்வு குறித்து ஆராய்வதற்காகவே தேற்றுவிக்கப்பட்டுள்ளது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் இளைஞர் கழகப் பொறுப்பாளர் இ.சத்தியசீலன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் அம்பாறை மாவட்ட பொறுப்பாளர் எம்.வரதராசா தலைமையில் அவரது தம்பிலுவில் இல்லத்தில் இன்று(03) இடம்பெற்ற 75 வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

வட மாகாண முலதமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள  தமிழ் மக்கள் பேரவையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியும் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் இணைந்து முக்கிய பங்கினை ஆற்றிவருகின்றோம்.

தமிழ் மக்கள் பேரவை தொடர்பாக தமிழ் மக்கள் மத்தியில் பிழையான கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பலவீனப்படுத்தும் செயற்பாடாக இருக்கும் என நம்பப்படுகின்றது. இது தவறான விடயம். இதனை மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் மத்தியில் மதிப்பு மிக்க மனிதர் ஆவார்.

தமிழ் மக்களுக்கான தீர்வு திட்டங்களை முன்நகர்த்த வேண்டிய பொறுப்பு தமிழ் மக்களின் வாக்குகளை பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தான் உண்டு.இந்த பொறுப்பில் இருந்து விலகிச் செல்கின்றார்கள் என்பதை கூட்டமைப்புக்குள்ளே இருந்துகொண்டு அறிந்த சீ.வி.விக்னேஸ்வரன், பொறுப்பில் இருந்து விலகிச் செல்லாது பாதுகாக்கும் வகையில் கல்வியாளர்களை ஒன்றிணைத்து தமிழ் மக்களுக்கான தீர்வு திட்டத்தினை முன்னெடுக்க வேண்டும் என்பதற்காகவே  தமிழ் மக்கள் பேரவை எனும் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டுள்ளது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X