2024 ஜூன் 16, ஞாயிற்றுக்கிழமை

ஆங்கில மொழிப் பதத்தை வழங்குவது மிகவும் உசிதமானது

Editorial   / 2024 மே 20 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கற்றது கையளவு, கல்லாதது உலகளவு. மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை ஏதேனும் ஒரு விடயத்தை கற்றுக் கொண்ட வண்ணமேயுள்ளான். அது புத்தகப்பாடமாக இருந்தாலும் சரி, வாழ்க்கைப் பாடமாக இருந்தாலும் சரி.

அந்த வகையில், அண்மையில் இலங்கையில் பாடசாலைகளில் கற்பிக்கப்படும் பாடங்களைப் பற்றி பாடத்துடன் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் சிலருடனும், மாணவர்கள் சிலருடனும் கலந்தாலோசிப்பதற்கான வாய்ப்பு கிட்டியது.

உயர் தரத்தில் கற்பிக்கப்படும் மின்சார சாதனங்கள் பற்றியதாக இந்த விடயம் அமைந்திருந்தது. இந்தப் பாடத்தைப் பொறுத்தமட்டில் பாடசாலைக் கல்வியைப் பூர்த்தி செய்து, வெளியேறி வெளி வாழ்க்கைக்கு சுயமாக முகங்கொடுக்கத் தயாராகும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதான ஒரு நடைமுறைச் சாத்தியமான பாடமாக அமைந்திருந்தாலும், கற்பிக்கப்படும் அம்சங்கள் நாளாந்த வாழ்க்கைக்கு பொருத்தமானதாக அமைந்திருப்பதாக தெரியவில்லை. நீண்ட கருத்துப் பரிமாறல்களுக்கு பின்னர், இந்தப் பத்தியை எழுதத் தூண்டியது.

தினசரி வாழ்க்கையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாதனங்கள், வயர்கள் அல்லது சுவிட்ச்சுகள் அல்லது பிரேக்கர்கள், ட்ரிப் சுவிட்சுகள் போன்றவற்றை நாம் அருகாமையிலுள்ள ஹார்ட்வெயார்களில் கொள்வனவு செய்கின்றோம். பெரும்பாலும் இவை அமைந்திருக்கும் பிரதேசங்களைப் பொறுத்து, அவற்றின் உரிமையாளர்கள் அந்ததந்த மொழிப் பின்புலன்களைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

இந்நிலையில், கடைக்குச் செல்லும் நாம், எமது தேவைக்கேற்ப குறித்த சாதனத்தை அதன் ஆங்கிலப் பெயரைச் சொல்லியே கேட்பது வழமை. மாறாக, அவற்றின் “தமிழ்” பெயரைக் குறிப்பிட்டு கேட்பதல்ல. இந்த விடயம் உண்மையில் சிந்திக்கப்பட வேண்டியது. ஏனெனில், பாடப் புத்தகங்களிலும், பரீட்சைகளிலும் இந்த தலைப்புடன் தொடர்புடைய விடயங்கள் அனைத்தும் தூய தமிழிலேயே கற்பிக்கப்படுகின்றன. இந்த முறைமையில் உண்மையில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.

ஏனெனில், இதனைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்குக்கூட, தூய தமிழில் குறிப்பிடப்பட்டிருக்கும் சாதனங்களின் ஆங்கிலப் பெயர்கள் தெரிவதில்லை. அல்லது அந்த சாதனங்கள் எதற்கு பயன்படுகின்றன என்பது கூட தெரிவதில்லை. இதனைத் தெளிவுபடுத்திக் கொள்ள மின்சார நுட்பவியலாளர்களை தொடர்பு கொண்டு அவர்களிடம் விளக்கம் கேட்கும் போது, தூய தமிழில் காணப்படும் இந்த சொற்பதங்களை தெரிவிக்கையில், அவர்களும் திக்குமுக்காடிப் போகின்றனர்.

இதே நிலை, தொழில்நுட்பப் பாடங்களுக்கும் பொருத்தமானதாக அமைந்துள்ளது. குறிப்பான கணனி சார் மென்பொருட்கள், வன்சாதனங்கள் போன்றவற்றிலும் இதே நிலைமை தொடர்வதை அவதானிக்க முடிகின்றது. இந்தப் பாடங்கள் மாணவர்களின் தினசரி வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்தனவாக அமைந்திருக்கும் நிலையில், அவர்களால் நாளை சுயமாக ஹார்ட்வெயார் ஒன்றுக்குச் சென்று, தமக்கு அவசியமான இந்த மின்சாதனங்களை கொள்வனவு செய்வதற்கான அறிவு வழங்கப்பட வேண்டும்.

தூய தமிழில் காணப்படும் இந்த சொற்பதங்களுக்கு அருகாமையில் அடைப்புக்குறியினுள் அவற்றுக்கான ஆங்கில மொழிப் பதத்தை வழங்குவது மிகவும் உசிதமானது. சம்பந்தப்பட்ட பாடவிதானங்களை தயார்ப்படுத்தும் நிபுணர்கள் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்துவது சிறந்தது. 02.05.2024


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .