2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

தாக்குதலுக்குள்ளான முஸ்லிம் காங்கிரஸ் மாவட்ட அலுவலக பொறுப்பாளரை அமைச்சர் ஹக்கீம் பார்வை

Super User   / 2012 செப்டெம்பர் 03 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


அக்கரைப்பற்றில் வைத்து நேற்றிரவு தாக்குதலுக்குள்ளான நிலையில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட மு.காங்கிரஸின் மாவட்ட அலுவலக பொறுப்பாளரும், அக்கட்சியின் அக்கரைப்பற்று மத்திய குழுவின் உப தலைவருமான ஏ.எல். மர்ஜுன் தற்போது சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8.00 மணியளவில் மேற்படி ஏ.எல். மர்ஜுன் - அவருடைய வீட்டுக்கு அருகாமையில் வைத்து சுமார் 15 பேர் கொண்ட கும்பலொன்றினால் கோடாரி மற்றும் இரும்புக் குழாய்கள் கொண்டு தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் காரணமாக தலையில் பாரிய காயங்களுக்குள்ளான நிலையில் நேற்று இரவு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட மர்ஜுன், அங்கிருந்து கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு - சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி தாக்குதலில் ஈடுபட்டவர்களில் பலரை தான் அடையாளம் கண்டதாகவும், அவர்களில் ஒரு சிலர் மட்டும் தமது முகத்தினை கறுப்புத் துணிகளால் மறைத்துக் கொண்டு வந்ததாகவும் தாக்குதலுக்குள்ளான மர்ஜுன் பொலஸாரிடம் தெரிவித்துள்ளதோடு, அவர்களின் விபரங்களையும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளாக அறிய முடிகிறது.

இதேவேளை, மர்ஜுனை தாக்கியவர்களால் அவரின் மோட்டார் சைக்கிள் நேற்று இரவு கொண்டு செல்லப்பட்டிருந்த போதும், இன்று காலை குறித்த மோட்டார் சைக்கிள் ஓரிடத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டதாக தெரியவருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்றிலுள்ள மு.காங்கிரசின் மாவட்டக் காரியாலயம் 15 பேர் கொண்ட குழுவொன்றினால் தாக்கப்பட்டமையும், அதுகுறித்து மர்ஜுன் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை, பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள  மர்ஜூனை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவைரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று திங்கட்கிழமை காலை பார்வையிட்டதாக நீதி அமைச்சரின் ஊடக பிரிவு தெரிவித்தது.

இது தொடர்பில் நீதி அமைச்சரின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

"கடந்த மாதம் அக்கரைப்பற்றில் அமைச்சர் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவிருந்த இஃப்தார் வைபவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தோர், தனது வீட்டின் முன்னாலுள்ள பாதையில் டயர்கள் எரித்த போது, அதனைத் தடுக்க முயன்றதற்காக அந்தக் குண்டர்களால் தனக்கு விரைவில் உயிர் ஆபத்து இருப்பதாக எச்சரிக்கை செய்யப்பட்டதாகவும், அது தொடர்பில் உடனே தாம் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததோடு தமக்கு ஏதும் ஆபத்து நிகழ்ந்தால் அதற்கு அமைச்சர் அதாவுல்லாவும் அவரது மகனும் பொலிஸாருமே பொறுப்பேற்க வேண்டுமென்றும் கூறியதாக தம்மை வைத்தியசாலையில் சந்தித்த அமைச்சர் ஹக்கீமிடம் தெரிவித்தார்.

தலையில் ஏற்பட்டுள்ள காயம் மூளையில் இரத்தக் கசிவை ஏற்படுத்துமா என்று அப்பொழுது அங்கு கடமையில் இருந்த மருத்துவ அதிகாரியை அமைச்சர் வினவியபோது, உரிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே பாதிப்புகளைப் பற்றி கூறமுடியுமென மருத்துவர் தெரிவித்தார்.

மர்ஜூன் அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள ஆபத்தான காயங்கள் தொடர்பில் சட்ட மருத்துவ அதிகாரியின் பரிசோதனைக்கு அவரை உட்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா என மருத்துவரிடம் அமைச்சர் ஹக்கீம் கேட்டபோது, அது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார். 

அமைச்சர் ஹக்கீம் இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது, மேலதிகாரிகளுடன் தொடர்புகொண்டு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இன்று முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஹஸன் அலி தேர்தல் ஆணையாளரைச் சந்தித்து, இத்தாக்குதல் சம்பவம் பற்றியும் ஏனைய தேர்தல் முறைகேடுகள் மற்றும் அத்துமீறல்கள் பற்றியும் கலந்துரையாட இருப்பதாகவும் கூறினார்.

அக்கரைப்பற்றில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மூவருக்கும் மர்ஜூன் போன்ற பிரமுகர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்குமாறு தாம் பலமுறை பொலிஸ் மா அதிபரையும் தேர்தல் ஆணையாளரையும் தான் கேட்டுக்கொண்டபோதிலும், அவ்வாறு பாதுகாப்பு வழங்கப்படவில்லை எனவும் அமைச்சர் ஹக்கீம் கவலை தெரிவித்தார்.

இவ்வாறான அடாவடித்தனங்கள் அக்கரைப்பற்றிலும், ஏனைய பிரதேசங்களிலும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமானால், சுதந்திரமானதும், நேர்மையானதுமான தேர்தலை எதிர்பார்க்க முடியாதென்றும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம் தமது கடும் அதிருப்தியையும் விசனத்தையும் வெளியிட்டார்".


  Comments - 0

  • nandu Monday, 03 September 2012 03:09 PM

    நல்ல நடிப்பு தலைவா

    Reply : 0       0

    Haniff Tuesday, 04 September 2012 05:45 AM

    செல்வாக்கு இருந்தால் செய்வினை எதற்கு.....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X