Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2023 ஜூன் 09 , பி.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆடைத் தொழிற்றுறையை கட்டிக்காப்பது அவசியமாகும்
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில், உயர்தரம் கற்பதற்கு தேவையான பெறுபேறுகள் கிடைக்காவிடின், பெரும்பாலானவர்களின் முதல் தெரிவு ஆடை தொழிற்றுறை ஆகத்தான் இருக்கும். சிலர், பரீட்சை நிறைவடைந்த மறுநாளே, ஆடைத் தொழிற்சாலைக்கு வேலைக்குச் சென்றுவிடுவர்.
உயர்தரத்தில் கற்கவேண்டுமாயின் அதற்கு தேவையான பணத்தை ஓரளவுக்கேனும் சம்பாதித்துக் கொள்ளவேண்டும் என்ற நோக்கில், தற்காலிகமாக வேலைக்கு சிலர் இணைந்துகொள்வர். பேறுபேறுகள் போதாவிடின், நிரந்தர ஊழியர்களாகிவிடுவர்.
காலவோட்டத்துக்கு ஏற்றவகையில், தங்களை மாற்றிக்கொள்ளும் பலரும், முதல் தெரிவாக ஆடைத்தொழிற்சாலையை தேர்ந்தெடுப்பது தற்காலத்தில் அரிதாகும். ஏனைய தொழிற்றுறைகளில் காலடி எடுத்துவைத்து, முன்னேற்றப்பாதையில் நகர்ந்துகொண்டிருக்கின்றனர்.
ஆடைத் தொழிற்றுறையின் ஊடாக நாடுக்கு பெருமளவில் அன்னியசெலாவணி கிடைத்தது. கொரோனா, பொருளாதார நெருக்கடி இத்துறையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மூலப்பொருட்கள் இறக்குமதி, முடிவுப்பொருள் ஏற்றுமதியில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளே, இத்துறை பின்னடைந்தமைக்குப் பிரதான காரணமாக அமைந்துள்ளது.
எனினும், கொரோனா காலத்தில் ஆடை தொழிற்றுறையின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டமையால், அதிலிருந்து நாட்டுக்குக் கிடைத்த வருமானம், எரிபொருள், உணவுப்பொருட்கள், மருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு பயன்படுத்தப்பட்டமையை மறந்துவிடக்கூடாது.
ஆடைத் தொழிற்றுறையில் தைக்கப்பட்ட ஆடைகளுக்கான கேள்வி 18 சதவீதமாக குறைந்துள்ளது என்றும் அது 20 சதவீதம் வரையிலும் அதிகரிக்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்குலக நாடுகளில் இருந்த கேள்வி, குறைந்துகொண்டே செல்கின்றது.
ஆகையால்தான், ஆடை தொழிற்றுறை இழுத்து மூடப்படும் அபாயத்தில் உள்ளதென்ற தகவல் பரவியுள்ளது. இது, வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும், ஆடைத் தொழிற்றுறையை நம்பியிருக்கும் குடும்பங்களில் வயிற்றில் புளியைக் கரைத்தால் போலுள்ளது.
கடந்தகாலங்களைப் போல, சம்பளமும் மேலதிக நேரக்கொடுப்பனவும் கிடைப்பதில்லை. ஆனால், செலவுகள் பன்மடக்காக அதிகரித்துள்ளன. சில ஆடைத்தொழிற்சாலைகளில் முன்னெடுக்கப்பட்டிருந்த ஊழியர் நலன்சார் திட்டங்கள் முழுமையாக கைவிடப்பட்டுள்ளன. இதனால், சாதாரண ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆடைத்தொழிற்சாலைக்குச் சென்று கொஞ்சமேனும் சம்பாதித்து, தங்களுடைய குடும்பத்தை காப்பாற்றமுடியும் என்று நினைத்த பலரும், அந்த நினைப்பை கைவிட்டு, மாற்றுத் துறைகளை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர்.
நாட்டில் எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லை; வரிசைகள் ஒழிக்கப்பட்டுள்ளன; பொருட்களின் விலை அதிகரிப்பு தற்காலிகமானது என்று கூறப்படுவது மக்களின் மனங்களை தேற்றும் சொற்களே தவிர, அவை அறுதியானவை அல்ல. மீண்டுமொரு நெருக்கடிக்கு நாடு முகங்கொடுக்குமென தகவல்கள் கசிந்துள்ளன.
வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட கடனை செலுத்துவதற்கு அரசாங்கம் ஆரம்பிக்கவில்லை. ஐக்கிய அமெரிக்க டொலரின் பெறுமதியும் குறைந்துகொண்டே செல்கின்றது. இவையெல்லாம் நல்ல அறிகுறிகள் இல்லை என்பதையும் நினைவில் கொண்டு, ஆடைத் தொழிற்றுறையை காப்பாற்றி, அதில் தங்கிவாழும் குடும்பங்களை காப்பற்றவேண்டும்.
09.06.2023
14 minute ago
6 hours ago
6 hours ago
20 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
6 hours ago
6 hours ago
20 Oct 2025