2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

ஆயுத பூஜை: குடித்த கணவனை குடத்தால் அடித்துக் கொன்ற மனைவி

Freelancer   / 2025 ஒக்டோபர் 03 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த குருவன்குப்பம் கிராமத்தில் ஆயுத பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்கிய பின் மீதம் இருந்த பணத்தில் மது குடித்தவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியில் வேல்முருகன்(36), இவரது மனைவி வள்ளி. இந்த தம்பதிக்கு அய்யனார்(11), வெற்றிவேல்(5) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். வேல்முருகனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. அவ்வாறு மதுகுடித்துவிட்டு வீட்டிற்கு வரும்போதெல்லாம் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆயுத பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக வேல்முருகனிடம் ரூ.1,000-ஐ வள்ளி கொடுத்தார். வேல்முருகனும் கடைக்கு சென்று பூஜை பொருட்களை வாங்கினார். அதில் மீதம் இருந்த பணத்துக்கு அவர், டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்தார்.

பின்னர் மதுபோதையில் வீட்டுக்கு சென்ற வேல்முருகன், தனது மனைவியிடம் பூஜை பொருட்களை கொடுத்தார். பொருட்கள் வாங்கியது போக மீதமுள்ள பணத்தை தருமாறு வள்ளி கேட்டார். அதற்கு அவர் செலவாகி விட்டதாக கூறினார். அந்த பணத்தில்தான், தனது கணவர் மதுகுடித்து விட்டு வந்ததை அறிந்து கொண்ட வள்ளி அவருடன் வாக்குவாதம் செய்தார். 

மேலும் வேல்முருகனுக்கு சாப்பாடு கொடுக்காமல், அவரை வீட்டுக்கு வெளியே நிற்க வைத்து உள்பக்கமாக கதவை பூட்டிக்கொண்டு வள்ளி இரவில் தூங்கிவிட்டார். வேல்முருகன் வீட்டின் முன்பகுதியில் படுத்து தூங்கினார்.

நேற்று காலையில் எழுந்த வள்ளி, பால் வாங்குவதற்காக கடைக்கு சென்றார். இதைகண்ட வேல்முருகன், உடனடியாக வீட்டிற்குள் சென்று படுத்துக்கொண்டார். இதனிடையே பால் வாங்கிவிட்டு வந்த வள்ளி, கணவரிடம் ஏன் வீட்டுக்குள் வந்தாய் என்று கேட்டார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த வள்ளி, அங்கிருந்த எவர்சில்வர் குடத்தை எடுத்து வேல்முருகனின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் அவர் சுருண்டு விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே வேல்முருகன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுபற்றி அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி ஆகியோர் நேரில் சென்று விசாரித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஆலடி போலீசார் வழக்குப்பதிவு செய்து வள்ளியை கைது செய்தனர். 

இதனிடையே வள்ளியின் 2 மகன்களும், அவர்களது பாட்டியின் பராமரிப்பில் விடப்பட்டனர். ஆயுத பூஜை பொருட்கள் வாங்கிய மீதி பணத்தில் மதுகுடித்ததால் கணவரை மனைவியே குடத்தால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X