2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடன் உதவுமாறு கோரிக்கை

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 20 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹனீக் அஹமட்)

கிழக்கு மாகாணத்தில் நிலவும் அசாதாரண காலநிலை மற்றும் வெள்ளம் ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான அவசர நிவாரண உதவிகளை உடனடியாக வழங்குமாறு கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் - அனர்த்த முகாமைத்துவ அமைச்சர், சமூக சேவைகள் அமைச்சர், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருக்கு வேண்டுகொள் விடுத்துள்ளார்.

மேற்படி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதங்களிலேயே மேற்படி வேண்டுகோளினை முன்வைத்துள்ளார்.

அந்தக் கடிதத்தின் விபரம் வருமாறு,

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக இம் மாவட்டத்தின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பெரும்பாலான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

இதேவேளை, இப் பிரதேசத்தின் பெரும்பாலான வயல்களும் ஏனைய பயிர் செய்நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. உன்னிச்சைக் குளம், உறுகாமம் நீர்ப்பாசனக் குளங்களின் நீர்மட்டம் உயர்ந்துள்ளமையினால் இக் குளங்களின் வான் கதவுகள் நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகளால் திறந்து விடப்பட்டுள்ளன.  இந்நிலை காரணமாக மட்டக்களப்பிலிருந்து வாழைச்சேனை வரையிலான குடியிருப்புப் பிரதேசங்கள் வெள்ள அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன.

ஏறாவூர், ஐயன்கேணி, சதாம் ஹூசைன் கிராமம், மீராக்கேணி, ஹிஸ்புல்லா கிராமம், சித்தாண்டி, செங்கலடி மற்றும் வாழைச்சேனை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த 5000 குடும்பங்களைச் சேர்ந்த 25000 மக்கள் இடம்பெயர்ந்து பொது இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் கொடுவா மடு, மயில வட்டுவான், ஈரளைக்குளம் மற்றும் வெல்லாவெளி போன்ற கிராமங்கள்; வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் அப்பிரதேச மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு பொது இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்கள் உணவு, உடை மற்றும் அத்தியாவசிய தேவைகளை எதிர்பார்த்துள்ளனர். மழை தொடருமாயின் இப் பிரதேசம் மேலும் அனர்த்தங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுவதுடன், மக்கள் மேலும் இன்னல்களுக்கு ஆளாகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

எனவே, இவற்றினைக் கருத்திற் கொண்டு இம் மக்களுக்கான அவரச தேவைகளைப் பூர்தி செய்யும் வகையிலான உதவிகளை உடனடியாக வழங்குமாறு வேண்டிக் கொள்கிறேன். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X