2025 ஒக்டோபர் 22, புதன்கிழமை

தமிழக விஞ்ஞாபனங்கள் கவர்ந்திழுத்த இலங்கை

Editorial   / 2021 மார்ச் 16 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகத்தின் சட்ட மன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், கடுமையான போட்டி நிலவுமென எதிர்பார்க்கப்பட்டிருக்கும் மிகமுக்கியமான இரண்டு அணிகளான, அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (அ.தி.மு.க), திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க) ஆகியன தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டுள்ளன.

தி.மு.கவின் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டு வைத்திருக்கும் தேர்தல் விஞ்ஞாபனத்தில், இலங்கையில் புரையோடிப்போய் இருக்கும் தமிழர்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்கவேண்டுமெனவும் பொது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழக முதலமைச்சர் எட்டப்பாடி பழனிசாமி வெளியிட்டு வைத்த அ.தி.மு.க தேர்தல் விஞ்ஞாபனத்தில், இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை, முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில், குற்றவாளிகளாக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரின் விடுதலைக்கான நடவடிக்கை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தமிழக அரசியல் கட்சிகள், இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு வேண்டிய ஆயுதத்தை, அவ்வப்​போது கையிலெடுத்துத் தீட்டிப்பார்ப்பது வழக்கமானது. முன்னாள் முதலமைச்சர்களான மறைந்த மு.கருணாநிதி, செல்வி ஜெயலலிதா ஆகியோரும், இந்த ஆயுதத்தை நன்றாகவே பயன்படுத்திக்கொண்டனர்.

இலங்கையின் இறுதி யுத்தத்துக்கு எதிராக, தமிழகத்தில் கிளம்பிய எதிர்ப்பலைகள், அதனூடான அழுத்தங்கள் புதுடெல்லியின் காதுகளை ஓரளவுக்கேனும் அதிரச்செய்தன. எனினும், தமிழர்கள் கொத்துக்கொத்தாய் கொன்று குவிக்கப்படுவதை யாராலும் தடுத்து நிறுத்தமுடியவில்லை.

அதனால்தான், அந்த மண், மனித இரத்தத்தால் தோய்ந்திருக்கிறது. இன்னும், இனவிடுதலைக்கான கோரிக்கைகளையும் யுத்தத்துக்குப் பின்னரான மனித உரிமை மீறல்களையும் முன்வைத்து, காணாமல் போன தங்களுடைய உறவினர்களுக்காகவும் பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஐ.நாவின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான புதிய தீர்மானம் முன்வைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு ஆதரவு ​தேடி, புதுடெல்லியுடனான நட்புறவை இறுகப்பற்றிப் பிடித்துக் கொள்வதற்கு, இலங்கை அரசாங்கம் பல்வேறானா வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் நிலையிலேயே, தமிழக தேர்தலும் சூடுபிடித்துள்ளது.

அதில், தி.மு.கவின் தேர்தல் விஞ்ஞாபனம், ‘ஈழத்தமிழர் நல்வாழ்வு’  எனும் தலைப்பின் கீழ், சர்வதேச விசாரணை நடத்த இந்திய அரசாங்கம் வலியுறுத்த வேண்டும்; அரசியல் தீர்வு, பொது வாக்கெடுப்பு, இலங்கையிலிருந்து அகதிகளாக்கப்பட்டவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குதல் ஆகிய நான்கு விடயங்களைச் செயற்படுத்துவது தொடர்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் விஞ்ஞாபனங்களில் இவற்றையெல்லாம் உள்ளீர்ப்பது, வாக்கு வேட்டைக்கான அரசியல் சூட்சுமம் என்றே பலரும் அர்த்தப்படுத்துவர், ஆட்சிப்பீடம் ஏறியதன் பின்னர், ​தேர்தல் விஞ்ஞாபனத்தின் மிகமுக்கிய கூறுகளைக் கவனத்தில் எடுக்காது, இருப்புக்காக அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்திச் செல்லுதல், அரசியலில் ஒன்றும் புதிதல்ல.

ஆகையால், தமிழக ​தேர்தலின் வெற்றியில் இலங்கை தமிழரின் பிரச்சினைக்கான தீர்வு குறித்த கரிசனையும் ஓரளவுக்கேனும் தாக்கத்தை செலுத்தும். ஆகையால், வெற்றியீட்டியதன் பின்னரும் இதேயளவான அழுத்தங்களைக்  ​கொடுக்கவேண்டும் என்பதே, எமது பேரவாவாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .