2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'ஹமீட்டையும் இணைத்துகொண்டு கட்சியை வழி நடத்தி செல்வதே சிறந்த விடயம்'

Niroshini   / 2016 ஜனவரி 18 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக அதிகமான உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை வென்றெடுப்பது கட்சியின் முக்கிய நோக்கமாக உள்ளது. அதற்காக கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட்டையும் இணைத்துகொண்டு கட்சியை வழி நடத்தி செல்வதே சிறந்த விடயமாகும் என வர்த்தக வாணிபத்துறை நிபுணத்துவ ஆலோசகரும் முன்னாள் கல்முனை மாநகர முதல்வருமான சிராஸ் மீராசாஹிப் இன்று (18) தெரிவித்தார்.

சமகாலமாக கட்சிக்குள் எழுந்துள்ள உட்கட்சிப் பிரச்சினைகள் தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

கட்சியின் செயலாளர் நாயகத்துக்கும் தலைமைக்கும் இருக்கின்ற கருத்து முரண்பாடுகளை களைந்து அவர்களை ஒன்றிணைத்து கட்சியினை வழி நடாத்திச் செல்வதற்கு நாம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகள் யாருக்குத்தான் வருவதில்லை. இந்த பிரச்சினையை ஒரு முடிவுக்கு கொண்டுவந்து நடக்க இருக்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக அம்பாறை மாவட்டத்தில் அதிகமான உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை வென்றெடுக்கும் முயற்சியிலும் நாங்கள் ஈடுபடவுள்ளோம்.

அனைவரையும் அரவணைத்து மக்கள் நலன் காக்கும் திட்டத்தில் நாம் அயராது எதிர்காலத்தில் பாடுபடுவோம்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு கன்னி முயற்சியிலேயே அதிக அளவிலான வாக்குகளை பெற்றுள்ளது. இது எங்களுக்கு கிடைத்துள்ள பாரிய வெற்றியாகும்.

இக்கட்சிக்குள் இருக்கின்றவர்கள் மட்டுமல்லாது கருத்து முரண்பாடுகளால் வெளியில் இருக்கின்ற அனைவரையும் அரவனைத்து அவர்களை வெளியில் விடாமல் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய கெளரவத்தையும் கொடுத்து எல்லோருடைய கருத்துக்களையும் செவிமடுத்து கட்சியை வழிநடத்தி செல்ல வேண்டும் என்பதே எமது தற்போதைய நிலைப்பாடாகும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X