2025 ஒக்டோபர் 21, செவ்வாய்க்கிழமை

நிர்வாணமான சட்டம்

Editorial   / 2022 பெப்ரவரி 05 , மு.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிர்வாணமான சட்டமும் ஒழுங்கும் விழிபிதுங்கி நிற்கும் மக்களும்

ஜனநாயக நாடொன்றில் சட்டமும் ஒழுங்கும் சீர்குலையுமாக இருக்குமாயின் அங்குதான், போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கும். அப்போது  சட்டம், ஒழுங்கைப்   பேணுவதற்காக முப்படையினரையும் களத்தில் இறக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஆட்சியாளர்களுக்கு ஏற்படுகின்றது.

எமது நாட்டைப் பொறுத்தவரையில், அவசரகாலச் சட்டம் அமலில் இல்லாத நிலையிலும், விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக,  பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் ஆயுதம் தாங்கிய  முப்படையினரும், ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தின் பிரகாரம் மாதாந்தம் அழைக்கப்படுகின்றனர்.

சட்டத்தையும் ஒழுங்கையும் பேணிப் பாதுகாக்கவேண்டியது பொலிஸாராகும்.   பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் முரண்பாடுகள், கைகலப்புகள், மோதல்கள் ஏற்படுவதுண்டு. அதன்போது அப்பாவிப் பொதுமக்கள் மரணமடைந்துள்ளனர். கடந்த கால வரலாற்றை சற்று திரும்பிப் பார்த்தால், சில கசப்பான சம்பவங்கள் கண்முன்னே வந்துசெல்லும்.

ஆனால், ​இரண்டு பொலிஸ் குழுக்களுக்கு இடையில், வறக்காபொலையில் கைகலப்பு இடம்பெற்றுள்ளது. இதை சமூக வலைத்தளங்கள் ‘கழுவிக்கழுவி’ ஊத்தின. அந்தக் கைகலப்பு, ‘மனிதனை நல்வழிப்படுத்தாமல், நாட்டை சரிசெய்ய முடியாது’ எனும் கூற்றை உறுதிப்படுத்திவிட்டது.

அதனைதான், ‘பொலிஸை சரி செய்யாமல், நாட்டை சரிசெய்யமுடியாது’ எனப் பலரும் கிண்டல் செய்துள்ளனர். சட்டம், ஒழுங்கை பொலிஸார் மறந்திருப்பதன் ஊடாக, பல்வேறான சமூக பிரச்சினைகள் ஏற்படும்.   

‘ஒரு பானை சோற்றுக்கு, ஒரு சோறு பதம்’. ஆனால், வறக்காபொல சம்பவத்தை அடிப்படையாக வைத்து, முழு பொலிஸ் திணைக்களத்தையும் தவறாகக் கணித்துவிடக்கூடாது. சீருடைக்கும் மதிப்பளித்து செயலாற்றுவோர்  ஆகக்கூடுதலாகவே இருக்கின்றனர். ஒருசிலர்தான் பொறுப்புகளை மறந்து, தான்தோன்றித்தனமாகச் செயற்படுகின்றனர்.

தங்களுடைய உயிர்களையும் துச்சமென நினைத்து, இராப் பகலாக கடமையாற்றுவோர் பலர் இருந்தனர்; இன்னும் இருக்கத்தான் செய்கின்றனர். அவ்வாறானவர்களின் சேவைகளை மனமுவந்து பாராட்டவேண்டும்.

இரண்டு திருமண வீடுகளுக்கு சிவில் உடையில் சென்றிருந்த இரண்டு பொலிஸ் குழு, மதுபோதையில் கைகலப்பில் ஈடுபட்டுள்ளது. அதனையும் பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமான 119 இன் ஊடாகவே தடுக்க முடிந்துள்ளது. 

வாக​னமொன்றை முந்தி​ச்செல்வதற்கு இடமளிக்காமையை அடுத்தே, மோதல் இடம்பெற்றுள்ளது. அப்படியாயின், போக்குவரத்து ஒழுங்கை மீறும் சாரதிகளுக்கும் பொதுமக்களுக்கும் இவ்வாறான பொலிஸார், எப்படி அறிவுரை கூறமுடியும்?

மதுபோதையில், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்துகொள்வது, சட்டத்தின் பிரகாரம் குற்றமாகும். ஆக, இவ்விரு குழுக்களில் இருந்த அதிகாரிகள், பிரதான நகரங்களில், மதுபோதையில் தள்ளாடும் பொதுமக்களுக்கு அறிவுரை கூறுவதற்கோ அல்லது கைதுசெய்து சட்டத்தின் முன்நிறுத்துவதற்கோ முடியுமா?  அவர்களிடத்தில் இருக்கும் யோக்கியம்தான் என்ன? இங்கு சட்டமும் ஒழுங்கும் நிர்வாணமாகிவிட, மக்கள் விழிபிதுங்கி நிற்பது மட்டுமே நிதர்சனமாகும். (04.02.2022)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .