(ஹனீக் அஹமட்)
தாதியர்கள் சார்பில் நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வந்த கோரிக்கைகளில் இரண்டு கோரிக்கைகளை சுகாதார அமைச்சு நிறைவேற்றியுள்ளதாக அரச தாதி உத்தியோகத்தர் சங்க உப தலைவரும், கிழக்கு மாகாணத்துக்கான இணைப்பாளருமான பி.எம். நஸிறுத்தீன் தெரிவித்தார்.
அந்தவகையில், தாதியர்களுக்கான மேலதிக நேரக் கொடுப்பனவு மற்றும் அபாயக் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக நஸிறுத்தீன் மேலும் கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்ளூ
தாதியர்கள் சார்பில் 5 கோரிக்கைகளை முன்வைத்து அரச தாதி உத்தியோகத்தர் சங்கம் கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தது.
அதற்கிணங்க, தற்போது 2 கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் முன்வந்துள்ளது.
அந்தவகையில், தாதியர்களுக்கான மேலதிக நேரக் கொடுப்பனவு மற்றும் அபாயக் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கான கடிதத்தினை கடந்த டிசம்பர் மாதம் 18 திகதி சுகாதார அமைச்சின் செயலாளர் நிஹால் குணதிலக்க அனுப்பி வைத்துள்ளார்.
இதன்படி, தாதி உத்தியோகத்தர்களில் தரம் 3 ஐச் சேர்ந்தவர்களுக்கு மேலதிக நேரக் கொடுப்பனவாக மணித்தியாலமொன்றுக்கு 100 ரூபாவும், தரம் 2 ஐச் சேர்தவர்களுக்கு 125 ரூபாவும், தரம் 1 ஐச் சேர்ந்தவர்களுக்கு 150 ரூபாவும், விசேட தரத்தினைச் சேர்ந்தவர்களுக்கு 200 ரூபாவும் வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.
இதேபோன்று இரத்த வங்கி, சத்திர சிகிச்சைக் கூடம், அவசர சிகிச்சைப் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு, கசரோகம், புற்றுநோய் உள்ளிட் சிசிச்சைப் பிரிவுகளில் பணியாற்றுகின்றவர்களுக்கான அபாயக் கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன என்றார்.