2025 ஜூலை 07, திங்கட்கிழமை

'அறநெறிக்கல்வியே மாணவர்களை நெறிப்படுத்துகின்றது'

Princiya Dixci   / 2015 மே 18 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

அறநெறி ஒழுக்க சிந்தனை தவறுகின்றவர்களே பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் சேர்க்கின்றனர் என கிழக்கு மாகாண இந்து சமய விழிப்புணர்வு பேரவை பணிப்பாளரும் ஆன்மீக சொற்பொழிவாளருமான ரவிஜி, ஞாயிற்றுக்கிழமை (17) தெரிவித்தார்.

அக்கரைப்பற்று பனங்காடு பாசுபதேசுவரர் ஆலயத்தில் ஆலையடிவேம்பு பிரதேச கலாசார உத்தியோகஸ்தர் திருமதி தேவராஜ் தலைமையில் நேற்று நடைபெற்ற திருநாவுக்கரசு நாயனார் குருபூசை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

'அறநெறிக்கல்வியை ஒவ்வொரு இந்து சமயத்தவரும் கண்டிப்பாக கற்கவேண்டும். இது எமது வாழ்வை வளப்படுத்துவதுடன் பல விடயங்களையும் கற்றுக்கொடுக்கின்றது. அவ்வாறான கல்வியை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பது ஒவ்வொரு பெற்றோரினதும்  முக்கிய கடமை. அவ்வாறு கற்றுக்கொடுக்க தவறும் பெற்றோர்கள் இறைவனால் நிச்சயம் தட்டிக்கப்படுவார்கள்' என அவர் கூறினார்.

அத்துடன், 'இன்றைய சமூகம் அறநெறிக்கல்விக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் ஞாயிறு தினங்களில் கூட பிறபாடநெறிகளை கற்க முனைகின்றனர். அதற்கு பெற்றோர்களும் உடன்படுகின்றார்கள். இதனாலேயே இளம் சமூதாயம் அறநெறி தவறி, தவறான வழிகளில் செல்கின்றது. இச்செயற்பாடு இளம் சமுதாயத்துக்கு நாம் செய்யும் பெரிய துரோகம் என்பதுடன் மதமாற்றத்துக்கான பிரதான காரணியாகவும் அமைகின்றது' என அவர் மேலும் கூறினார்.

இந்நிகழ்வில் இந்துசமய வினாவிடைப் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து தேசிய ரீதியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தின் ஏற்பாட்டில் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ மூர்த்தீஸ்வரக்குருக்கள் ஆசியுடன் நடைபெற்ற நிகழ்வில் மாமன்றத் தலைவர் வே.சந்திரசேகரம், இந்து இளைஞர் மன்ற தலைவர் த.கயிலாயபிள்ளை, அம்பாறை மாவட்ட பிரதம உள்ளக கணக்காய்வாளர் க.கனகரெத்தினம் உள்ளிட்ட ஆலய நிர்வாகத்தினர் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .