2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

உயிர்களைத் துச்சமாக நினைப்பது மனிதநேயமற்ற செயலாகும்

Editorial   / 2023 பெப்ரவரி 07 , மு.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உயிர்களைத் துச்சமாக நினைப்பது மனிதநேயமற்ற செயலாகும்

அமெரிக்காவின் சிக்காகோ நகரில் 1893 இல் இடம்பெற்ற உலக மதங்களின் பாராளுமன்றத்தில் உரையாற்றிய  விவேகானந்தர் ‘‘சகோதர, சகோதரிகளே’’ என்று அனைவரையும் விளித்தார். அவர், உலக மக்களிடையே மனித நேயத்தை எடுத்துரைக்கும் வகையிலேயே அவ்வாறு விளித்தார் என்கின்றனர்.

இந்த மனித நேயத்தை, தற்போது வாழும் மனிதர்கள் பலரிடத்தில்  காணக்கிடைப்பதே அரிதாகும்.

நம் நாட்டைப் பொறுத்தவரையில், அன்றாடம் இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பிலான செய்திகளை பார்க்குமிடத்து, மனித நேயம் செத்துமடிந்துவிட்டது என்று கருதுமளவுக்கு கொடூர சம்பவங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அந்தளவுக்கு கொடூர சம்பவங்கள்,  ஒவ்வொரு நிமிடமும் இலங்கையின் எங்கோ ஒரு மூலையில் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.

ஆறு வயதான மகன், ஒன்பது வயதான மகள் ஆகிய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர், அவ்விருவரையும் வெட்டிச் சாய்த்துவிட்டு, தன்னுயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் மாவனெல்ல, அரநாயக்கவில் இடம்பெற்றுள்ளது.

தான் பெற்ற சிசுவின் கழுத்தை நெரித்து, படுகொலை செய்து குப்பையில்  வீசியெறிதல், உயிருடன் புதைத்தல் உள்ளிட்ட சம்பவங்கள் ஒவ்வொரு நாளும் ஏராளம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான துன்பியல் சம்பவங்களில் பல, வெளிச்சத்துக்கு வராமலும் இருக்கக்கூடும்.

மகனின் தகாத உறவால், அவருடைய தாயைக் கடத்திச் சென்று துன்புறுத்தி, படுகொலை செய்த சம்பவமொன்று இரத்தினபுரி,  எம்பிலிப்பிட்டியவில் இடம்பெற்றிருக்கின்றது. குற்றவாளியை விட்டுவிட்டு, சம்பந்தப்படாத இன்னொருவரை பழிவாங்குதல் எனும் கொடூர சிந்தனைக்குள் அகப்பட்டு அந்தத் தாய் பலி எடுக்கப்பட்டுள்ளார்.

கொடூரமான குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களுக்கும், பாதாள உலகக் கோஷ்டியினருக்கும் இடையிலேயே இவ்வாறான பழிக்குப்பழி வாங்கும் சம்பவங்கள் இடம்பெறுவதுண்டு. எனினும், இப்போது சாதாரண மக்கள் மத்தியிலும் இந்தக் கொடூரம் தொற்றிக்கொண்டுவிட்டது. 

மனிதரிடத்தில் அன்பு, கருணை, இரக்கம், சமூக நுண்ணறிவு ஆகியன பலம் வாய்ந்த குணங்களாகத் திகழ்கின்றன. சக மனிதர்களிடம் அன்பு காட்டுவதை, ‘மனித நேயம்’ என்கின்றனர்.  பிறரைத் துன்பப்படுத்தாது இருத்தல்; இயலாதவர்களின் துன்பத்தைப் போக்குதல்; இளகிய இதயமும், இரக்க சுபாவமும், உறுதியான செயற்பாடுகளும் கொண்டிருத்தல் ஆகியவற்றையும் ‘மனிதநேயம்’ சார்ந்தே சிந்திக்கின்றனர். 

போர்க்களத்தில் நிராயுதபாணியாக நின்ற தனது எதிரியான இராவணனை “இன்று போய், நாளை வா” என்று இராமன் கூறியதையும் ‘மனித நேயம்என்று வரையறுத்துள்ளனர்.

எனினும், நிராயுதபாணிகள், அப்பாவிகள், பிஞ்சுகள், கண்திறந்து உலகைப் பார்க்காத சிசுக்கள் என, பல மட்டங்களில் இருப்பவர்களும் பலியெடுக்கப்படுகின்றனர். அந்தளவுக்கு மக்களிடத்தில் கடின மனமும் தீய சிந்தனைகளும் தொற்றிக்கொண்டுள்ளன.

மறுபுறத்தில், குடும்பப் பிரச்சினைகள் காரணமாகவும் பலர் படுகொலை செய்யப்படுகின்றனர். இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமாயின், மக்களிடத்தில் மனிதநேயம் தொடர்பில் தெளிவுப்படுத்தவேண்டும். இதை ஒவ்வொரு வீட்டிலும் இருந்தும் ஆரம்பிக்கவேண்டும். இல்லையேல் படுகொலைகள் நிறைந்த, மனிதநேயமற்றவர்கள் மலிந்த நாடாக, இலங்கை மாறிவிடும் என்பதில் எவ்விதமான ஐயமும் இல்லை. 07.02.2023


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .