Janu / 2025 டிசெம்பர் 17 , பி.ப. 02:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசாங்கம் உதவி வழங்குகிறது. அவற்றைப் பாதிக்கப்படாதவர்களும் பெற்றுக்கொள்ள முயல்வதால் பல்வேறான நெருக்கடிகளுக்குள் அரச நிர்வாகக் கட்டமைப்பு சிக்கிக் கொண்டுள்ளது.
‘டிட்வா’ பேரழிவு ஏற்பட்டுக் கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஆகின்றன. வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளைச் சுத்தம் செய்ய மக்களுக்கு அரசாங்கம் உறுதியளித்த ரூ.25,000 நிதியை இன்னும் ஏராளமான மக்கள் பெறவில்லை. எனினும், தங்களிடமிருந்த நிதியை வைத்து வெள்ளம் புகுந்த வீடுகளைச் சுத்தம் செய்து கொண்டுள்ளனர்.
பாரிய அழிவுகளுக்கு முகங்கொடுத்தவர்கள் இன்னும் முகாம்களிலேயே இருக்கின்றனர். வீடுகளை முழுமையாக இழந்தவர்கள், வீடுகளை நிர்மாணிப்பதற்கான நிதியுதவிக்காகக் காத்திருக்கவேண்டும். அதற்கு இன்னும் எத்தனை மாதங்கள் எடுக்குமென மிகச் சரியாக கூறமுடியாது.
வீடுகளைச் சுத்தம் செய்வதற்கான, பணத்தைப் பெறுவதற்குத் தேவையான படிவங்கள் இந்த நாட்களில் நிரப்பப்படுகின்றன. பல சந்தர்ப்பங்களில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிராம சேவகரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் தொலைபேசியில் பேசுவதில்லை. சில பிரதேச செயலாளர்களும் தொலைபேசி அழைப்புகளுக்குப் பதிலளிப்பதில்லை. சிலர் முகத்துக்கே ஏசிவிடுகின்றனர் என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன.
எனவே, ‘டிட்வா’ பேரழிவுக்குப் பின்னர் வழங்கப்படுவதாக கூறப்பட்ட நிவாரணங்கள் அனைத்தும் வாக்குறுதிகளுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அரசாங்கத்திடமிருந்து தங்களுக்கு ஆதரவில்லை என்றே மக்கள் உணருகின்றனர்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பேரிடருக்குப் பின்னர் நடத்திய மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டங்களின் போது, அதிகாரிகளிடம் பல கேள்விகளைக் கேட்டிருந்தார். அந்த கேள்விகளுக்கு ஒருசிலரிடம் மட்டுமே புள்ளிவிவரங்களுடன் தகவல்கள் இருந்தன. ஏனையோரிடம் சரியான தரவுகள் இல்லை.
இன்னும் சிலர் ஒருங்கிணைந்து வேலை செய்யவில்லை என்பதும் அந்த கூட்டங்களில் கலந்துரையாடப்பட்ட விடயங்களிலிருந்து அறியமுடிகின்றது. இரண்டொரு நாட்களுக்குள் முழுமையாக செப்பனிடப்படும் எனக் கூறப்பட்ட வீதிகள் பலவற்றின் வேலைகள் இன்னும் ஆரம்பிக்கப்படவே இல்லை.
இவ்வாறான நிலையில், நிவாரண விடங்களில் அரசியல் தலையீடுகள் நுழைந்து விளையாடுவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால், அரச ஊழியர்கள் பலரும் கடுப்பாக இருப்பதாக அறியமுடிகின்றது. அனுபவம் வாய்ந்த அரசு ஊழியர்கள், வெளிப்புற அரசியல் சிப்பாய்கள் தங்கள் வேலையில் தலையிடுவதை விரும்புவதில்லை என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றோம்.
வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளைச் சுத்தம் செய்ய மக்களுக்கு அரசாங்கம் உறுதியளித்த ரூ.25,000 நிதியை முதலில் முறையாக வழங்கவேண்டும். பாதிக்கப்படாதவர்கள் பலரும் விண்ணப்பம் செய்துள்ளதாக அறியமுடிகின்றது. உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே நிவாரணங்கள் வழங்கப்படவேண்டும் அதற்குரிய பொறிமுறையை தயார்செய்வதே காலத்தின் கட்டாயமாகும்.
12.12.2025
1 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
9 hours ago