2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

'பெற்றோலின் நிலைக்கு சமனாக நீர் மாறும்'

Niroshini   / 2015 நவம்பர் 01 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்  

எதிர்வரும் 20 தொடக்கம் 25வருடத்துக்குள் பெற்றோலின் நிலைக்கு சமனாக நீர் மாறும்.  அதற்கு முழுக்காரணமாகவும் பொறுப்பாளிகளாகவும் நாமே இருப்போம் என கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் கலாநிதி த.ஜெயசிங்கம் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று அபிவிருத்திக்கான சமூக அமைப்புக்களின் வலையமைப்பு நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ச.செந்துராசா தலைமையில் சுவாட் பயிற்சி மண்டபத்தில் டயகோணியா நிதி நிறுவனத்தின் அனுசரணையோடு நடைபெற்ற காலநிலை மாற்றம் தொடர்பான ஆய்வரங்கத்தில் வளவாளராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

தண்ணீரைப்போல் செலவு செய்யுங்கள் எனும் சொல்லுக்கும் அர்த்தம் இல்லாமல் போய் நீருக்கான தட்டுப்பாடு நிலவும். இவ்வாறான கால நிலை மாற்றம் விரைவில் உருவாகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் அடைய வேண்டிய காலநிலை மாற்றம் கடந்த 50வருடங்களில் ஏற்பட்டுள்ளமை இதற்கு சிறந்த சான்று.

மேலும், வெப்பநிலையானது நாளாந்தம் அதிகரிக்கப்பட்டு வருகின்றது. இதனால் நாம் பாரிய விளைவினை எதிர்நோக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவருகின்றோம்.     

வெப்பநிலை அதிகரிப்பால் 2065ஆம் ஆண்டளவில் கடல் மட்டமானது 10அடி வரை உயரலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றது. 

இதனால் கடல் பிரதேசத்தை அண்டி வாழும் மொத்த சனத்தொகையில் 25சதவீத மக்கள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை உருவாகலாம்.

குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்கள் பாரிய விளைவினை எதிர்நோக்க வேண்டி வரலாம்.

வெள்ளப்பெருக்கு என்பது எமக்கு இப்போது சாதாரணமாகிவிட்டது. வருடாந்தம் எமக்கு தேவையான மழைவீழ்ச்சி 1500 மில்லிமீற்றராகும். ஆனால் கடந்த வாரங்களில் கிழக்கு மாகாணத்தில் ஒருசில தினங்களில் 300மில்லிமீற்றருக்கும் மேற்பட்ட மழை வீழ்ச்சி பதிவாகியது. இதுவும் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட விளைவு என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதேபோல், 2வீதமான செல்சியஸ் வெப்பநிலை உயர்வும் 7வீதமான மழைவீழ்ச்சியும் அதிகரிக்கும் போது விவசாய உணவு உற்பத்திகள் 50வீதமாக குறைவடையும்.

இதனால் 2080ஆம் ஆண்டளவில் உணவுத்தட்டுப்பாடும் ஏற்படும் நிலை உருவாகும்.

ஆகவே, காலநிலை மாற்றத்துக்கு தூண்டு கோலாக இருக்கும் நாம் நீரின் விரயமாக்கலை குறைத்து,  சூழல் மாசடையும் வழிமுறைகளை தடுத்து உணர்ந்து செயற்படும் பட்சத்தில் ஏற்படப்போகும் தாக்கத்தினை குறைக்கலாம் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .