2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

கல்வி விழிப்புணர்வு கூட்டம்

Princiya Dixci   / 2015 மே 08 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்

கல்வியில் கூடுதலான அக்கறையுள்ள மாணவர்களே எதிர்காலத்தில் வாழ்க்கையில் வெற்றியடைவார்கள் என ஒலுவில் அல்ஹம்றா மகா வித்தியாலய வலயத்தலைவர் ஏ.எம்.இக்பால், வியாழக்கிழமை (7) தெரிவித்தார்.

அம்பாறை, ஒலுவில் அல்ஹம்றா மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் தரம் 07 தொடக்கம் 08 வரையான மாணவர்களின் பெற்றோhர்களுக்கான கல்வி விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதிபர் ஏ.எல்.யாசீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து கூறியதாவது,

எந்த மாணவர்கள் கல்வியில் கூடுதலான அக்கறை காட்டி செயற்படுகின்றார்களோ அவர்களே வாழ்க்கையில் வெற்றியடைவார்கள். ஒரு மாணவணின் கல்வி வளர்ச்சியில் ஆசிரியர்களின் பங்களிப்பை விட பெற்றோர்களின் பங்களிப்பும் கூடுதலாக இருக்க வேண்டும்.

தமது பிள்ளைகளை பாடசாலையில் சேர்த்து விட்டு திரும்பிப்பார்க்காத எத்தனையோ பெற்றோhர்களை இன்று எமது சமூகத்தில் காணமுடிகின்றது. பெற்றோர்கள் தமது பிள்ளைகளை பாடசாலையில் சேர்த்து விட்டால் மாத்திரம் போதாது.

பாடசாலைக்கு அடிக்கடி சென்று தமது பிள்ளையின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் கல்வியின் முன்னேற்றம் குறித்து ஆசிரியர்களுடன் கலந்தாலோசனை செய்ய வேண்டும். வெறுமனே பாடசாலையில் பிள்ளையை சேர்த்து விட்டோம் என்றிராமல் பாடசாலைக்கும் பெற்றோருக்கும் கூடுதலான உறவு இருக்க வேண்டும். அவ்வாறு பெற்றோர்கள் இருப்பார்கள் என்றால் இருவருக்குமிடையில் ஆசிரியர்கள் ஒரு உறவுப்பாலமாக செயற்படுவார்கள்.

எனவே, இதன் மூலம் நமது பிள்ளைச்செல்வங்களின் கல்வியில் நாமும் ஆசிரியருடன் இணைந்து ஒத்துழைப்பு வழங்கும் வேளையில் தமது பிள்ளையின் கல்வி ரீதியான அடைவு மட்டம் மற்றும் குறைபாடுகளை இலகுவாக புரிந்துகொள்ள முடியும்.

அவ்வாறு புரிந்து கொள்ளும் போது அதற்கேற்றவாறு பெற்றோர்கள் பிள்ளைகளின் கல்விக்கு பாடசாலையுடன் இணைந்து கூடுதலான அக்கறை செலுத்தக் கூடியவர்களாக மாறமுடியும்.

ஒரு சமூகத்தின் உயர்வும் தாழ்வும் அச்சமூகத்தின் கல்வி மாற்றத்திலே தங்கியுள்ளது. இன்று நாட்டில் சுதந்திரமும் ஜனநாயகமுமான சூழலொன்று உருவாகியிருக்கின்றது. இச்சூழலில் எம்மை நாம் கல்வி ரீதியாக பலப்படுத்திக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

இன்று வினைத்திறன்மிக்க கல்வியில் சமூகமாற்றத்தை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கின்றது. இவ்வாறான சூழ்நிலையில் ஒரு பிள்ளை கல்வி கற்கக்கூடிய வயதில் கல்வியை கற்க வேண்டும். அதிகமான மாணவர்கள் கல்வி கற்கக்கூடிய வயதெல்லை காலப்பகுதியில் தம்மை தாமே சீரளித்துக் கொண்டிருக்கின்றனர். தேவையற்ற செயற்பாடுகளில் கால நேரங்களை கழிக்கின்றனர்.

இதன் பின்புலத்தை அறிய முற்படும் போது நிறைய பெற்றோர் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளனர். அவ்வாறு சென்றுள்ள ஒரு சில பெற்றோர்களை தவிர கூடுதலான பெற்றோர்களின் பிள்ளைகள் கல்வி செயற்பாடுகளை விட்டு வேறொரு போக்கில் இன்று சென்று கொண்டிருப்பதை எம்மால் காணமுடிகின்றது.

இன்று அரசாங்கம் வெளிநாடு சென்றுள்ள பெற்றோர்களின் பிள்ளையின் கல்விக்கு நிறைய உதவிகளையும் சலுகைகளையும் வழங்கி வருகின்றது. இதனை இவ்விடத்தில் சுட்டிக்காட்டினால் பொருத்தம் என்று நினைக்கின்றேன்.

எனவே, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளிலும் புறக்கீர்த்தி விடயங்களிலும் தங்களது ஆர்வத்தையும் உற்சாகத்தையும் முழுமையாக காட்டவேண்டும். இதற்கு ஆசிரியருடன் பெற்றோர்களின் பங்களிப்பும் ஒத்துழைப்பும் அவசியம் தேவை அப்போதுதான் எமது பிள்ளைகளின் அடைவுகளும் பெறுபேறுகளும் திறம்பட அமையுமென்று கூறினார்.

இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர் எம்.எல்.எம்.இஸ்மாயில், ஆரம்ப பிரிவு வலயத்தலைவர் ஈ.எல்.மன்சூர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள், பாதுகாவலர்கள் என பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X