Editorial / 2023 ஏப்ரல் 28 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
வறுமைக்கோட்டின் கீழ் வாழும் ஏழ்மையான மக்களுக்கு வழங்குங்கள்
புதிய வரி திருத்தத்துக்கு எதிராக பரவலாக எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், அறிமுகப்படுத்திய வரியை மீளப்பெறவோ அல்லது குறைக்கவோ அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், நமது நாட்டில் பணம்படைத்தவர்கள், ஏழைகள் என்ற இரண்டு பிரிவினர் மட்டுமே உள்ளனர். மத்திய தர வர்க்கம் இல்லாமல் போய்க்கொண்டிருக்கின்றது.
செல்வந்தர்கள் கட்டாயம் வருமான வரி உள்ளிட்ட வரிகளைச் செலுத்தவேண்டும்; ஏழைகளுக்கு அது தேவையில்லை. எனினும் அறிமுகப்படுத்தப்படும் அத்தனை வரிகளுக்குள்ளும் மத்தியத்தர வர்க்கத்தினர் சிக்கிக்கொள்வர்.
இந்நிலையில், அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (25) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று கருத்துரைத்த அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, “வருமான வரியை குறைக்குமாறு எவ்வாறான கோரிக்கைகளை முன்வைத்தாலும் அவற்றை நிறைவேற்ற முடியாது” என்றார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைத்திருக்காவிடின், பொருளாதார படுகுழிக்குள் விழுந்துகிடந்த நாட்டை கொஞ்சமேனும் தூக்கியிருக்க முடியாது. நிதியத்தின் நிபந்தனைகளை அமல்படுத்திய போதெல்லாம், மேலே குறிப்பிட்ட மத்திய தர வர்க்கத்தினரே கடுமையாக பாதிக்கப்பட்டனர். இன்னுமே பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் உலகத் தரமான வங்கிக் கொள்கைகளின்படி செயற்படும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்வதில் ஒழுங்கு உள்ளது. வருமானம் ஈட்டும் போது வரிகள் தொடர்பாக எந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டாலும் முறைசாரா முறையில் வரிகளைக் குறைக்க முடியாது என்றும் அமைச்சர் கூறியிருக்கின்றார். அப்படியாயின், அந்தவரி அப்படியேதான் இருக்கும்.
பொருளாதார நெருக்கடியால், வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மிகவும் ஏழ்மையான மக்கள், பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். வறுமைக்கோட்டின் கீழ் வாழும் சுமார் 20 இலட்சம் மக்கள் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, அரசாங்கத்தின் நிவாரணமாக மாதாந்த கொடுப்பனவை வழங்கும் தீர்மானம் வரவேற்கத்தக்கது.
அந்தக் கொடுப்பனவு, வறுமைக்கோட்டின் கீழ் வாழும் அனைவருக்கும் கிடைக்கவேண்டும். அரசாங்கத்தின் கொடுப்பனவுகள் பெருந்தோட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு இலகுவில் கிடைப்பதில்லை. எந்தவோர் உதவியாக இருந்தாலும் சரி, பெருந்தோட்ட மக்கள் குறிப்பாக தோட்டத்தொழிலாளர்கள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டே வருகின்றனர் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
இந்தப் பாரபட்சம் தொடர்பில் மக்கள் பிரதிநிதிகள், உயர்மட்டங்களின் கவனத்துக்குக் கொண்டு சென்று நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க வழிசமைக்க வேண்டும். பெருந்தோட்டங்களைப் பொறுத்தவரையில் அங்கு கடமையாற்றும் அதிகாரிகளில் பலர், அதே பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர். ஆக, தங்களுடைய மக்களுக்கும் கிடைக்க வேண்டுமென்ற நினைப்பில் அவ்வாறான அதிகாரிகள் செயற்படவேண்டும். சிறு,சிறு விடயங்களை வைத்து தட்டிக்கழித்துவிடக்கூடாது. சாதாரண தொழில்புரியும் மக்களை அலைக்கழித்துவிடக்கூடாது என்பதையும் நினைவூட்டுகின்றோம்.
நாட்டின் பல செயற்பாடுகள் வழமைக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றன. இவை கடனில்தான் ஓடிக்கொண்டிருக்கின்றன என்பதை கவனத்தில் கொண்டு, வறுமைக்கோட்டின் கீழ் வாழும் ஏழ்மையான மக்களின் மேம்பாட்டுக்கு, ஆகக்கூடுதலாக அர்ப்பணிக்க வேண்டுமென வலியுறுத்துகின்றோம்.
18 minute ago
32 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
32 minute ago
36 minute ago