2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

கடனுடன் விழித்தெழுந்து, வட்டியுடன் கழியும் பொழுது

Mayu   / 2024 ஜூலை 24 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இருப்பவர்கள் வாழ்கின்றனர்; இல்லாதவர்கள் பொழுதைக் கழிக்கின்றனர்; இரண்டும் கெட்டான் நிலையில் இருப்பவர்கள், கடனுடன் விழித்தெழுந்து, வட்டியுடன் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கின்றனர். எனினும், அதனை வெளியில் சொல்லமுடியாமலும் விழுங்க முடியாமலும் பலரும் இருக்கின்றனர். 

கொரோனாவுக்குப் பின்னர் நாட்டின் பொருளாதாரம் அதாள பாதாளத்தில் விழுந்தது. பலரும் வேலைகளை இழந்தனர். புதிய வேலைகளுக்கு முயற்சித்தனர்.  பின்னர், வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதைப் புரிந்துகொண்ட பலரும் படையெடுத்து விட்டனர். 

எனினும், சிக்கிக்கொண்டவர்கள் தங்களுடைய குடும்பத்தைக் கொண்டு நடத்துவதற்காக, தங்க ஆபரணங்களை அடகு வைத்து வாழத்தொடங்கினர்.

அடகு வைக்கப்பட்ட தங்க ஆபரணங்களை வட்டியுடன் திரும்ப முடியாமல் போனதால் பலரும் குட்டிபோட்ட வட்டித் தொகையையே செலுத்திக் கொண்டிருக்கின்றனர். 

சிறுக, சிறுக சேமித்து ஓரளவுக்குப் பெறுமதியான தங்க நகைகளைக் கொள்வனவு செய்தவர்களில், பெரும்பாலான நகைகள் அடகுக் கடைகளிலேயே பத்திரமாய் இருக்கின்றது.இன்னும் சிலருடைய நகைகள், முதலுடன் வட்டியை செலுத்தாமையால் மூழ்கிப் போய்விட்டன. 

இந்நிலையில்தான் வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்துள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில், செவ்வாய்க்கிழமை (23) கூடிய  அமைச்சரவையில் அங்கிகாரம் கிடைத்துள்ளது.  ஒப்புதல் அளித்துள்ளது.

நாட்டில் சமீபகாலமாக நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியானது பொருளாதாரத்தின் அனைத்து துறைகளையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதித்துள்ளதுடன், இதன் விளைவாகத் தங்கப் பொருட்களை அடமானம் வைப்பது வேகமாக அதிகரித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதனை கருத்தில் கொண்டு, உரிமம் பெற்ற வங்கிகளில் அடமான முன்பணம் பெற்ற குறைந்த வருமானம் பெறும் நபர்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.  

உரிமம் பெற்ற வங்கிகளில் 2024 ஜூன் 30, அன்று அல்லது அதற்கு முன்னர் தனிநபர் அடிப்படையில் வாடிக்கையாளர்கள் ரூ.100,000க்கு மிகாமல் அடமான முன்பணங்களுக்கு ஆண்டுக்கு அதிகபட்சமாக 10 சதவீதத்துக்கு உட்பட்டு,   வட்டி மானியத்தை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

பொருட்களின் விலைகள் அதிகரிக்கப் படும்போது சேவைகளின் கட்டணங்களும் கூடுகின்றன. இவையிரண்டின் தாக்கத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். இவ்வாறான நிலையில், பொருட்களின் விலைகள் குறைக்கப்படும்போது, பொருட்களின் விலைகள் குறைவதும் இல்லை. சேவைகளின் கட்டணங்கள் மாற்றப்படுவதும் இல்லை. இது, சாதாரண மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை செலுத்தும் காரணிகளாகும்.

அடமான முற்பணங்களுக்கான வட்டி மானியம் நல்லதொரு தீர்மானமாக இருந்தாலும், முற்பணத்தை திரட்டவேண்டுமாயின், செலவுகள் குறைவேண்டும். அரசாங்கத்தால் ஒருசில பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

எனினும், பெருமுதலைகள் முழுமையாக விழுங்கிவிடுகின்றன. இதனால், மானியத்தில் பயனேதும் இல்லையென்பதே எமது அவதானிப்பு. எனினும், மானியம் வரவேற்கத்தக்கது. 

24.07.2024


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X